தென்றல் வாசகர்களே! எழுத வாருங்கள்: நியூ ஹொரைஸன் மீடியாவின் பத்ரி சேஷாத்ரி
சென்னை IITயில் பி.டெக். முடித்தபின் அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் Ph.D. பெற்ற பத்ரி சேஷாத்ரியை மேலாண்மை இயக்குனராகக் கொண்டது தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகமான நியூ ஹொரைஸன் மீடியா (New Horizon Media). தொடங்கிய நான்கே வருடங்களில் சுமார் 800க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டு தென்னிந்தியப் பதிப்புலகில் ஒரு புரட்சி செய்துள்ளது. கிழக்கு, வரம், நலம், பிராடிஜி, தவம் என தமிழிலும், இண்டியன் ரைட்டிங், ஆக்சிஜன் புக்ஸ், பிராடிஜி என ஆங்கிலத்திலும், புலரி, பிராடிஜி என மலையாளத்திலுமாக இந்தியப் பதிப்புலகில் ஒரு சாதனை முயற்சியாகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்நிறுவனம். பத்ரி சேஷாத்ரி (38) அவர்களைத் தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

கே: பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர் நீங்கள். பதிப்புத் துறையின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

ப: கார்னல் யுனிவர்சிடியில் ஐந்தரை வருடங்கள் Ph.D. ஆய்வு செய்து முடித்த மறுவாரமே கிளம்பி இந்தியா வந்தேன். பின்னர் cricinfo என்ற கிரிக்கெட் இணையதளத்தைத் தொடங்கிக் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். அதை விற்றபின், நண்பர் சத்தியநாராயணாவுடன் கலந்தாலோசித்த போதுதான், புத்தகங்கள் என்ற சிறு பொறி தோன்றியது. ஆனால் இதைப் பத்திரிகைத் துறை (journalism) என்றல்லாமல் பதிப்புத் துறை என்ற ரீதியிலேயே அணுக முடிவு செய்தோம். அப்போது எங்களுக்கு அத்துறை பற்றி எதுவுமே தெரியாது. இருந்தாலும் சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் முடிவு செய்தோம். அதற்கான முயற்சிகளில் இறங்கிய போது தான், ஆங்கிலத்திற்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே இடைவெளி மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தோம்.

உதாரணமாக இந்த அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். இதுபற்றி ஆங்கில இதழ்களில் விரிவாகக் கட்டுரைகள் வந்திருக்கலாம். தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் அதன் உள்ளடக்கம் பற்றி, நன்மை, தீமை பற்றி, 123 ஷரத்து என்றால் என்ன என்பது பற்றியெல்லாம் சொல்லப்படுவதில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் நடிகைகளின் தொப்புளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் கொடுப்பதில்லை. பொதுவாக, அணுசக்திப் பிரச்சனை எதிர்ப்பு, ஆதரவு என்று மேலோட்டமாக எழுதிவிட்டுப் போய் விடுகிறார்கள். ஆழமாகச் செய்திகளைத் தர யாரும் முன்வருவதில்லை. ஞாநி மட்டும் எழுதி வருகிறார். அதையும் தன் பார்வையில் மட்டுமே சொல்கிறார். மாற்றுப்பார்வைக்கு இங்கு இடமேயில்லை. சாமான்ய மக்களுக்கு இது புரியப் போவதில்லை. இது போன்ற பல விஷயங்களுக்கு இங்கே விளக்கமான பார்வையில்லை. தெளிவுமில்லை. செய்திகளில் ஆழமில்லை. ஆகவே இந்த வெற்றிடத்தை நிரப்புமுகமாக, மக்களுக்கு அறிவுசார் துறையில் தகவல்களை, எளிமையாக, புரியும் விதமாகத் தரவேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, 2004 பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டது நியூ ஹொரைஸன் மீடியா.

கே: NHMன் செயல்பாடு பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா?

