முன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்துகொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவிபுரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே முரளி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தார். மார்க், வெர்டியான் பல வடிவங்களில் வளைக்கக் கூடிய ஆனாலும் பெருமளவில் சூர்ய ஒளி மின்சக்தி தரும் புரட்சிகரமான நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் விளக்கினார். சூர்யா விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் சென்றனர். யூ வீடு திரும்பப் பார்க்கிங் லாட்டுக்குp போன போது கார் அருகிலேயே தாக்கப்பட்டதைக் கேட்டு, உள் ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகித்து, சூர்யா மார்க்கை வெர்டியான் வேலையாளிகளைப் பட்டியலிடுமாறு கேட்டார். பிறகு...
யூ தாக்கப்பட்டதிலும், வெர்டியானின் தொழில்நுட்பப் பிரச்சனையிலும், வெர்டியானின் பணியாட்களில் ஒருவரே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சூர்யா கூறியவுடன் முதலில் அதை சுத்தமாக நிராகரித்து விட்ட மார்க், பிறகு யூ-வும் சூர்யாவுடன் சேர்ந்து கொள்ளவே, மெள்ள மனம் மாறி, வெர்டியான் பணியாளர் பட்டியலை அளிப்பதாக ஒப்புதலளித்து, உடனேயே தன் வேலையாளர் துறைத் தலைவர் டேவிட் ஜாக்ஸனை அழைத்தார்.
அந்தப் பட்டியல் மிகவும் ரகசியமானதென்றும் அதிலிருக்கும் விவரங்களை லேசில் மற்றவர்களிடம் பகிர்ந்துவிட முடியாதென்றும் டேவிட் மறுக்கவே, மார்க் அவருக்கு அந்தப் பட்டியல் தேவையான காரணத்தை விளக்கினார்.
##Caption## ஆனாலும் தயக்கம் தீராத டேவிட், பட்டியல் பதிப்பெடுத்துத் தருவதற்குப் பதிலாக மின்வலை மூலமாகத் தேவையான விவரங்களை மட்டும் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாமே என்று கூறவும் கிரண் குதித்தான் "டேவிட் சொல்றது சரிதான் மார்க்! ஏன் பேப்பர்ல பதிப்பெடுத்து சில மரங்களைக் கொல்லணும்? அந்த டேட்டாபேஸை மின்வலையிலயே பாக்கறது தான் சரி. இதோ என் பிடிஏ-லயே பார்த்துடலாம். பயனர் விவரம், பாஸ்வேர்ட் எல்லாம் என்னன்னு சொல்லிடுங்க டேவிட்." என்றான்.
வேண்டா வெறுப்பாக டேவிட் விவரங்களை அளித்து விட்டு, "இது தற்காலிகமான விவரந்தான். இன்னும் சில மணி நேரந்தான் பயன்படும். அதுக்குள்ள பாத்துக்குங்க. அப்புறம் திரும்பவும் வேணும்னா புதுசா வசதி செஞ்சு குடுக்கறேன்." என்று கூறிவிட்டு தொலைபேச்சிலிருந்து விலகினார்.
கிரணும், "இப்ப சத்திக்கு அது போதும்" என்று சொல்லிவிட்டுத் தன் கருவியில் வேகமாகத் தட்டிவிட்டு, "இதோ பட்டியல் ரிப்போர்ட் கிடைச்சாச்சு பாருங்க! இன்னும் என்ன விவரம் வேணும்னாலும் ஒவ்வொருத்தர் ரெகார்டையும் க்ளிக் பண்ணி வரவழைச்சுக்கலாம்!" என்று ஒரு ரஜினி ஸ்டைலில் சுழற்றிக் காட்டிக் கூறினான்!
மார்க் சிலாகித்தார். "வாவ், ரொம்பப் படுவேகந்தான் நீ கிரண்!"
சூர்யா கிரணின் கைக்கருவியை வாங்கி பட்டியலை சில நிமிடங்கள் ஆராய்ந்து விட்டுக் கிரணிடம் திரும்பக் கொடுத்துவிட்டு, யோசனையுடன், "ஹூம், இப்ப பார்த்ததுல உடனே ஒண்ணும் பளிச்சுன்னு தெரியலை. அப்புறம் உக்காந்து நிதானமா ஒவ்வொண்ணா அலசிப் பார்த்து எதாவது தோணுதான்னு பார்க்கணும்" என்றார்.
மார்க் தலையாட்டினார். "அது சரிதான். நீங்க வேணும்னா நாளைக்கு எங்க அலுவலகத்துக்கு வாங்க. டேவிட்டை உங்களோடு உக்காந்து ஒவ்வொருத்தர் பத்தியும் விவரமாக் காட்டி விளக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்." என்றார். யூ-வும் "இது நல்ல யோசனை!" என்று ஆமோதித்தார்.
