கப்பலோட்டிய தமிழரின் வாரிசுகள் தெருவோரத்தில்
ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்டத் தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. வ.உ.சியின் மூத்த மகன் ஆறுமுகத்தின் மகள் கமலாம்பாள். அவர் கணவர் ஞானவேலு. இவர்களது வாரிசுகள் தனலெட்சுமி, சங்கரன், ஆறுமுகம், சோமசுந்தரம் ஆகியோர் உறவினர்களால் கைவிடப்பட்டு, சொத்துக்களையும் இழந்து நடைபாதியில் வாழ்கிறார்கள்.

உறவுகளால் கைவிடப்பட்ட பின் கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தினர். வெட்டவெளியில்தான் உணவு, படுக்கை எல்லாம். காபி, வடையே காலை உணவாகவும், தெருவோரத் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங் கூழே பகலுணவு என்றும் காலத்தைக் கழித்திருக்கின்றனர். அரசிடம் உதவி கோரியும் கிடைக்காததால் விரக்தியுடன் காலத்தைக் கழித்து வந்த இவர்களைப் பற்றி, பத்திரிகைகளில் செய்தி வர அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வந்துள்ளன.

'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' என்றார் பாரதியார். இது போன்று இன்னமும் அவல நிலையில் வாழ்ந்துவரும் தியாகிகளின் வாரிசுகள் எவ்வளவு பேரோ? ஆதரவின்றி உயிரிழந்தவர்கள் எத்தனை எத்தனையோ? அரசியல் வியாபாரிகள் மேலும் மேலும் ஊழலில் பணம் குவிப்பதும் அப்பாவிகள் அன்றாடம் புறக்கணிப்படுவதும் என்று மாறும்?

அரவிந்த்

© TamilOnline.com