கர்நாடக இசைமேதையும், பிரபல வயலின் வித்வானுமான குன்னக்குடி வைத்தியநாதன் (73) செப்டம்பர் 8, 2008 அன்று சென்னையில் காலமானார். தனது சிறுவயது முதலே வாய்ப்பாட்டிலும் பக்கவாத்தியத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த வைத்தியநாதன், அக்காலத்தின் பிரபல இசை விற்பன்னர்களான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தவர். பின்னர் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனிடம் வயலின் வித்வானாகச் சேர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். 1952ல் சென்னைக்கு வந்த வைத்தியநாதன் ஆரம்பத்தில் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தார். 1960 முதல் தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு, தனிக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். தனிப்பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களை வாசித்துக் கொண்டிருந்த குன்னக்குடிக்கு, பூவை செங்குட்டுவன் எழுதி, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..' என்ற பாடல் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. பட்டிதொட்டி எங்கும் அவர் புகழைப் பரப்பியது. பின்னர் ஏ.பி. நாகராஜன் மூலம் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 'கந்தன் கருணை', 'திருமலை தென்குமரி', 'தெய்வம்', 'அகத்தியர்', 'வா ராஜா வா', 'மேல் நாட்டு மருமகள்', 'நம்ம வீட்டு தெய்வம்', 'தோடிராகம்' என அவரது திரையிசைச் சாதனைகள் தொடர்ந்தது.
திரைப்பாடல்களை வயலினில் வாசித்தது, வயலினிலேயே பேசியது, இரண்டு வயலின்களின் சத்தங்கள் போல ஒரே வயலினில் வாசித்தது, மிருகங்களின் ஒலியை வாசித்தது என்று நிறைய சாதனைகள் செய்தார் குன்னக்குடி. அது மக்கள் மனங்களைக் கவர்ந்ததுடன் நீடித்த புகழையும் அவருக்குத் தேடித் தந்தது.
இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய குன்னக்குடி வைத்தியநாதன், வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்த பெருமைக்குரியவர். வயலின் என்னும் இசைக்கருவியை பாமர மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர். 'வயலின் சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்டவர். தமிழக அரசின் 'கலைமாமணி', மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' போன்ற பல விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன், ராக மையம் என்ற அமைப்பை நிறுவி இசை ஆர்வமுடைய இளைஞர்களை ஊக்குவித்து இசை ஆராய்ச்சி செய்து வந்தார். திரையிசைக்கும், கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இணையற்றது. இன்னிசை மாமேதைக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.
அரவிந்த் |