சூர்யாவும் மெல்லத் தலையாட்டி, "சரி அது எப்ப வேணும்னு சொல்றேன், அப்ப செய்யலாம்." என்றார்.
சூர்யா பட்டியலை விரைவாகச் சில நிமிடங்களே பார்த்து விட்டு ஒன்றும் சட்டென்று புலப்படவில்லையென்று கூறிவிட்டாலும், அவர் மனத்தில் எதோ நெருடியிருக்கிறது என்று அவர் கண்களில் சட்டென்று தோன்றி மறைந்த ஒரு ஒளி கிரணுக்கும் ஷாலினிக்கும் காட்டிக் கொடுத்துவிட்டது. அவருடன் வெகுநாட்களாகப் பலப்பல விசாரணைகளில் பழகியிருந்ததால் அவர் முகபாவத்தை அவர்கள் சட்டென்று உணர்ந்து கொண்டு விட்டார்கள். ஆனாலும் அப்போதே அவரை வற்புறுத்திக் கேட்பது சரியல்ல என்பதையும் நன்கு அறிந்திருந்ததால் பிறகு வேறு சரியான நேரத்தில் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள்.
சூர்யா ஆழ்ந்த யோசனையுடன் வினவினார். "மார்க், உங்க தலைமை சூர்யசக்தி விஞ்ஞானியான யூ-வைச் சந்திச்சாச்சு. உங்க தலைமைக் குழுவில் வேறு யார் யாரைச் சந்திச்சுப் பேசினாப் பலனிருக்கும்னு நினைக்கறீங்க?"
மார்க் சற்று யோசித்துவிட்டு, "ஹூம்... எங்க நிதித்துறைத் தலைவர் ரிச்சர்ட் கோல்ட்டனைப் பார்த்துப் பேசினா பயனிருக்கும்னு நினைக்கறேன். அவர் ரொம்ப நாளா என்னோட இருக்கறவர். எங்க நிறுவனத்தைப் பத்தியும், தற்போதைய பிரச்சனையின் தாக்கத்தைப் பத்தியும் நல்லாப் புரிஞ்சிருக்கறவர்..."
யூ-வும் தன் பங்குக்கு யோசனை அளித்தார். "மார்க், பேட்டரி நுட்ப நிபுணரான பீட்டர் பார்க்கரையும் சந்திக்கலாம் இல்லையா?"
மார்க் தலைமேல் லேசாகக் குட்டிக் கொண்டார். "சே! அது ஏன் எனக்கு முன்னமேத் தோணாமப் போச்சு! எதோ உங்களை வந்து பாக்கற அறிபறியில பீட்டரைப்பத்தி மறந்தே போயிட்டேன் பார்த்தீங்களா! ஆமாம் சூர்யா நீங்க பீட்டரோட நிச்சயமாப் பேசணும். இந்தப் பிரச்சனையில பெரும்பங்கு எங்க பேட்டரி நுட்பந்தானே" என்றார்.
##Caption## சூர்யா லேசாகத் தலையாட்டிக் கொண்டு ஆமோதித்தார். "ரொம்ப நல்லது. இப்ப ரொம்ப நேரமாயிடுச்சு. இனிமேலும் யூ-வுக்குக் தொந்தரவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நாளைக்கு உங்க அலுவலகத்துல சந்திச்சுத் தொடரலாம். ரொம்ப நன்றி யூ. நல்லா ரெஸ்ட் எடுத்துக் கிட்டு தேத்திக்குங்க.
இன்னும் எதாவது பேசணும்னா சொல்லியனுப்பறேன்."
அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளிவந்தனர்.
சூர்யா ஷாலினிக்குக் கனிவுடன் நன்றி கூறினார். "இவ்வளவு சீக்கிரமா மருத்துவமனை கெடுபிடிக்கு நடுவுல யூ-வைச் சந்திக்க ஏற்பாடு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி ஷாலினி! அவரோட பேசறது மிக அவசியமா இருந்தது..."
சூர்யாவின் நன்றியுரை, அவருடன் இருந்த நெருக்கத்தால் ஏற்கனவே கனிந்திருந்த ஷாலினியின் இதயத்தை மேலும் உருகச் செய்துவிட்டது. "நான் செய்ய வேண்டியதை தானே செய்தேன் சூர்யா! இருந்தாலும் உங்க தேங்க்ஸ் வெல்கம்" என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் சிலிர்த்துக் கொண்டாள்.
அவர்களின் பேச்சுப் பறிமாறல் கிரணுக்கும் முரளிக்கும் கூட மகிழ்ச்சி அளித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டார்கள்.
***
அடுத்த நாள் காலை, வெர்டியான் அலுவலகத்துக்கு, சூர்யா, கிரண், முரளி மூவரும் சென்றடைந்த போது, மார்க் அவர்களுக்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தார்.
