எங்கள் உறவினர் ஒருவர் இருந்தார். அவரை மாயவரம் மணி மாமா என்று அழைப்போம். சரியான சண்டைக்காரர். ஒருமுறை எங்களுடைய பெரியப்பா பிள்ளைக்குக் கல்யாணம். மணி மாமா வந்தார். எல்லோருக்கும் உள்ளூர பயம். கல்யாண மண்டபத்தில் போய் இறங்கினோம். உள்ளே போனவுடனே மாமா 'ஏய் சுந்தரம்! என்னடா இது, மண்டபமா மாட்டுக் கொட்டகையா? நம்ம ஸ்டேட்டஸ் என்ன? மதிப்பு என்ன? மகா மட்டமா இருக்கே' என்று உரக்கக் கத்தினார். பெண்ணைப் பெற்றவர் ஓடிவந்து 'அவசரமா கல்யாணம் நிச்சயமானதாலே மண்டபமே கிடைக்கலை. சிரமப்பட்டுட்டோம். பெரிய மனசு பண்ணி பொறுத்துக்கோங்க. ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கறோம்.' என்று அழாத குறையாகக் கேட்டுக் கொண்டார். மாமா ஒருவாறு அடங்கினார்.
காபி, டிபன் வந்தது. 'என்ன இது! காபியா, கழுநீரா? படு மோசமாயிருக்கே' என்று அடுத்த பாட்டுப் பாடினார். பரிசாரகர் காபியுடன் உள்ளே ஓடிப்போய்த் தலைமைச் சமையல்காரரிடம் கூறினார். அவர் வந்து 'சார் இன்னும் புதுப்பால் வரலை. இனிமே நல்லதா பார்த்து அனுப்பறேன்' என்று சமாதானம் செய்தார்.
சாப்பாட்டு சமயம். திடீரென்று எழுந்த மணி மாமா 'இது என்ன போளியா! வரட்டிகூட எங்க வீட்டில நல்லா இருக்கும். பால் பாயசம் எதுல செஞ்சது? பருத்திக் கொட்டை அரைச்சு விட்ட்டீங்களோ...' என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். சமையற்காரர் ஆடிப்போனார். அப்பாவும் மற்றும் உள்ளோரும் அவரை ஒருவாறு அடக்கி, சண்டை வலுக்காமல் பார்த்துக்கொண்டனர். 'இது என்ன மேளமோ, மஞ்சு விரட்டு மாதிரி' என்று அதற்கும் உறுமினார்.
அடுத்து வந்தது வெற்றிலை பாக்கு. அவ்வளவுதான் 'ஓய் சமையற்காரரே! இது என்ன வெற்றிலையா இல்லே பூவரச இலையா? எங்க வீட்டு மாடு கூடத் திங்காது' என்று அலறினார். சமையற்காரர் ஒரு முறை முறைத்துவிட்டுப் போய்விட்டார்.
இரவு படுக்கப் போகும்போது மாமாவின் படுக்கை அறையில் பார்த்தால் ஒரு பொதி வைக்கோல். அதற்குப் பக்கத்தில்
மாட்டுக்கார மாமணியே வருக வருக மாயவரம் மா மனிதரே வருக வருக இந்த வைக்கோல் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
என்று ஒரு அட்டையில் கொட்டை எழுத்தில் எழுதித் தொங்கவிட்டிருந்தது. உள்ளே வந்த மாமா அதைப் பார்த்தார். அவ்வளவுதான் சுர்ரென்று கோபம் மண்டைக்கு ஏறியது. ருத்ர தாண்டவம் ஆடினார். 'எவண்டா இந்த மாதிரி செஞ்சது?' என்று கூவ ஆரம்பிக்க, சமையல்கார மாமா வந்தார்.
'மணி சார் மன்னிக்கணும். வந்ததிலேர்ந்து நாங்களும் பார்க்கிறோம்... நீங்க மாடு, கழுநீர், பருத்திக்கொட்டை, வரட்டின்னே சொல்லிட்டிருக்கீங்க. எங்க பசங்க இப்படி ஒரு ஐடியா தமாஷ¤க்காக செஞ்சிட்டாங்க. தயவுசெஞ்சு மன்னிக்கணும்' என்று கூறி விட்டு, 'ஏய் சாமா! சூடா மைசூர்பாகு இப்பப் போட்டது ஒண்ணு சாருக்குக் கொண்டு வா' என்று குரல் கொடுத்தார். அதோடு நிற்காமல் 'மணி சார் தயவுசெஞ்சு அதையும் புண்ணாக்குக் கட்டியான்னு கேட்டுடாதீங்க. என்ன நான் சொல்றது!' என்று ஜோக் அடித்துச் சிரித்தார்.
நாங்கள் எல்லோருமே கைதட்டி கொல்லென்று சிரித்தோம். ஏன் மணி மாமாவே கோபத்தை மறந்து 'ஓஹோஹோ'வெனச் சிரித்துவிட்டார்.
இது நடந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பு வரத்தான் செய்கிறது.
தங்கம் ராமசாமி |