சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
செப்டம்பர் 20, 2008 அன்று சிகாகோ தியாகராஜ உற்சவக் குழு கர்நாடக சங்கீத இசைப்போட்டியை நடத்தியது. போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. முதற்பரிசு $250, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. அமெரிக்காவாழ் மாணவ, மாணவியர் மட்டுமே கலந்து கொள்ளத் தகுதிபெற்ற இப்ப்போட்டியில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை, லய வாத்யங்கள் என ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள். ஒரு பிரிவில் இருவர் மட்டுமே கலந்து கொண்டால் அதிகபட்சம் ஒரு பரிசு மட்டுமே என்பது போட்டி விதி.

இவ்வாண்டுப் போட்டியில் மொத்தம் 91 மாணவ, மாணவிகள் 3 தரவரிசைகளில் கலந்து கொண்டனர். தமது தரவரிசைக்கான தியாகராஜ கிருதியைத் தேர்ந்தெடுத்து அவற்றில் ஒன்றை மட்டும் சி.டி.யில் பதிவு செய்தோ, மின்னஞ்சல் மூலமாகவோ தன்னைப் பற்றிய விவரம் குறிப்பிடப்படாமல் அனுப்பி வைத்தனர். அவை ஒரே MP3 கோப்பாக ஆக்கப்பட்டு, சென்னையில் வசிக்கும் நடுவர் சீதா நாராயணன் (ரஞ்சனி-காயத்ரியின் முக்கிய இசையாசிரியர்களுள் ஒருவர்) அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்த 60 மாணவர்களுக்கு அதே தரவரிசைப்படி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

நேர்முகப் போட்டிக்கு முதல் 33 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கு நடுவர்களாக டில்லி சாய்ராம், எம்.என். பாஸ்கர் ஆகியோர் இருந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

போட்டியில் இலினாய், ஒஹையோ, கலிபோர்னியா, ஜார்ஜியா, மிச்சிகன், மின்னஸோடா, மேரிலாண்ட், டெக்ஸஸ், வர்ஜீனியா, வட கரோலினா, நியூ ஜெர்ஸி என அமெரிக்காவின் பல பகுதிகளி லிருந்தும் திறமை வாய்ந்த மாணவர்கள் கலந்து கொண்டது, சிகாகோ ரசிகர்களுக்குப் பெரும் வியப்பைத் தந்தது.

அனாஹா ரகுநாதனின் (கலிபோர்னியா) 'நாதலோலுடை' (கல்யாண வசந்தம்), ஸ்ரீகாந்த சிவகுமாரின் (மிச்சிகன்) 'ப்ரோவ பாரமா' (பஹுதாரி), கல்யாணி பிள்ளையின் (வர்ஜீனியா) 'நாத ஸூதாரஸம்' (ஆரபி), ஆகியன வாய்ப்பாட்டுப் போட்டியின் தர வரிசை 1ல் முதல் மூன்று பரிசுகளைத் தட்டிச் சென்றன.

தரவரிசை 1 வாத்தியப்போட்டியில் சிறுமி ஸாஹித்யா விஸ்வநாத் (வர்ஜீனியா) முதல் பரிசை தட்டிச் சென்றாள். தரவரிசை 2 வாய்ப்பாட்டுப் போட்டியில் ப்ரியதர்சினி ராதா கிருஷ்ணன் (ஜார்ஜியா), ஸ்ரீ க்ருஷ்ண சிவகுமார் (மிச்சிகன்), ஜனனி ஐயர் (இலினாய்) ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.

தரவரிசை 2 வாத்ய இசைப் போட்டியில் சுஷ்மிதா ரவிகுமார் (ஒஹையோ) வயலின், ஸந்தீப் பரத்வாஜ் (இலினாய்) வயலின், ஸ்ரீ நித்யா பரிதி (இலினாய்) வீணை முதல் மூன்று பரிசுகளைத் தட்டிச் சென்றனர். இவர்கள் வாசித்த ஹரிகாம்போதி, கமாஸ், நாட்டை, தோடி முதலிய ராக க்ருதிகள் அற்புதமாக அமைந்திருந்தன.

தரவரிசை 3 வாய்ப்பாட்டுப் போட்டி அற்புதமாக இருந்தது. ராகம், நிரவல், கல்பனா ஸ்வரம் என்று பல வகைகளிலும் கேள்விக் கணைகள் வந்தாலும் சளைக்காமல் தைரியமாகவும், நிதானமாகவும் பாடி வித்யா ராகவன் (இலினாய்), மானஸா சுரேஷ் (கலிபோர்னியா) ஆகியோர் முதல் இரண்டு இடங்களைத் தட்டிச் சென்றனர்.

தரவரிசை 3 வாத்ய இசையில் காம்போதி, சங்கராபரணம் இவற்றை வயலினில் அற்புதமான நிரவலாகத் தந்த கீர்த்தனா சங்கர் (மிச்சிகன்) முதல் பரிசையும் ரசிகர்களது பாராட்டையும் பெற்றார்.

அன்று மாலை நடந்த ரஞ்சனி-காயத்ரியின் நாட்டைக் குறிஞ்சியில் ராகம் தானம், பல்லவி, மறுநாள் நடந்த மஹாராஜபுரம் ராமச்சந்திரனின் (ஆரபி ஆலாபனை, த்ஸாலகல்ல), மானமுலேதா (ஹமீர் கல்யாணி) இரண்டும் வசீகரத்துடன் சிறப்பாக இருந்தன.

அன்று இரவு நடந்த நாகராஜ்-மஞ்சு நாத்தின் வயலின் கச்சேரியில் அம்ருத வர்ஷிணி, ஸ்யாமா சாஸ்திரியின் 'அம்ப காமாக்ஷி' - ஸ்வரஜதி (பைரவி), ஆரபி -மோஹனம் இணைந்த ராகம், தானம், பல்லவி, மன்னார்குடி ஈஸ்வரன்-ஸ்ரீ முஷ்ணம் ராஜாராமின் மிருதங்கம் என அனைத்தும் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. சிகாகோ H.T.G.C. கோயிலின் ஒத்துழைப்பும், உதவியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

பேரா. T.E.S. ராகவன்

© TamilOnline.com