அன்புள்ள சிநேகிதியே,
நான் எழுதுவது என்னை மட்டும் குறிப்பதல்ல. எங்கள் பல பேருக்கு ஒரு சிநேகிதியால் ஏற்படும் சங்கடம். நாங்கள் வசிக்கும் இடத்தில் நிறைய இந்தியர்கள் இல்லை. நான் வந்த புதிதில் என்ன, எங்கே, யார் என்று தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால் சமீபத்தில் ஒரு சிறிய குழுவைப் புதிதாக வந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பித்தோம். மிகவும் ஜாலியாக இருப்போம். கொஞ்சநாள் முன்பு ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்டில் ஒரு பெண்மணியைச் சந்தித்தோம். அந்தப் பெண்மணி தானாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களைப் பற்றிய விவரம் தெரிந்துகொண்டு, எங்கள் சேவையைப் பாராட்டி (எங்களுக்கு உச்சி குளிர்ந்து விட்டது) மிகவும் நட்பாக இருந்தார். அவர் பல வருடங்களாக இங்கு இருப்பதால், அவரது வழிகாட்டுதல் தேவை என்று அவரை எங்கள் மீட்டிங்குக்குக் கூப்பிட்டோம். வாராவாரம் வந்துவிடுவார். முதல் இரண்டு வாரம், ஏன், ஒரு மாதம்வரை கூட எல்லாம் நன்றாக இருந்தது. மிகவும் கலகலப்பாகப் பேசுவார். தங்கள் குழந்தைகள், உறவினர்கள் எல்லோரும் எப்படிப் பெரிய பெரிய கல்வி, தொழில்துறை என்று வளமாக இருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசுவார். முதலில் எங்களுக்கு எதுவும் தவறாகப்படவில்லை. ஆனால் போகப்போக ஒரு சிலருக்கு அவருடைய தோரணை, அதிகாரம், அறிவுரை கொஞ்சம் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது.
##Caption##நாங்கள் அனைவரும் 'பாட்லக்' என்று விதவிதமாகச் சமைத்துக் கொண்டு வருவோம். ஆனால் அவர் எதுவுமே எடுத்துக் கொண்டு வந்ததில்லை. மிச்சம், மீதி இருந்தால் உரிமையாக எடுத்துக் கட்டிக்கொண்டு போய்விடுவார். எங்களுக்கு ஏதும், எதிலும் அனுபவம் இல்லை என்பது போல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறிவுரை. (எங்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி 10-15 வயதுவரையில் குழந்தைகள் உண்டு). யாரையும் பேச விடமாட்டார். தானே பேசிக்கொண்டு இருப்பார். நாங்கள் முதலில் 11 பேர் இருந்தோம். இப்போது ஒவ்வொருவராகக் கழண்டு கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முதலில் எப்படி அவரது வயது, திறமை, அனுபவம் ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்தோமோ இன்று அதற்கு மாறாக அவரைப் பார்த்தாலே ஒரு வித அலர்ஜி ஆகி விடுகிறது எங்களில் பலபேருக்கு. இது நாங்களே ஏற்படுத்திக் கொண்ட வினை தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இப்படியும் இங்கே மனிதர்கள் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தி, சலுகை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
எங்களுக்குள் முன்பு இருந்த ஆர்வம் போய்விட்டது. யாரோ எங்கள்மீது படையெடுத்து விட்டாற் போன்ற நினைப்பு. இடம் மாற்றிப் பார்த்தோம். தேதியை மாற்றிப் பார்த்தோம். எங்களில் யாருக்காவது போன் செய்து, விவாதம் பண்ணி வந்துவிடுகிறார். இப்போது மீட்டிங் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டால் என்ன என்று தோன்றுகிறது. அவரிடம் போய் யார் செல்வது? பூனைக்கு யார் மணி கட்டுவது?!
இப்படிக்கு ................
அன்புள்ள சிநேகிதியே உங்களது இந்தக் கடிதத்தைப் படிக்கும் பல ‘தென்றல்' வாசகர்களில் பலர் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்கள். ஏனென்றால், இது உங்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை இல்லை. பலருக்கு இந்த தர்மசங்கடமான நிலை இருக்கும்.
##Caption## நீங்கள் குறிப்பிட்ட சிநேகிதி போல ஒவ்வொரு அமைப்பிலும் யாராவது இருப்பார்கள் என்பது என் கணிப்பு. அவருடைய நோக்கத்தில் அவர் நேர்மையானவர். மனம் திறந்து பேசுபவர். ஒரு நிகழ்ச்சிக்குக் கலகலப்பு ஊட்டுபவர் என்று ஒரு சுயகணக்கு. அவருடைய குறைகளை யாராவது எடுத்துச் சொன்னால் அது விவாதத்தில்தான் முடியும். வீண் சச்சரவு தான் பெருகும். உங்களைவிட வயதும், அறிவும், அனுபவமும், அறிவுக் கூர்மையும் அதிகம் இருந்தால் அதற்கேற்ற சொல்நயம், செயல்நயம் இல்லையென்ற பட்சத்தில் நீங்கள்தான் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, அவரை மாற்றுவது மிகவும் சிரமம். உங்கள் குழுவில் யாரேனும் இரண்டு பேர் அவருடைய கலகலப்பான தன்மைக்காக ஒத்துப்போய்க் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பெரும்பான்மையோருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் உறவுமுறை இது. நீங்கள் ஒதுங்க, ஒதுங்க அவர் புரிந்து கொள்வார். வேறு புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார். இது தற்காலிகமான வழிமுறைதான். அவர் உங்கள் மீது வீண்பழி கூறவில்லை. ஏதோ தன்னைப் பற்றியே பேசிக்கொள்கிறார்.
ஒரு 'complex', 'feelings of insecurity' இருக்கும்போது மனிதர்களுக்குத் தற்பெருமை கூடுதலாக இருக்கும். இரண்டாவது, உங்கள் 'பாட்லக்' பிரச்சனை. 12 பேர் கூடினால் ஒரு டிஷ் குறைகிறது. அவ்வளவுதானே! இப்படி எண்ணங்கள் தோன்றினால், உங்கள் மனதில் இருக்கும் நமைச்சல் குறையும்.
எல்லாவித குணங்களும் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. நம்முடைய உண்மையான உறவுமுறைகளை இனம் கண்டுகொள்ள முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சிநேகிதியும் உங்களுடைய மனமுதிர்ச்சிக்கு ஒரு பாடம் சொல்லியிருக்கிறார், ஏதோ ஒரு வகையில். இதுவும் ஒரு அனுபவம்தான்.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |