செப்டம்பர் 14 அன்று டெட்ராயிட் பாலாஜி கோவில் அமைப்பினர் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை ஹென்றி ஃபோர்டு அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடினர். ராமானுஜர் அவர்கள் வடிவமைத்த ஆகம சாஸ்திரப்படி இக் கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம், இக்கோயில் அமைந்ததன் காரணமே, ஆகம சாஸ்திரப்படி வைணவ சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து திருமாலுக்குத் திருச்சேவை செய்யத்தான்.
கனடாவைச் சேர்ந்த சுப்ரமண்யம் சுந்தர் அவர்களின் நாதஸ்வரத்துடன் காலை 9.00 மணிக்கு வைபவம் தொடங்கியது. 108 தம்பதிகளுக்குக் கல்யாண உற்சவத்தை ஏற்றுநடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘லக்ஷ்மி' என்றால் தயை மற்றும் சௌபாக்கியம். பகவான் ஸ்ரீ விஷ்ணு எவ்வாறு தாயார் லக்ஷ்மியைத் தேடி மணமுடித்தாரோ அவ்வாறே மானிடர்களாகிய நாமும் நம் வாழ்வில் தயை மற்றும் சௌபாக்கியத்தை தேடிச் செல்வது அவசியம். திருக்கல்யாணத்தின் உட்பொருள் இதுதான்.
திருமால் மற்றும் தாயாரை பல்லக்கில் ஏற்றி உலா வந்தனர் பக்தர்கள். முதலில் வாக்தானம் - அதாவது, மாப்பிள்ளை அப் பெண்ணை மணமுடிக்கத் தாம் சம்மதிப்பதாகக் கூறுவது. அடுத்துக் கன்யா தானம் - மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க, பெண் வீட்டார் இதற்குச் சம்மதித்தல். மூன்றாவது சடங்கு வரப் பிரேக்ஷணம் - இதில் மாப்பிள்ளை, பெண் ஆகியவர்களின் வம்சாவளியை வர்ணிப்பர். இறுதியாக, பாணிக்கிரஹணம் - பெண்ணின் கரம் பிடித்து, அவளை இறுதிவரை பாதுக்காப்பதாக மாப்பிள்ளை அளிக்கும் உறுதி. கடைசியில் சப்தபதியில் மணப்பெண் ஏழு அடிகள் எடுத்து வைத்து, அதில் ஒவ்வோர் அடிக்கும் சங்கல்பம் செய்ததும், திருமணம் சுபமுறும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவைக் கண்டு களித்தனர்.
27 வகைச் சீர்வரிசைகளை பக்தர்கள் கைப்படச் செய்து சமர்ப்பித்தனர். நாதஸ்வரம் ஒலிக்க, வேத கோஷங்கள் முழங்க, இனிய தமிழில் திவ்யப் பிரபந்தமும், சுந்தரத் தெலுங்கினில் அன்னமாசர்யா கீர்த்தனைகளும் இசைக்கப்பட, திருமணம் நடந்தேறியது.
மதியம் 2.00 மணிக்கு இசைவிழா நடந்தது. முதலில் குழந்தைகள் ஸ்லோக பாராயணம் செய்தனர். அடுத்து, ஸ்ரீகாந்த் மற்றும் பவானி ஸ்ரீகாந்த் தம்பதியினரின் கச்சேரி நடைபெற்றது. இறுதியாக ‘ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்' நடத்தி வரும் திருமதி சுதா சந்திரசேகரனின் மாணவர்கள் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கினர். அடுத்து நூரணி குடும்பத்தினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4.20 மணிக்குத் தொடங்கி ஆறு மணிக்கு முடிந்த சத்யநாராயண பூஜையில் 250 குடும்பத்தினர் பங்கேற்க வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் அன்பர்களால் தயாரிக்கப்பட்ட சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது.
விழாவிற்குத் தலைமை தாங்கிய பூஜ்யஸ்ரீ திவ்ய சேதனாநந்தாஜி ஆங்கிலத்தில் மிக அழகாக விளக்க உரையாற்றினார்.
இனமொழி பேதம் பாராமல் பலர் விழாவின் பல்வேறு அம்சங்களிலும் தாமே முன்வந்து அதன் வெற்றிக்கு உழைத்தனர்.
காந்தி சுந்தர் |