ஆகஸ்ட் 2, 1008 அன்று ஸ்ரீக்ருபாவின் நடனக் குழும மாணவியான மேக்னா சக்ரவர்த்தியின் நாடக அரங்கேற்றம் ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் நடந்தது. பிரமிக்கத்தக்க வேகமும், அபிநயமும், சுத்தமான அடவுகளும் சுழன்றாடிய லாகவமும் மேக்னாவை ஒரு அரங்கேற்ற மாணவியாக நினைக்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தன. ஸரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, கௌளையில் கணேச வந்தனம், சங்கீரண துருவத்தில் அமைந்த கானடா ராக ஜதிஸ்வரம், ஷண்முகப்ரியாவில் மதுரை முரளிதரனின் வர்ணம், ராக-தாள மாலிகையாக அமைந்த ஸ்ரீ வல்லபாச்சார்யரின் மதுராஷ்டகம், ஹிந்தோளத்தில் அருணாசலக் கவிராயரின் 'ராமனுக்கு மன்னன் முடி', ஹம்ஸாநந்தியில் மதுரை கிருஷ்ணனின் தில்லானா என்று ஒவ்வோர் உருப்படியும் வெகு அழகாக அமைந்திருந்தது.
ஹிந்துஸ்தானி காபியில் முரளி பாடிய 'மொமோ சித்தே நிதி ந்ரித்யே' என்னும் பெங்காலிப் பாடல் வெகு அருமை. அதற்கான நடனத்தில் குரு விஷால் ரமணியின் கற்பனைச் சிறப்பைக் காணமுடிந்தது. கே.எஸ். பாலகிருஷ்ணன் நட்டுவாங்கம், முரளி பார்த்தசாரதி பாட்டு, தனம்ஜயன் மிருதங்கம், வீரமணி வயலின் என மொத்த நிகழ்ச்சியும் மிக நிறைவாக அமைந்திருந்தது.
ராஜா ரெங்கநாதன் |