சர்மாவின் வீர மரணம்
டெல்லி சிறப்புக் காவல்படை அதிகாரி மோகன்சந்த் சர்மா. துணிச்சலும் துடிப்பும் மிகுந்த இளம் அதிகாரி. இதுவரை 35 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். 80 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார். ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் உள்பட நூற்றுக்கணக்கான விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றிருந்த சர்மா, கடமை வீரர். 2003ம் ஆண்டு நடந்த பாரளுமன்ற வளாகத் தாக்குதலின்போது உள்ளே இருந்த பல தலைவர்களின் உயிரைக் காப்பாற்றியதில் பெரும்பங்கு வகித்தவர். டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பற்றிய விசாரணை அதிகாரியாக இருந்தவர்.

சர்மாவுக்கு இரண்டு குழந்தைகள். 8ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவனை கவனித்து கொள்வதற்காக விடுப்புக் கோரியிருந்தார் சர்மா. ஆனால் டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக அவருக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. மகன்மீது கொண்ட பேரன்பால் வீட்டுக்குக் கூடச் செல்லாமல், மருத்துவமனைக்கும், அலுவலகத்துக்குமாக அலைந்து கொண்டிருந்த சர்மாவுக்கு, ஜாமியா நகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் வந்து சேர்ந்தது. தகவல் வந்த நாள் செப்டம்பர் 19, 2008. உடனடியாகப் புறப்பட்டார். வழக்கமாக குண்டு துளைக்காத சட்டையை அணியும் சர்மாவுக்கு, அன்று மருத்துவமனையிலிருந்து நேராகச் சம்பவ இடத்திற்குச் சென்றதால் அதனை அணிந்து கொள்ள இயலவில்லை.

தீவிரவாதிகளுடன் நடந்த கடும் சண்டையில் சர்மாவின் வயிறு, கால் மற்றும் கையில் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அத்துடன் போராடி இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினார். ஆனாலும் குண்டடிபட்டதால் மயக்கமுற்ற சர்மா, உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி அன்று மாலையே பரிதாபமாக உயிரிழந்தார். அன்புத் தந்தை தன்னைக் காண மீண்டும் மருத்துவமனைக்கு வருவார் என மகன் ஆவலோடு காத்திருக்க, அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.

கடமை வீரர் அதிகாரி மோகன் சந்த் சர்மாவைப் போன்று, இந்தியாவின் பாதுகாப்புக்காக இன்னும் எத்தனை வீரர்களை பலி கொடுக்கப் போகிறோம்!

அரவிந்த்

© TamilOnline.com