ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 30, 2008 அன்று, சாரடோகா, மெஃகாபி நிகழ்கலை அரங்கில் ஸ்ரீக்ருபா நாட்டியப்பள்ளி மாணவி ஸ்வேதா ஸ்ரீதரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

‘வந்தன கணராயா' என்னும் இறைவணக்கப் பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமிர்தவர்ஷினி ராகத்தில் புஷ்பாஞ்சலி செலுத்த அவைக்கு வந்த ஸ்வேதா, சபைக் கூச்சம் தெளிந்து, அபார தன்னம்பிக்கையுடன் ஆட அரம்பித்து, குரு ஸ்லோகத்திலேயே களை கட்ட ஆரம்பித்து, 'யாகுந்தேந்து' என்னும் சரஸ்வதி துதியை வீணையைக் கையிலேந்தி, வெண்தாமரை அமர்ந்த தேவியாய் அபிநயித்த விதம் அருமை. ‘ஸரஸ்வதி தயை நிதி'க்கு அவர் காட்டிய முகபாவமும், கடைக்கண் அழகும், ‘நின் அருள் ஒளி இல்லையானால்' என்னும் போது கெஞ்சும் முகபாவமும் அருமை.

அடுத்து வலஜி ராக ஜதி ஸ்வரத்திற்கு வெகு லாகவமாக ஆடி சபையினரின் கரகோஷம் பெற்றார். தொடர்ந்து ரேவதி ராக வர்ணத்தில் அமைந்த தேவி மீதான உருக்கமான பாடலுக்கு, கோபம், வீரம் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஆடியது அருமை. இடைவேளையைத் தொடர்ந்து வந்த 'ஆடிக் கொண்டார்' பாடலில் தில்லை நடராஜரையே கண்முன் கொண்டு வந்தது பிரமாதம். அடுத்து வந்த ‘நந்த கோபாலா' பாடலில் முதலில் ‘ஆனந்தாம்ருத' என்னும் ஸ்லோகம், ஆபேரி ராக வயலின் இசைப் பின்னணியில் கண்ணனின் குறும்பு, சேஷ்டைகள், ஆனந்த லீலைகள் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்தது வெகு சிறப்பு.

தொடர்ந்து ‘ராம் ஜன்மலா' என்னும் மராட்டி மொழிப் பாடலில் ராமர் பிறப்பினால் ஏற்பட்ட சந்தோஷத்தை சைகை மூலம் விளக்கி, பின் மலர் தூவி, கௌசல்யாவின் மகிழ்ச்சி, ஆதிசேடனின் ஆனந்தம், மிருகம், பறவைகளின் பரவசம், துந்துபி நாதம் முழங்க ராஜ்யத்தில் ஏற்பட மகிழ்ச்சி என யாவற்றையும் சிறப்புற அபிநயித்தது கண்கொள்ளாக் காட்சி.

இறுதியில் இடம் பெற்ற தில்லானாவின் தாள வேகத்திற்கேற்ப விறுவிறுப்புடன் ஆடி கரகோஷம் பெற்றார். சிறந்த நட்டுவாங்கம், பக்கவாத்தியமாக வயலின், மிருதங்கம் என யாவும் மிகச் சிறப்பாக இருந்தது.

பதினோரு வயதுச் சிறுமியான ஸ்வேதா பாவம், ராகம், தானம் என அநாயசமாக ஆடிச் சிறப்பு பெற்றதற்கு குரு விஷால் ரமணியின் அயராத உழைப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

ஸ்வேதா, குரு விஷால் ரமணியின் நூற்றி ஓராவது அரங்கேற்ற மாணவி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com