##Caption## ப: இந்திய மொழிகள் அனைத்திலும் நல்ல, தரமான புத்தகங்களைக் கொண்டு வருவது என்ற ஒரு இலக்கை மையமாக வைத்துத் தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். முதலில் சோதனை முயற்சியாகத் தமிழில் தொடங்குவோம்; அது வெற்றி பெற்றால் பின்னர் அனைத்து இந்திய மொழிகளிலும் இம்முயற்சியைத் தொடருவோம் என்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது. அதன்படி தற்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளில் நியூ ஹொரைஸன் மீடியா கால்பதித்துள்ளது. விரைவில் பிற இந்திய மொழிகளிலும் இது விரிவடையும்.

முதலில் ஆரம்பிக்கப்பட்டது கிழக்கு. அறிஞர்களது வாழ்க்கை வரலாறுகள், அவர்களது சாதனைகள், நாட்டின் வரலாறுகள், அறிவியல் துறைகள், அதில் நடந்திருக்கும் சாதனைகள், அரசியல், சமூக அறிவியல், சமகால நிகழ்வுகள், சுய முன்னேற்றக் கருத்துக்கள் எனப் பலவற்றை கிழக்கு பதிப்பு நூல்களின் உள்ளடக்கமாகக் கொண்டோம். சான்றாக நேதாஜி, எடிசன் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளை வெளியிட்டிருக்கிறோம். செயற்கைக் கோள்கள் பற்றி, நீர், அனல், காற்று, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, தீவிரவாதம் அதற்கான பின்புலம் பற்றி நூல்கள் வெளிவந்துள்ளன. தொழில்கள், பங்கு வணிகம், வீட்டுக்கடன், வங்கிக்கடன் பற்றி, காப்பீடு பற்றி நூல்கள் வந்துள்ளன. இவ்வாறு பல தலைப்புகளில் நூல்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் நிறைய வரவிருக்கின்றன.

அடுத்துத் தொடங்கியது வரம். இது முற்றிலும் இந்துமதம், ஆன்மீகம் தொடர்பானது. பக்தி இலக்கியங்கள், உபநிடதம், தத்துவம் போன்றவற்றில் இது கவனம் செலுத்துகிறது. அதே சமயம் சந்தேகத்திற்குரிய விஷயங்களான ஜாதகம், ஜோதிடம், ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றில் நாங்கள் புத்தகங்கள் வெளியிடுவதில்லை.

பின்னர் பிராடிஜி, தவம் என சில பதிப்புகளைக் கொண்டு வந்தோம். அதாவது கிழக்கு என்பது இலக்கியம், அறிவுசார் நூல்களைக் கொண்டதாக விளங்கும். வரம் மற்றும் தவம் என்பது இந்துமதம், ஆன்மீகம், வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களை மட்டும் கொண்டது. நலம் என்பது மருத்துவம் சார்ந்தது. இவ்வாறு வாசகர்களின் தேர்வு கருதி பல உள் பிரிவுகளை உருவாக்கினோம். இவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. அட்டை முதல் எழுத்துரு, நடை, தலைப்பு வரை என எல்லாவற்றிலும் ஒன்றிற்கு ஒன்று வேறுபாடுகளைக் கொண்டதாய், ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டதாய் விளங்குபவை.

கே: உங்கள் ஆரம்பகாலச் சிக்கல்கள் என்னென்ன, அவற்றை எப்படிச் சமாளித்தீர்கள்?

ப: நாங்கள் பதிப்புத்தொழிலைத் தொடங்கியபோது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம். குறிப்பாக புத்தக விற்பனை. புத்தகம் விற்கும் கடைகள் அதிகம் இல்லை. தெருவுக்குத் தெரு இல்லாவிட்டாலும் ஊருக்கு ஒன்றாவது இருக்க வேண்டும் என்று பார்த்தால், அதுகூட இல்லை. தமிழ்நாடு முழுவதிலும் 350 புத்தகக்கடைகளுக்கு மேல் இருக்காது. அதிலும் பாதிக்கு மேற்பட்டவை 100 அடி புத்தகக் கடைகள். உள்ளே நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. சில கடைகளில் உள்ளே விடவே மாட்டார்கள். இப்படி இருந்தால் வாசகர்கள் எப்படி புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது, புத்தகங்களை எப்படி விற்பனை செய்வது? வருடத்தில் வெறும் பத்து நாட்களுக்கு புத்தகக் கண்காட்சியை நடத்துவது எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? மக்கள் கூடுமிடங்களில் புத்தகங்களை அவர்கள் பார்வையில் படும்படி வைப்பது, அதன் மூலம் அவர்களை வாங்கத் தூண்டி, புத்தக விற்பனையைப் பெருக்குவது என்பது முதல் படி.

ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட் கடைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து எங்கள் புத்தகங்களைக் காட்சிக்கு வைத்தோம். முதலில் எங்களைக் கேலியாகப் பார்த்தார்கள். காட்சிக்கு வைக்க, விற்பனை செய்ய இடம் தர மறுத்தார்கள். விளக்கிச் சொல்லிப் புரிய வைத்தோம். சில நாட்களிலேயே பிரமிக்கும்படியாக, வைத்த புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. முயற்சிக்கு ஆதரவு பெருகியது. புத்தக விற்பனையும் அதிகரித்தது.

கே: புத்தக விற்பனையைப் பெருக்க நீங்கள் என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள்?

ப: புத்தகத் தொழிலுக்கான உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தகங்கள் அச்சிடவோ, விற்பனை செய்யவோ சரியான வசதிகள் இங்கு இல்லை. நான் ஒரு அமெரிக்கப் பதிப்பாளனாக இருந்தால், நல்ல புத்தகங்கள் என்னிடம் இருந்தால், சரியாக அதை மார்கெட்டிங் செய்திருந்தால், அமேசானில் பதிவு செய்திருந்தாலே போதும், 50% விற்றுத் தீர்ந்துவிடும். தேவையான கமிஷன் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. தமிழக மக்கள்தொகை ஏறக்குறைய 6 கோடிப் பேருக்கு சுமார் 300 கடைகள் மட்டுமே உள்ளன! 2 லட்சம் பேருக்கு ஒரு புத்தகக் கடை என்றால் எப்படிப் போதுமானதாக இருக்கும்?

ஆர்வமுடைய வாசகர் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து, எந்தப் புத்தகத்தைக் கேட்டாலும் அது அவருக்குக் கிடைக்க வேண்டும். கடையில் ஸ்டாக் இருக்காது. நிறையப் புத்தகங்களை வைத்துக்கொண்டு, நிறைய விற்று, குறிப்பிட்ட காலத்தில் பதிப்பாளர்களுக்குப் பணத்தைத் தர வேண்டும் என்பது பல விற்பனையாளர்களால் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இது போன்றவை தான் எங்களது பிரச்சனைகள்.

இதனால்தான் நாங்கள் வழக்கமான வழிக்கு அப்பால் செல்கிறோம். கண்காட்சிகளில் செல்கிறோம். புத்தகக் கண்காட்சி மட்டுமல்லாமல் நுகர்வோருக்கான கண்காட்சிகளிலும் கலந்து கொண்டு, தனி ஸ்டால்கள் அமைத்து, புத்தகங்களை விற்பனை செய்திருக்கிறோம். பலமுறை, அரங்கிற்கான வாடகை, புத்தக வியாபாரத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும். மக்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றில் கலந்து கொண்டிருக்கிறோம்.

ஊருக்கு ஊர் சென்று ஊரக வேன்கள் மூலம் விற்பனை செய்கிறோம். அதுவும் ஒரு அறிமுகத்திற்குத்தான். மக்களுக்கு NHM புத்தகங்கள் பற்றித் தெரியப்படுத்தத்தான். மற்றபடி புத்தகக் காட்சிகளில் கண்கவர் விளம்பரங்கள் மூலம், விளம்பரத்தட்டிகள் மூலம் பரவலாக படித்த மக்கள் அனைவருக்கும் கிழக்கு (NHM) பற்றிய ஓர் அறிமுகத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். இதைத்தான் எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம்.

எங்களிடம் இல்லாத புத்தகத்தை வாசகர்கள் கேட்டால், விரைவில் கொண்டு வருவோம் என்று உறுதியுடன் எங்களால் சொல்ல முடிகிறது. எந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு நல்ல புத்தகத்தைக் கொண்டு வந்துவிடும் ஆர்வம், முயற்சி, உழைப்பு ஆகியவை எங்களிடம் உள்ளது. இன்னும் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

கே: எந்தெந்த மாதிரியான நூல்களை நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள், அவற்றிற்கு வாசக வரவேற்பு எப்படி உள்ளது?

