ராமனே செய்தால்!
இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ என்ற எண்ணம் அவள் மனதில் உதயமாயிற்று. அதனால் மாமியாரைத் தனது கணவரின் தம்பி வீட்டுக்குத் துரத்திவிட்டால் நல்லது என்று நினைத்தாள். எடுத்ததற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்துத் திட்ட ஆரம்பித்தாள். சிவகாமியம்மாள் வெள்ளை உள்ளம் கொண்டவர். மருமகள் ஏன் திடீரென கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் மகனிடம் சொல்லி இதைப் பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை.

ராஜியின் அப்பா சிவனும், அம்மா பங்கஜவல்லியும் இந்தியாவிலிருந்து வந்துவிட்டார்கள். ராஜியின் பேச்சும் ஏச்சும் அதிகமாயிற்று. கணவனுக்கு முன்னால் மாமியாரிடம் நல்லவள் போல ராஜி நடந்து கொண்டாள்.

ராஜியின் தகப்பனாருக்குத் தன் மகள் மாமியாரைப் பேசுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. இப்படிப் பேசுவது தவறு என்று மகளைக் கண்டித்தார். இத்தகைய மாமியாரும் கணவனும் வாய்த்தது நீ முன்பிறவியில் செய்த புண்ணியம் என்று முடிந்த அளவு அறிவுரை கூறினார்.

ஆனால் பலன் இல்லை. காரணம் பங்கஜவல்லி பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

போகப்போக சிவகாமியம்மாளுக்கு நிலை புரிந்தது. இவ்வளவுக்கும் காரணம் சம்பந்தியம்மாள்தான் என்பதை நன்கு புரிந்து கொண்டாள். இருந்த போதிலும் சிவகாமியம்மாள் இதைப் பெரிதுபடுத்தவோ தன் மகனிடம் சொல்லவோ விரும்பவில்லை.

ஒருநாள் பங்கஜவல்லி சிவகாமியம்மாளிடம் ஒன்றும் தெரியாதது போல் கேட்டார். 'சம்பந்தி, ராஜி இந்த அளவுக்குப் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் நீங்கள் சொல்லியிருந்தீங்கன்னா நான் அவளைக் கண்டித்திருப்பேனே. ஏன் என்னிடம் நீங்க சொல்லவில்லை?' என்றாள்.

அதற்கு சிவகாமியம்மாள் சிரித்துக் கொண்டே சொன்னார்.

'இராமாயணத்தில் ஒரு கதை உண்டு. ராமர் லட்சுமணருடன் சீதையைத் தேடிக் காட்டில் அலைகிறார். ஒரு சமயம் அவருக்கு மிகுந்த தாகம் உண்டாயிற்று. சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கும் தண்ணீர் இல்லை. உடனே ஓர் அம்பை எடுத்துத் தரையில் எய்தார். தரையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. ராமர் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொண்டார். பின் தரையிலிருந்து அம்பைப் பிடுங்கினார். அம்பைப் பிடுங்கிய இடத்திலிருந்து 'ராமா!' என்ற அலறல் கேட்டது. ராமர் உடனே அந்த இடத்தைப் பார்த்தார். அங்கு ஒரு தேரை இருந்தது. தேரையின் மீதுதான் அவர் அம்பை எய்திருந்தார்! தேரை சாகும் நிலையில் இருந்தது. ராமரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது.

'ராமர் தேரையிடம் 'தேரையே, நான் அம்பை எய்வதற்கு முன்பே நீ ராமா என்று கூப்பிட்டிருந்தால் இந்தப் பெரிய தவறைச் செய்திருக்க மாட்டேனே' என்றார்.

'அதற்குத் தேரை 'ராமா, வேறு யாராவது இந்தத் தவறைச் செய்தால் என்னைக் காப்பாற்ற 'ராமா' என்று உன்னைக் கூப்பிட்டிருப்பேன். நீயே அதைச் செய்தால் நான் யாரைக் கூப்பிட முடியும்?' என்று சொன்னதும் ராமர் நாணித் தலைகுனிந்து தேரையிடம் மன்னிப்புக் கேட்டார்.'

சிவகாமியம்மாள் சொல்லி முடித்தபோது சம்பந்தியம்மாளின் கண்களில் நீர் துளித்திருந்தது.

கூத்தரசன்

© TamilOnline.com