ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
செப்டம்பர் 21, 2008 அன்று ஸ்ரீக்ருபா நாட்டியக் குழுமத்தின் ராமாயண நாட்டிய நாடகம் சாரடோகாவிலுள்ள மெகஃபி அரங்கத்தில் நடந்தேறியது. ஏறக்குறைய 5 மணி நேரம் சிறிதும் தொய்வில்லாமல் நடந்த இந்த மகத்தான காவிய நாடகத்தில் குரு விஷால் ரமணி அவர்களுடன் 150 மாணவர்கள் பங்கேற்றனர். அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளும் விருத்தப் பாக்களும் கண்ணிகளும் இதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய மிக்க கண்ணியமான இசையில் இவை மேலும் மிளிர்ந்தன.

தாடகை வதம், பந்தாட்டம், ஜனகன் சபையில் ராமன் வில்லொடித்தல், கைகேயி வரம் கேட்டல், ஜடாயு-ராவண யுத்தம், ராமன் அயோத்திக்குத் தேரேறிச் செல்லுதல், பட்டாபிஷேகம் ஆகிய காட்சிகள் மிகுந்த கற்பனை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. சூத்திரதாரியாக குரு விஷால் ரமணியே பங்கேற்றார். வால்மீகி ராமாயணம் எழுதக் காரணமாக அமைந்த நிகழ்வுடன் நாடகம் தொடங்கியது மிகவும் நன்று. பல்வேறு கால கட்டங்களில் பல மொழிகளில் ராமகாதை எவ்வாறு பாடப்பட்டது என்பதை நாட்டிய வடிவில் வழங்கியது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.

அஷோக் சுப்பிரமணியம் (இசையமைப்பு), முரளி பார்த்தசாரதி (குரலிசை), தனம்ஜயன் (மிருதங்கம்), பாலகிருஷ்ணன் (நட்டுவாங்கம்), வீரமணி (வயலின்) ஆகியோர் இந்த பிரம்மாண்டமான படைப்பை மகோன்னதமாக்கினர் என்றால் அது மிகையல்ல.



© TamilOnline.com