டாக்டர் ரவி பாலுவின் சென்னை காபி கடை
பிட்ஸ்பர்கில் இருக்கும் 'சென்னை காபி கடை'யில் என்ன விசேஷம் தெரியுமா? அங்கே பாய்லர் உண்டு, கல்லாப் பெட்டி உண்டு, பத்திரிகைப் போஸ்டர்கள் உண்டு, ஆனால் காபிதான் கிடைக்காது! ஏனென்றால் இது ஒரு செட்டப். அங்கிருக்கும் ரவி பாலு டெமக்ராடிக் கட்சிப் பிரசாரத்துக்காகச் செய்திருக்கும் செட்டிங்.

டாக்டர் ரவி பாலு, பிட்ஸ்பர்க்கில் அழகுப் பல்மருத்துவத் (காஸ்மெடிக் டென்டிஸ்ட்ரி) துறை மருத்துவர். இவருக்கு ஆறு வயது இருக்கும்போது இவரது பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். ரவியை அமெரிக்காவில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை இந்தியர் என்று சொல்லலாம்.

பிட்ஸ்பர்க் தொகுதியில் டெமக்ராடிக் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார் ரவி. அமெரிக்க வேட்பாளர்களை ஆதரித்து இந்தியர் ஒருவர் முழு ஈடுபாட்டுடன் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது இதில் ஒரு சிறப்பு. மற்றொன்று, தமது தொகுதி காங்கிரஸ்மேன் ‘ஜேஸன் ஆல்ட்மையர்' மற்றும் செனடர் ‘பாப் கேஸி' ஆகியோரை ஆதரித்து, பொதுமக்களையும் அழைத்து, கூட்டம் ஒன்றையும் கூட்டியது.

அதற்காகத்தான் அவர் தனது வீட்டின் பேஸ்மெண்டில் மேலே கூறிய 'சென்னை காபி கடை'யை (தமிழில் பெயர்ப் பலகையோடு) ஓலைக் குடிசையில் உண்டாக்கியுள்ளார்.

'இந்தியர்களாகிய நாம் அமெரிக்காவில் வசிக்கிறோம். நமது தேவைகளுக்கு வாய்க்கால் தேடுகிறோம். இமிக்ரேஷன் போன்ற இதர பிரச்சனைகளுக்கு செனடர் மற்றும் காங்கிரஸ்மேனிடம் சிலசமயம் உதவி கேட்கிறோம். நாம் ஏன் இன்னும் ஈடுபாட்டுடன் இவர்களுக்கு உதவ முன்வரக் கூடாது? நாம் அவர்களுக்கு உதவ முன்வந்தால் அவர்களும் நமக்கு அதிகம் உதவுவார்கள். யூதர்களைப் போல நாமும் முன்வந்து நமக்குப் பிடித்த கட்சி/வேட்பாளருக்கு தேர்தல் சமயத்தில் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம். நிதி திரட்ட உதவலாம். ஃபோன் பேங்க் அமைத்துத் தகவல் பராமரிப்பில் உதவலாம்' என்று ரவி சொல்வதில் நியாயம் இருக்கிறது.

இந்த உதவியை அவர்கள் எவ்வளவு தூரம் வரவேற்கிறார்கள் என்று கேட்டதற்கு ரவியின் பதில் "அவர்கள் ஆவலுடன் வரவேற்று ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நான் முதலில் இவ்விருவருக்கும் பிரசாரம் செய்தேன். அது முடிந்ததும் அவர்கள் தாமே முன்வந்து, 'நாங்கள் இப்போது இந்திய சமூகத்திற்கு என்ன உதவி செய்யலாம், சொல்லுங்கள்?' என்று கேட்கிறார்கள்". கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் நாம் வசிக்கும் தொகுதியிலுள்ள பெட்டர் பிஸினஸ் பீரோ, அரிமா சங்கம், ரோடரி சங்கம், குழந்தைகளின் PTA இவற்றிலெல்லாம் இன்னும் ஆர்வமாக முனைய வேண்டும் என்பது ரவியின் கருத்து.

தற்போது மாநில அரசுகள், தூதரகம் இவற்றிலெல்லாம் நிறைய இந்தியர்கள் பணி புரிவதாகவும், அதனால் நம் சமூகத்திற்குப் பெருமை கூடும் என்றும் கூறுகிறார் ரவி.

முத்தாய்ப்பாக அக்டோபர் 10ம்தேதி, பராக் ஒபாமாவை பிட்ஸ்பர்குக்கு அழைத்திருக்கிறார் ரவி. அங்கு 250 இந்தியர்களை அரைமணி நேரம் சந்திப்பார் ஒபாமா.

உங்களுக்கு அரசியல் ஆசை இல்லையா என்று கேட்டோம். "மெல்லப் பேசுங்கள், அருகில் என் மனைவி இருக்கிறார்" என்று கண்சிமிட்டுகிறார் ரவி.

பெரியவர்களுக்கு மட்டுமன்றி உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இது ஓர் அரிய வாய்ப்பு என்பது ரவியின் கருத்து. இந்தப் பிரசாரத்திற்கு மாணவர்களுக்கு கிரெடிட் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது டிரான்ஸ்கிரிப்டையும் இது மெருகேற்றும் என்கிறார்.

தமிழர்கள் அமெரிக்கப் பொதுவாழ்வில் ஈடுபட்டுத் தடம் பதிக்க வேண்டும் என்னும் ரவியின் கருத்தைத் தென்றல் ஆமோதிக்கிறது.

காந்தி சுந்தர்

© TamilOnline.com