செப்டம்பர் 27, 2008 அன்று முப்பதுக்கும் மேற்பட்ட இளைய கலைஞர்களும், பன்னிரண்டு இசை வல்லுநர்களும் கலந்து கொண்ட இந்திய இசை விழா, நியூயார்க்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையான பகுதிகளைக் கொண்ட இந்திய இசை விழா, இந்த ஆண்டு சாஸ்திரீய இசை சங்கமம் (Classical Jam) நிகழ்ச்சியை அளித்தது. பாட விருப்பம் உள்ளவர்கள், விழாவிற்கு வந்திருந்த மிருதங்கம், வயலின் வாசிப்பவர்களுடன் இணைந்து பாட வாய்ப்பளித்த இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. திவ்யா ஷிபு, கோகுல் ஐயர், யஷஸ்வினி, ஜெயா, கார்மென், சிரிஷா, கல்யாண் மற்றும் பலர் இசைச் சங்கமத்தில் பாடினார்கள்.
இளைய கலைஞர்களின் மேடை நிகழ்ச்சியில் ஷ்ரீநாத் தன் பிஞ்சு விரல்களால் அருமையாக மிருதங்கம் வாசித்து கைதட்டல் பெற்றார். ஸம்யுக்தா சிவராஜ் மற்றும் அனந்த் ராவ், புல்லாங்குழல் ரசிகா சந்திரசேகர், சிதார் அர்பன் நியோகி மற்றும் கேட்டி செய்டி அளித்த இசை மிகவும் இனிமையாக இருந்தது. ராகசித்ரா கலை நிலையத்தின் இயக்குனர் நிவேதிதா சிவராஜ் கலைஞர்களுக்குக் கேடயமும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
இந்திய இசை விழாவின் மாலை நிகழ்ச்சிகளில், மூன்று அருமையான இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. நியூஜெர்ஸி கர்நாடக சங்கீத வித்வான் திருமதி ராஜேஸ்வரி சதீஷ், வயலின் வித்தகர் ராதிகா மணி மற்றும் மிருதங்க வித்வான் சுரேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் பல ஜனரஞ்சகமான கீர்த்தனைகளைப் பாடினர். நிவேதிதா சிவராஜ் 'வீணையில் வானவில்' என்ற கச்சேரியை அளித்தார். பாலஸ்கந்தன் மிருதங்கம், பாலகணேஷ் கடம் வாசிக்க, ஆப்பிரிக்கத் தாள வாத்தியக் கலைஞர் ரான் மாக்பீ ஆப்பிரிக்க ஜெம்பே (Djembe) மற்றும் பல இசைக்கருவிளை வாசித்தார். இந்திய இசை விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக, பாலஸ்கந்தன் மற்றும் அவருடைய குழுவினர் நடத்திய தாள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. பாலஸ் கந்தன் மற்றும் ட்ரீனா பாசு (Trina Basu) வயலின் வாசிக்க, பாலகணேஷ் கடமும், ஜான் சிங்கர் மிருதங்கமும், ட்ரிப் டட்லி தபேலாவும் வாசித்தனர். பீனா விஜு கொன்னக்கோல் இசைத்தார்.
மேலும் விவரங்கள் அறிய: www.ragachitra.org |