கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
ஆகஸ்ட் 30, 2008 அன்று சான்ஹோசே CET அரங்கில் பாலாஜி கிரிதரனின் மிருதங்க அரங்கேற்றம் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் நடந்த கச்சேரியில் கர்நாடிகா சகோதரர்கள் சசிகிரண், கணேஷ் பாடினார்கள். ஹெம்மிகெ ஸ்ரீவத்ஸன் வயலின் வாசித்தார். கச்சேரி விரிபோணி வர்ணத்துடன் (பைரவி - அட தாளம்) துவங்கியது. கர்நாடிகா சகோதரர்கள் மிகவும் அழகாக, நிதானமாகப் பாடினார்கள். பக்கவாத்தியமாக பாலாஜியின் மிருதங்கம் வெகு சிறப்பாக இருந்தது.

அடுத்து வந்த ஸ்வாதித் திருநாளின் 'தேவதேவ கலயாமிதே' (மாயாமாளவ கௌளை, ரூபகம்) மற்றும் தீக்ஷிதரின் 'திவாகர தனுஜம்' (யதுகுல காம்போதி, ஆதி) மிக நன்றாக இருந்தது. பிறகு வந்தது சாமா சாஸ்திரியின் 'பார்வதி நின்னுனெ' (கல்கத ராகத்தில், ஆதி திஸ்ர கதி) கீர்த்தனை. இந்த ராகத்தில் வேறு எந்த சாகித்தியமும் இல்லையாம். அபூர்வ ராகமானாலும் ரசிக்கத் தக்கதாக அமைந்திருந்தது. தொடர்ந்து தண்டபாணி தேசிகரின் ‘என்னை நீ மறவாதே அங்கயற்கண்ணி' என்ற அமிர்தவர்ஷிணி கீர்த்தனை வெகு சிறப்பு. சுத்தமான ராக ஆலாபனையுடனும், பக்க வாத்தியமாக வயலின், மிருதங்கத்துடனும் அற்புதமாக இருந்தது. பாடகர்கள் ஸ்வரப் பிரஸ்தாரத்தில் மேல் பஞ்சமத்தைத் தொட்டு நிறுத்தியது நெஞ்சைத் தொட்டது போல் இருந்தது. தொடர்ந்து பாலாஜியின் ‘தனி' அபாரம். திஸ்ர நடை - கண்ட நடை வாசித்ததும் சபையினர் பாராட்டிக் கரகோஷம் செய்தனர்.

பூச்சியின் 'சரகுண பாலிம்ப' (கேதார கௌளை, ஆதி), தியாகய்யரின் 'எவரிகை அவதாரமே' (தேவ மனோஹரி, மிஸ்ரசாபு) கீர்த்தனைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ ரஞ்சனியில் ராகம் தானம் பல்லவி. 'ஸொகஸூகா ம்ருதங்க தாளமு' ஸ்ரீரஞ்சனி ராக பரித பல்லவி, ஆதி தாளம், இரண்டு களைச் சௌக்கத்தில், இரண்டாவது தட்டில் ஆரம்பம். தானம், பத-லய விந்நியாஸம் மிகவும் நன்றாக இருந்தது. பின்னர் வந்த ராகமாலிகை ஸ்வரம், அதை அடுத்து வந்த பாலாஜியின் இரண்டாவது 'தனி' ரசிகர்களைக் கவர்ந்தது. பல்லவியை அப்படியே வாசித்துக் காட்டிய பாலாஜி, தனி ஆவர்த்தனத்தில் மிஸ்ர நடை. கைதேர்ந்த மிருதங்க வித்வான் போல் வாசித்தார். கடைசி கோர்வை அசல் ராமபத்ரன் வாசிப்பை நினைவூட்டியது.

அன்றைய நிகழ்ச்சிக்கு வயலின் மேதை டி.என். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு மேடையேறிப் பேசினார். கர்நாடிகா சகோதரர்கள் பாடியதை வெகுவாகப் புகழ்ந்த அவர், ஸ்ரீவத்சனின் வயலின் வாசிப்பைத் தாம் மிகவும் ரசித்ததுடன், அன்று அங்கு தாமே வயலின் வாசித்தாற் போல் இருந்ததாகக் கூறியது ஸ்ரீவத்சனின் திறமையைக் காட்டியது. பாலாஜியின் மிருதங்க வாசிப்பைப் புகழ்ந்த கிருஷ்ணன், பாலாஜியின் குரு ஸ்ரீ ரமேஷ் ஸ்ரீனிவாஸனையும் வெகுவாகப் பாராட்டினார். ஸ்ரீ ரமேஷ் ஸ்ரீனிவாஸன், ஸ்ரீராமபத்ரனிடம் மிருதங்கம் பயின்று, சான் ஹோசேவில் 'சர்வலகு பெர்க்குஷன் ஆர்ட் சென்டர்' என்னும் மிருதங்கப் பள்ளி ஒன்றை நிறுவி மிருதங்கம் கற்பித்து வருகின்றார். பாலாஜியின் அன்றைய அற்புத வாசிப்புக்கு இவரது முயற்சியும், உழைப்பும் மிக முக்கிய காரணங்கள்.

கச்சேரியில் பின்னர் வந்த துக்கடாக்களில் ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' மனதைத் தொட்டது. சுருட்டியில் 'வங்கக்கடல் கடைந்த' திருப்பாவை இசைக்கச்சேரிக்கு நிறைவைத் தந்தது.

ஆர். சீனிவாசன்

© TamilOnline.com