ப: கிழக்கு இலக்கியம், அறிவு சார் நூல்களை வெளியிடுகிறது. ஆரம்பத்தில் சில சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டோம். ஆனாலும் மக்களுக்கு அவற்றில் இருக்கும் ஆர்வம், மற்ற துறை நூல்களோடு ஒப்பிடும் போது மிகக் குறைவானதாகவே இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவற்றில் சிறிது தொய்வு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, விற்பனை குறைவாக இருந்தாலும் அவற்றில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம். சிறுகதைகள், நாவல்கள், வேற்று மொழி இலக்கியங்கள் என அவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வாழ்க்கை வரலாறுகள், சுயமேம்பாட்டுப் பயிற்சி நூல்கள், வரலாறு, அரசியல், தொழில், வணிகம், புவியியல் என பல துறை சார்ந்த நூல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். Physical & Biological Science துறையிலும் தற்போது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். அத்துறை சார்ந்த நூல்கள் எழுதச் சரியான எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை என்பது ஒரு மிகப்பெரிய குறைபாடாக உள்ளது.

பிராடிஜி என்பது மாணவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நாடுகள், கலாசாரங்கள், அரசியல், தேசியத் தலைவர்கள், விஞ்ஞானிகள், அவர்களது வாழ்க்கை வரலாறுகள், சிறுவர்களுக்கான கதைகள், பாடல்கள் என பலவற்றை நோக்கமாகக் கொண்டது. இதில் படிப்படியாக ஒவ்வொரு துறையாக நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஒலிப்புத்தகம் (Audio Book). iTune shop-ல் எங்கள் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் ஒலிப்புத்தகத்தை சி.டி.யாக விற்பனை செய்கிறோம்.

கே: தமிழகத்தைப் பொறுத்தவரை பிராடிஜி புத்தகங்கள் மிக அதிக கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்!

ப: குறைவான விலையில், தரமான புத்தகத்தை, எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் தருகிற முயற்சிதான் பிராடிஜி பதிப்பு.

பிராடிஜியின் வாசகர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முக்கிய இலக்கு மாணவர்கள். அவர்கள் வாங்கும் விலையில் புத்தகம் இருக்க வேண்டும். பக்கங்கள் 80 தான். விலை ரூ.25க்கு அதிகமாகக் கூடாது. முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை கவர்ச்சியாக ஆனால் தரமாக இருக்க வேண்டும். உயர்ந்த தாளையே பயன்படுத்த வேண்டும். உள்ளடக்கம் மாணவர்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருக்க வேண்டும். ஒரு விஷயத்தைப்பற்றிய நல்ல அறிமுக நூலாக, இருக்க வேண்டும் என்பவற்றை நிர்ணயம் செய்து கொண்டோம். மாணவர்களுக்கு இன்று படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினால், நாளை அவர்கள் பிற புத்தகங்களையும் வாசிக்க முன்வருவர் என்பதும் ஒரு காரணம்.

பிராடிஜிக்கு நாங்களே அதிசயிக்கும்படியாக மிக நல்ல வரவேற்பு, மாணவர்களிடமிருந்து மட்டுமல்லாது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், புத்தக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் கிடைத்தது. புத்தகக் கண்காட்சியில் நிறைய விற்றுத் தீர்ந்தது.

கே: பிற பதிப்பாளர்களிடமிருந்து நீங்கள் எவ்வகையில் மாறுபடுகிறீர்கள்?

