டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
டொராண்டோ கனடாவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஆடிப்பூர விழா. அருணா சாய்ராமின் கச்சேரி. பெரிய பந்தலில் ஐநூறுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தரையில் அமர்ந்திருந்தார்கள். வெளியே ஆடிக்காற்று அமைதியாகவே வீசி கொண்டிருந்தது. எதிரே கூரைமுட்டும் வண்ணத் திரையில் விநாயகர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அருணா சாய்ராம், மிருதங்க வித்வான் திருவாரூர் வைத்யநாதன், வயலின் ஜெயதேவன் ஆகியோருக்கு வரசித்தி விநாயகர் கோவிலின் ஸ்தாபகர் சிவஸ்ரீ. விஜயகுமார குருக்களின் மனைவியாரும், பூஜைக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த டாக்டர். சோமாஸ் குருக்களின் மனைவியாரும் கும்பமளித்து, பூமாலை சூட்டி வரவேற்றனர்.

முதலில் நாட்டையில் 'அம்மா ஆனந்த தாயினி' யைத் துதித்து விட்டு 'பாகாயே நய்ய'வை சந்த்ரஜோதியில் பாடி விநாயகரை வழிபட்டார் அருணா. பிறகு தந்தை 'சபாபதிக்கு வேறு தெய்வமில்லை' என்று ஆபோகியில் ஆணித்தரமாகச் சொல்லி விட்டு' கதன குதூகலத்தில் பல்லவி வெங்கட்ராமையரின் 'மீனாக்ஷி' பாடலைப் பாடினார். 'ஸ்ரீ சத்ய நாராயணம்' சுப பந்துவராளியில் அழகிய பாடல். 'கனக சபாபதி'யைப் பிறகு தரிசனம் செய்துவிட்டு கபாலி கோவிலுக்குள் நுழைந்தார் அருணா. திருஞானசம்பந்தர் அந்தக்கோவிலுக்கு வந்து சம்பிரதாயமாகப் பல பூஜைகள் செய்து பாடல்கள் பாடினார் என்று விளக்கி, அவர் பாடிய தேவாரத்தைப் பாடினார். இரண்டு சிறுவர்கள், வாலிபர்களாகும் பருவம்தான், சுரேந்தர் சங்கரலிங்கமும், ஜனகன் காந்தனும் கடத்திலும் கஞ்சிராவிலும் புகுந்து விளையாடிவிட்டார்கள்.அருணாவினால் கச்சேரி நடுவிலேயே சிறுவர்களின் தன்னம்பிக்கையையும், கை சுத்தத்தையும் வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிறகு 'ஆடாது அசங்காது' எடுத்துக் கொண்டார் அருணா. பாடல் ஆரம்பிப்பதற்கு முன் ஊத்துக்காடின் வேறு சில பாடல்களையும் இடைச் செருகல்களாகப் பாடப் போவதாகக் கூறி, 'காலில் சிலம்பு கொஞ்ச' ஆடவிட்டு, அடாணாவில் 'லகுவித களப கஸ்தூரி'யின் வாசம் வீச விட்டு, ஹிந்தோளத்தில் 'மகர குண்டல'ங்களுடன் குதிக்கவிட்டு, கண்ணனின் ராச லீலையைப் பாடல்களில் படம் பிடித்தார் அருணா சாய்ராம்.

வந்தது அபங்கம். அதன் வளர்ச்சியை விவரித்தார் அருணா. பழங்காலத்தில் பக்தர்கள் பஜனைக் குழுவுடன் பாண்டுரங்கனைக் காண அலண்டிக்கு வழிப் பயணம் கொண்டு பஜனை பாடிக் கொண்டே செல்வாராம். தலைமைப் பாடகரை, 'மகாராஜ்' என அழைப்பார்களாம். அவரிடம் ஒரு பக்தர் ஒரு பாடல் முடிந்ததும், 'மகராஜ், நீங்கள் இப்போது பாடியது 'மால்கோஸ்' ராகம் போல இருந்தது. ஆயின் சில ஸ்வரங்கள் மாறாக இருந்ததே! அது என்ன ராகம்?' என்று கேட்டாராம். மகராஜ் மிக வருத்தப்பட்டுக் கண்ணீர் விட்டாராம். பக்தர் பயந்து, 'என்ன?' என்று கேட்டவுடன், 'நான் தவறு செய்து விட்டேன். என் பஜனையைச் சரியாகப் பாடியிருந்தால் உங்கள் முன் பரமன் நின்றிருக்க வேண்டுமே அன்றி பாடலின் ராகமல்ல! அப்படி உங்களுக்குத் தோன்றும்படி பாடியது என் குற்றம்தானே' என வருந்தினாராம். அப்படிப் பஜனையில் பாடும் 'தீர்த்த விட்டல' பாடியதும் இறுதியில் 'விட்டல, விட்டல' என ரசிகர்களையும் பாடச் சொல்லி அவர்களும் கைகொட்டிப் பாடியது விண்ணிற்கே கேட்டிருக்கும். அடுத்து வரசித்தி வினாயகரைப்பற்றி கவி வீரமணியின் பாடலைப் பாடினார் அருணா.

'என்ன கவி பாடினாலும்' பாடிக் கேட்டவர்களை உருகவைத்தார். பிறகு நியூயார்க்கில் உள்ள ஒலிப்பதிவுக் கம்பெனி ஒன்று அருணா சாய்ராமின் பாட்டைக் கேட்டதும் இசைநாடா பதிய அவரை அணுகியதைச் சொன்னார். அருணா 'ஓ! நான் ப்யூஷன் போலப் பாடுவேனே!' என்று சொன்னதும் அவர்கள் 'நீங்கள் இப்போது பாடுவதைப் போலவே கர்நாடக இசையே பாடுங்கள்' என்று சொல்லி இசைநாடா பதிந்தார்களாம். அதன் முதல் பாடலான 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்' என்பதை முழங்கினார். இறுதியில் தன்னை உலகிற்குக் காட்டிய காளிங்க நர்த்தன தில்லானாவைப் பாடி கச்சேரியை முடித்தார். இசையும் வர்ணணையும் கலந்த ஒரு தனிப்பட்ட கச்சேரி அது. பாட்டுக்கான தீங்குரலுடன் நாவளமும் கொண்டவர் அருணா சாய்ராம். நிகழ்ச்சியின் இறுதியில் கோவில் ஸ்தாபகர் ஸ்ரீ விஜய குமார குருக்கள் 'சங்கீத வித்வத் சிரோன்மணி' என்ற பட்டத்தை அருணா சாய்ராமுக்குச் சூட்டினார்.

அலமேலு மணி

© TamilOnline.com