சூர்யா பரபரப்புடன் இருந்ததை கிரண் உணர்ந்து கொண்டான். சூர்யா எதையோ மோப்பம் பிடித்து விட்டதால் சூட்டோடு சூடாக அதைத் தொடர்ந்து விசாரிக்க ஆவலாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு சுத்த சக்தியின் சங்கடம் கூடிய சீக்கிரமே நிவர்த்திக்கப்படப் போகிறதென்ற எதிர்பார்ப்புடன் மேற்கொண்டு நடக்கப் போவதை கவனிக்கலானான்.
சூர்யா உடனே மார்க்கை வினாவினார். "நீங்க உங்க உபதலைவர்கள் ரெண்டு பேரைச் சந்திக்கலாம்னு சொன்னீங்களே, அவங்க வந்துட்டாங்களா?"
மார்க் தலையாட்டினார். "ஓ! வந்துட்டாங்களே. உள்ள வாங்க. ஒரு சந்திப்பு அறையில உக்காந்துகிட்டு ஒவ்வொருத்தரையா கூட்டிப் பேசலாம்."
சூர்யா மெல்லத் தலையசைத்து கண்டிப்புடன் மறுத்தார். "சே, சே! அது அவங்களை விசாரணை செய்யறா மாதிரி இருக்கும். நானா அவங்க அலுவலக அறைக்குப் போய் சந்திக்கறதுதான் முறை. இப்ப மின்சக்தி உற்பத்தி நிபுணரான யூ பிங் சூவைப் பார்த்து பேசியிருக்கறாதால, அந்த சூட்டோட, முதல்ல உங்க பேட்டரி நிபுணரையும் பார்த்து பேசிடலாம். அப்புறம் உங்க நிதித்துறை உபதலைவரைச் சந்திக்கலாம். ஸாரி எனக்கு அவங்க பேர் மறந்து போச்சு..."
மார்க் ஆமோதித்தார். "நீங்க சொல்றதும் சரிதான். பேட்டரி நிபுணர் பீட்டர் பார்க்கர். நிதியாளர் ரிச்சர்ட் கோல்ட்டன். உங்க வேண்டுகோள்படி முதல்ல பீட்டரைப் பார்க்கலாம் வாங்க" என்று கூறி பீட்டரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். "பீட்டர், இவர்தான் சூர்யா. நான் சொன்னபடி உங்களோட பேசி விவரம் தெரிஞ்சுக்க வந்திருக்கார்."
பீட்டர் மலர்ந்த முகத்தில் பெரிய புன்னகையுடன் சூர்யா, கிரண், முரளி மூவரையும் வரவேற்றார். "வாங்க, வாங்க. மார்க் உங்களைப்பத்தி நிறைய சொல்லியிருக்கார். எங்க பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்ய முன்வந்ததுக்கு ரொம்ப நன்றி. நேத்து மார்க் சொன்னதிலிருந்து உங்க மாய மந்திரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்."
கிரண் சிரித்துக்கொண்டு பீட்டர் கையைக் குலுக்கி, "உங்க பேர் பீட்டர் பார்க்கர். எனி ரிலேஷன் டு ஸ்பைடர்மேன்?" என்றான்.
பீட்டர் அட்டகாசமாகச் சிரித்தார். "இந்த ஜோக்கை நான் பலமுறை கேட்டுக் கேட்டு சலிச்சாச்சு கிரண். இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் எனக்குச் சிரிப்பு இன்னும் வருது" என்றார்.
முரளி "ஸாரி, பீட்டர், கிரண் ரொம்ப புத்திசாலித்தனம்னு நினைச்சு இப்படி எதாவது உளறுவான்" என்று மன்னிப்புக் கேட்கவும், கிரணும், "ஸாரி பீட்டர், இனிமே ஸ்பைடர்மேன் ஜோக்ஸ் சொல்றதில்லை, பொத்திக்கறேன்" என்றான்.
பீட்டர் சிரிப்புடன், "அதான் சொன்னேனே கிரண், பரவாயில்லை. உன்னைப் பத்தியும் மார்க் சொன்னார். மேலமேல ஜோக் அடிச்சுக்கிட்டே இரு நல்லதுதான். வாழ்க்கையில சிரிப்பில்லாட்டா பிரச்சனைகளை நல்ல சிந்தனைகளோட சந்திச்சு சமாளிக்கவே முடியாது" என்றார்.
பீட்டர் கிரணிடம் பேசிக் கொண்டிருந்த சில நொடிகளுக்குள்ளேயே, சூர்யா வழக்கம் போல் பீட்டரின் அறையை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டு பீட்டரிடம் விசாரணையைத் தொடர்ந்தார்.
தொடரும்
கதிரவன் எழில்மன்னன் |