##Caption## ப: பல ஆண்டுகளாக, பலர் இங்கு பதிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழைத் தவிர வேறு மொழிகளில் நூல்கள் வருவதில்லை. ஏன் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான சைன்ஸ், எகனாமிக்ஸ், சோஷியாலஜி, மேத்ஸ் என்று எந்தப் பாடத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன, ஏன்? இப்படி இருந்தால் உலகளாவிய அறிவு எப்படி வளரும்? இறுதியில் குப்பை நூல்கள் தான் மிஞ்சும். அதைப் படித்துவிட்டு சமுதாயம் குப்பையாகத்தான் போகும். எனவேதான் நாங்கள் தமிழில் பாட நூல்கள் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

உண்மையில் எங்களுக்கு யாருமே போட்டி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிற பதிப்பாளர்களது அணுகுமுறை வேறு. எங்களது அணுகுமுறை வேறு. கையில் எழுத்துப் பிரதியை வைத்துக்கொண்டு அதைப் போடலாமா, வேண்டாமா என்ற யோசனையில்தான் இங்கு பெரும்பாலான பதிப்பகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் இத்துறையில் இறங்கும் போதே இந்திய மொழிகள் அனைத்திலும் என்பதை எங்கள் முதன்மை நோக்கமாக நிச்சயித்திருந்தோம். ஆங்கிலம், மலையாளம் என்பதெல்லாம் எங்கள் தொடக்கம்தான். அனைத்து மொழிகளிலும் என்பதுதான் எங்கள் தாரக மந்திரம். அதற்காக அத்துறை சார்ந்த வல்லுநர்களைத் தேடிக் கண்டறிந்து நாங்கள் பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். இங்கு ஒவ்வொரு மொழிக்கும் தனியாகப் பல எடிட்டர்கள் பணிபுரிகின்றனர்.

ஓர் ஆசிரியர் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி, பல எழுத்தாளர்களை வரவழைத்து, அவர்களிடம் இந்தத் தலைப்பில் இன்ன புத்தகம் வேண்டும் என்று கூறி, எழுத வைத்து, அதைச் சரிபார்த்து, அச்சிட்டு, பின் விற்பனை மேலாளர் தலைமையிலான குழுவை நியமித்து நாங்கள் புத்தகங்களை, சந்தைக்குக் கொண்டு வருகிறோம். This is the standard professional model. தமிழகத்தில், ஏன் இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் கூட, ஒரு சில பன்னாட்டு கம்பெனிகள், மிகச்சில இந்தியப் பதிப்பகங்கள் தவிர்த்து இதுபோன்ற ஃப்ரொபஷனல் நிறுவனங்கள் இல்லை என்றே கூறலாம்.

கே: புதிய, இளம் எழுத்தாளர்கள் பலரைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அது குறித்து...

ப: எழுத்தார்வம் கொண்ட பலரைக் கண்டறிந்து, எழுதச் செய்து, அதில் இருக்கும் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டி, அவர்களைத் தயார் செய்கிறோம். இளம் எழுத்தாளர்களைத் தயார் செய்யும் பணியை எங்களது முதன்மை ஆசிரியர் பா.ராகவன் செய்து வருகிறார். எழுத்தின் மூலம் மட்டுமல்ல; பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமும் அவர்களுக்கு வருவாய்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இளம் எழுத்தாளர்களை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுடைய எடிட்டர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

கே: எழுத்தாளர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ப: எங்களுக்கு நிறைய எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் எழுத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் இங்கு மிகக்குறைவு. எழுத்தின் மூலம் சம்பாதித்தவர்களும் இங்கு அதிகம் இல்லை. ஓய்வு நேரத்தில் எழுதுவது, புகழ், பணம் சம்பாதிப்பதுதான் இங்கு நடைமுறையில் உள்ளது. காரணம், புத்தக விற்பனை, ராயல்டி போன்றவை.

எழுதுவதையே நோக்கமாக் கொண்டு, அதற்காகவே கடுமையாக உழைத்து, தரமான, நல்ல நூலைப் படைத்தால், நிச்சயம் எழுத்தாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதற்கு மிகக்கடினமான உழைப்பு தேவை. அதே போன்றுதான் மொழிபெயர்ப்பாளர்களும். பிறமொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் தேவையான மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. காரணம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல புலமை உள்ளவர்கள் அதிகம் இல்லை என்பதுதான். இருக்கும் ஒருசிலரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

கே: நீங்கள் எழுத்தாளர்களுக்கு வழங்கும் ராயல்டி தொகை குறித்து...

