சங்கீத கலாநிதி பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைத் தந்தவர். அக்காலத்தில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ்த் திரைப்படங்களுக்கு அளித்தவர். அவருடைய பாடல்களுக்காகவே அக்காலத்தில் ஹரிதாஸ், சிவகவி போன்ற படங்கள் மூன்று வருடங்களுக்கும் மேல் ஒரே அரங்கத்தில் ஓடிச் சாதனை படைத்தன.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் மிக்க சிவன் பாடல்களின் மகிமையைப் போற்றி சிவனுக்கு இசை அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய பேரன் பாபநாசம் அசோக் ரமணி கனடா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, பாரிஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், டென்மார்க் போன்ற நாடுகளில் இசை விழாவை நடத்தி வருகிறார். அசோக் ரமணியும், அவரது தாயார் டாக்டர் ருக்மணி ரமணியும் இணைந்து நடத்தும் சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி சார்பாக, அதன் மூன்றாம் ஆண்டு விழா 2008 ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் டொரொண்டோவில் நடந்தது.
ஆகஸ்ட் 2 அன்று தொடக்க விழா ஆதிபராசக்தி இந்து ஆலயத்தில் நடந்தது. இதில் வாய்ப்பாட்டு, வயலின், வீணை, நடனம், மிருதங்கம் பிரிவுப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கு கீதா ராஜசேகர், சந்தியா ஸ்ரீவத்ஸன், ஸ்ரீகிருஷ்ண கல்யாண சுந்தரம் போன்ற பிரபலங்கள் நடுவர்களாக இருந்தனர்.
ஆகஸ்ட் 3 அன்று யார்க்வுட் நூலக அரங்கத்தில் பாபநாசம் சிவனின் இசைவிழா நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட பல குழந்தைகள் தனியாக பக்க வாத்தியங்களுடன் பாடியது சிறப்பாக இருந்தது. இவர்களுக்கு பக்கவாத்தியமாக ஸரிணி ஸ்கந்தராஜா (வயலின்), மாயூரன் தனஞ்ஜயன், மாயூரன் மனோகரன், யாஞ்சன் ராஜ்குமார், அனிஷ் ஜெயக்குமார் (மிருதங்கம்) வாசித்தனர். அதன்பின் பல கலைஞர்கள் சிறு இசைக் கச்சேரிகள் செய்து அஞ்சலி செலுத்தினர். சாருமதி மனோகாந்தன், சுகலியா ரகுநாதன், விஜயலக்ஷ்மி ஸ்ரீனிவாசம், நிரோஷா, தமினி, அபிஷேக், வைத்தியநாதன், விவேக் மகாதேவன், அபிராமி விவேகானந்தன், ஆதிரை சிவபாலன், தனதேவி மித்ரதேவா போன்ற கலைஞர்கள் சிறப்பாகப் பாடினர். பாலமுரளி வயலின் வாசித்தார். செல்வி ஜனனி லோகேந்திரலிங்கம் அவர்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. பாபநாசம் அசோக் ரமணி, ஜெய்சங்கர் பாலன் வயலினிலும் திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கத்திலும் அஞ்சலி செலுத்தினார்.
கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம் அவர்களுக்கு சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதைத் திருச்சி சங்கரன் அவருக்கு வழங்கி கெளரவித்தபோது, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. திருச்சி சங்கரன் பாராட்டுரை வழங்கினார். லோகேந்திர லிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கனகசபாபதி அவர்களின் பாராட்டுரையும் சிறப்பாக இருந்தது. பிரபல கர்நாடக, திரையிசைப் பாடகர் உன்னிகருஷ்ணன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இருபது சிறப்புமிக்க ஆசிரிய, ஆசிரியைகளை ஒன்று சேர்த்து அவர்களை அந்த மேடையில் கௌரவித்தது மற்றுமொரு சிறப்பு.
மூன்று வருடங்களாக அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கைவாழ் தமிழ் இசை, நடனக் கலைஞர்களை அசோக் ரமணி கெளரவித்து வருகிறார். அன்று மேடையில் பூமணி ராஜரத்னம், ஹம்ஸத்வனி சிங்கராஜா, ப்ரேமா ஸ்ரீகந்தராஜா, கீதா ராஜசேகர், குலநாயகி விவேகானந்தன், சந்தியா ஸ்ரீவத்ஸன், விஜயலக்ஷ்மி சீனிவாசம், லதா பாதா, திருமதி மற்றும் திரு ஸ்ரீக்ருஷ்ணா கல்யாணசுந்தரம், தனதேவி மித்ரதேவா, பராசக்தி விநாயக தேவராஜா, சுரேகா ராதாகிருஷ்ணன், ஜனனி குமார், சித்ராங்கி சுரேஷ்குமார், ருக்மணி பாலசுப்பிரமணியம், ஜெய்சங்கர், வேலாயுதம் பிள்ளை, பாலமுரளி, பாலன் போன்ற பிரபல ஆசிரிய, ஆசிரியைகள் கெளரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் R.N லோகேந்திரலிங்கம், அவரது உதயன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் அனைத்துக் கலைஞர்கள், பெற்றோர்கள், குழந்தைகளுக்கும் தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார் அசோக் ரமணி. |