ப: நாங்கள் ஒரு புத்தக விற்பனையில் ராயல்டி தொகையாக 10% வழங்குகிறோம். உதாரணமாக வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் ராயல்டி ஒரு எழுத்தாளர் பெற வேண்டுமானால் 100 ரூபாய் விலையுள்ள ஒரு புத்தகம் 20,000 பிரதிகள் விற்றால்தான் சாத்தியப்படும். சென்ற ஆண்டு எங்களுடைய எழுத்தாளர்களில் ஐந்து பேருக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சரூபாய் ராயல்டி கிடைத்துள்ளது. சுமார் பத்து எழுத்தாளர்களுக்கு ஒரு லட்சத்திற்குக் குறையாமல் ராயல்டி கிடைத்துள்ளது. ஒரு எழுத்தாளரே பல புத்தகங்களை எழுதுவதன்மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

சான்றாக எங்களுடைய 'அள்ள அள்ளப் பணம்' என்ற நூல் ஆண்டுக்குப் பதினைந்து முதல் இருபதாயிரம் பிரதிகள் விற்பனை ஆகிறது. இது பாகம் 1, 2, 3 என வெளியாகி தற்போது நான்காவது பாகமும் வெளியாக இருக்கிறது. இவ்வாறு பல புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகின்றன. இந்த ஆண்டு ராயல்டி தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை. நிச்சயம் அதில் ஒரு லட்சம் ராயல்டி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்றே நம்புகிறேன்.

கே: பிற கவர்ச்சிகள் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் இளம் வாசகர்களிடையே புத்தகங்களுக்கு வரவேற்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ப: தற்காலத்தில் வேலை, கேளிக்கை, அறிவுபெறுவது என எல்லாவற்றுக்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டித்தான் இருக்கிறது. ஆனால் அறிவு என்பது புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் கிடைப்பதில்லை. டி.வி, வானொலி, இணையம் எனப் பல தளங்களில் ஒருவர் அறிவை, தகவல்களைப் பெறமுடியும். ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு துறையைப் பற்றி மிக ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால் படிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. இணையத்தின் மூலம் படிக்கலாமென்றாலும் அதில் கண்வலியிலிருந்து ஆரம்பித்துப் பல பிரச்சனைகள் உள்ளன. பொழுதுபோக்குகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது உண்மை தான். ஆனால் ஒரு புத்தகம் தரும் பரவசத்திற்கு, இனிமையான அனுபவத்திற்கு இவை ஈடாகாது என்பதுதான் உண்மை.

எல்லாவற்றையும் ஒரு டி.வி. சீரியலில் சொல்லிவிட முடியாது. ஒரு அறிவியல் புனைகதையைச் சிறப்பாகச் சீரியலாக்க முடியாது. ஒரு சிறுகதையில், நாவலில் வருவது அனைத்தையும் படம்பிடித்து சீரியலில் காட்ட இயலாது. ஆக, சீரியல் பார்ப்பவர்களை மீண்டும் நாவல், சிறுகதை படிப்பவர்களாக ஆக்க எழுத்தாளர்கள் முயற்சித்திருக்க வேண்டும். அதனைச் செய்யவில்லை. தற்பொழுது அதை நாங்கள் எங்கள் எழுத்தாளர்களுடன் இணைந்து செய்து கொண்டிருக்கிறோம்.

கே: புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

ப: எழுத்து என்பது இலக்கியம் மட்டுமல்ல. கதை, கவிதை மட்டும்தான் படைப்பு என்பதல்ல. எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. நிறையப் படியுங்கள். முக்கியமாக ஆங்கிலத்தில் வரும் புத்தகங்கள் பலவற்றைப் பாருங்கள். மொழி புரியாவிட்டாலும், தெரிந்தவர்களிடம் கேட்டு எப்படி ஒரு புத்தகம் கட்டமைக்கப்படுகிறது, எழுத்து எப்படி எடிட் செய்யப்பட்டு மிளிருமாறு வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று இல்லாவிட்டாலும் நாளை தமிழ்ப் புத்தக உலகம் இப்படித்தான் இருக்கப்போகிறது. அதை நீங்கள் இன்றே புரிந்துகொள்வது நல்லது.

ஒரு புத்தகம் நன்றாக இருக்க வேண்டுமானால் அதற்கு எழுத்தாளர் மட்டுமல்ல; எடிட்டரும் மிக முக்கிய காரணம். புத்தகத்தைச் சிறப்பாக்க உதவுவது ஒரு எடிட்டர்தான். எடிட்டர் பணி என்பது சாதாரணமானது அல்ல. அது வெளியே தெரிவதில்லை. எடிட்டர்தான் ஒரு புத்தகத்தின் முதல் வாசகர். அதில் இருக்கும் நிறை, குறைகளை அவர் தெரிந்துகொண்டு, தொய்வில்லாத, சிறந்த நூலாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்கிறார். புத்தகம் எழுத விரும்புபவர்கள், நல்ல எடிட்டர் ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொள்வது அவசியம். சிறுகதை, நாவல் என்றாலும்கூட.

இன்று எழுத்து என்பது பத்திரிகையில் பத்தி எழுதுவது, தொடர் எழுதுவது, புத்தகங்கள் எழுதுவது, தொலைக்காட்சி, சினிமாவுக்கு எழுதுவது, வலைப்பதிவுகளில் எழுதுவது என்று பரந்துபட்டதாக இருக்கிறது. அனைத்திலுமே கால் பதிப்பது நல்லது.

இரண்டு மொழிகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் மொழிபெயர்ப்புகளில் நீங்கள் கட்டாயம் இறங்கவேண்டும். இன்று மொழி பெயர்ப்புகளின் அவசியம் அனைத்து மொழிகளுக்கும் இருக்கிறது. முக்கியமாக தமிழுக்கு. ஒரு எழுத்தாளர் மொழிபெயர்ப்பில் இறங்குவதா, அது கேவலமில்லையா என்று நீங்கள் ஒருபோதும் நினைக்கக்கூடாது.

கே: நீங்கள் உருவாக்கியிருக்கும் NHM Writer மற்றும் NHM Converter இணைய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: ஆரம்பத்தில் தமிழ்ச் செயலிகளையும், எழுத்துருக்களையும் எங்கள் பதிப்புப் பணிகாகப் பயன்படுத்தியபோது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. நாமாகவே ஒன்றை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் என்.எச்.எம். ரைட்டர், கன்வர்ட்டர் ஆகியவை. எல்லோரும் பயன்படுத்தும்படியாக இவற்றை எங்களுடைய இணையதளத்தில் http://software.nhm.in இலவசமாகத் தருகிறோம்.

தற்போது எல்லா இந்திய மொழிகளுக்குமானதாக அதனை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். ஆங்கில மொழியில் இருப்பது போன்று இன்னும் பலவிதமான பயன்பாடுகளை உருவாக்க இருக்கிறோம். தமிழ்ச்செயலிகள் என்று எதையும் இன்ஸ்டால் செய்யாமலேயே ஃபைலைத் திறந்து அதில் தமிழை தட்டச்சு செய்யுமாறு ஒரு செயலியை உருவாக்க இருக்கிறோம். தமிழ் பிழைதிருத்தி, தமிழ் விவர அட்டவணை (index) போன்றவற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தமிழில் மட்டுமல்ல; பிற இந்திய மொழிகளிலும் இவற்றை உருவாக்க வேண்டியது எங்களது அடிப்படைத் தேவையாயிருக்கிறது.

கே: பதிப்புத் துறையின் எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: பதிப்பகத் தொழில் சூழல் நல்ல வளர்ச்சி காணக்கூடிய ஒரு தொழில்துறை. அதற்கு மேலாக, மக்களை மாற்றக்கூடிய ஒரு துறை. இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுக்கு அடிப்படையாக இருக்கப்போவது பதிப்புத் துறைதான்.

ஆனால் தமிழகப் பதிப்பகங்கள் இந்தச் சவாலை எதிர்கொள்ளும் திறனுடையவையாக இல்லை. ஒற்றை அறையில் தனியாக நாலு பிரதிகளைப் பார்த்து, கொஞ்சம் கடன் வாங்கி, 1000 பிரதிகள் அச்சடித்து, எப்படியடா விற்போம் என்று கவலைப்படுகிறவர்கள்தான் இங்கு அதிகம். ஆர்வம் இருந்தால் போதாது. தேவையான முதலீட்டைப் பெற்று, விற்பனையைப் பெருக்கி, தனது அற்புதமான புத்தகங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது மிக அவசியம்.

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு மூன்று லட்சம் புதிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் தமிழில் நான்காயிரம் புதிய புத்தகங்கள் வெளியானாலே அதிசயம். இந்த நிலை மாற வேண்டும். பதிப்புத் தொழிலுக்கு வெளியாட்கள் நிறைய வரவேண்டும். அவர்கள்தான் புதுமையான கருத்துகளைக் கொண்டு வருவார்கள்.

கே: நியூ ஹொரைஸன் மீடியா பெற்றுள்ள விருதுகள் குறித்து...

ப: அவ்வப்போது சில விருதுகள் கிடைத்துவருகின்றன. சிறந்த பதிப்பகம் என்று சில புத்தகக் கண்காட்சிகளில், பல புத்தகங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இண்டியன் ரைட்டிங் புத்தகங்கள் இரண்டு சமீபத்தில் வோடஃபோன் கிராஸ்வேர்ட் விருதில் ஷார்ட் லிஸ்டில் (மொத்தம் ஆறு புத்தகங்களில்) இரண்டு இடம்பெற்றன. ஆனால் விருது கிடைக்கவில்லை. எங்கள் எழுத்தாளர்களுக்குப் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. பொதுமக்களிடம் பெற்றிருக்கும் வரவேற்புதான் மிகப்பெரும் விருது என்று நான் கருதுகிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் குறித்து...

ப: முதலாவதாக 10 முதல் 12 இந்திய மொழிகளில் புத்தகப் பதிப்பை ஆரம்பிக்க வேண்டும். அடுத்து அறிவுசார் நூல்களை, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் கொண்ட நூல்களை அந்தந்த மொழிகளில் உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, பொருளாதாரம், வணிகவியல் என பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தமிழில் பாடப்புத்தகமே இல்லை என்னும் அவல நிலையை மாற்ற வேண்டும்.

எதிர்காலத்திட்டம் என்றால் உலகளாவிய பதிப்பாளர்களாக நாங்கள் உயரவேண்டும் என்பதுதான். உலகத்திலேயே பெரிய பதிப்பாளர்களாக ரேண்டம் ஹவுஸ். பியர்சன், ஹேர்ஷெட் என்று மிகப்பெரிய பல பதிப்பாளர்கள் உலகளாவிய நிலையில் தரவரிசையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் பதிப்பகங்களில் நியூ ஹொரைஸன் மீடியா முதலிடத்தில் இருந்தாலும், உலகளாவிய பதிப்பகங்கள் வரிசையில் முதல் நூறுக்குள் எங்கள் நிறுவனம் வர வேண்டும். அதுதான் எங்கள் இலட்சியம். குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். அதை விடுத்து இங்கு நாங்கள்தான் நம்பர் 1 என்று கூறிக் கொண்டிருந்தால் இங்கேயே தேங்கிப் போய்விட வேண்டியது தான்.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ப: தென்றல் வாசகர்களை நான் வரவேற்கிறேன். அவர்களில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். உளவியல் நிபுணர்கள், பொறியியலாளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் பல துறைகளில் தாங்கள் பெற்றிருக்கும் அறிவை, அனுபவங்களை, தாங்கள் கண்டறிந்தவைகளை, புது முயற்சிகளை, ஆராய்ச்சிகளை புத்தகமாக எழுதலாம். அவற்றை நாங்கள் வரவேற்கின்றோம். தென்றல் வாசகர்களே எழுத வாருங்கள் என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

பத்ரி அவர்களின் பெரிதினும் பெரிது கேள் என்ற லட்சியம் நிறைவேற வாழ்த்தி, நன்றி கூறி விடைபெறுகிறோம்.

தொடர்புக்கு:
Badri Seshadri
Managing Director and Publisher
New Horizon Media Private Limited
33/15 Eldams Road, 2nd Floor
Alwarpet, Chennai 600 018
Ph: +91-44-4200-9601 /03 /04

இணையதளம்: www.nhm.in
மின்னஞ்சல்: badri@nhm.in

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com