கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
ஆகஸ்ட் 23, 2008 அன்று கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா Blue Valley NW High School அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிகாகோவின் பெப்பெரப்பே நாடகக் குழுவினர் இரண்டு முழுநீள நகைச்சுவை நாடகங்களை வழங்கினர்.

முதல் நாடகமான 'மாரி+மாரி=மும்மாரி', தற்கால அறிவியல் யுகத்தில், அரசர்களும் புலவர்களும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில் பிறந்தது. மழையில்லாமல், தண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் கோடம்பாக்கத்தை, அதன் மன்னர் கேப்மாரி எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இதன் மையக்கரு. சைதாப்பேட்டை மன்னர் சோமாரிக்கும், கோடம்பாக்கம் மன்னர் கேப்மாரிக்கும் இடையே நடக்கும் மின்னஞ்சல் யுத்தங்கள், அதன் தொடர்ச்சியாக, ராஜ ஜோதிடரும் அரண்மனைப் புலவரும் மழை பெய்வதற்காகச் செய்யும் வினோத உத்திகள் எனப் பல நகைச்சுவைத் திருப்பங்களுடன் நாடகம் வேகமாக நகர்ந்தது.

இரண்டாவது நாடகம் 'பெருங்காயம்', தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைக் கேலி செய்யும் ஒரு சிரிப்புச் சித்திரம். ஒரு மெகாசீரியல் எவ்வாறு உருவாகி, பின்னர் உரு மாறி, திசை மாறி, தடம் மாறி, திக்குத் தெரியாமல் பயணிக்கிறது என்பதைச் சுவாரசியமாகக் காண்பிக்கிறது. நடிகர்-நடிகையர் தேர்வு, பாடல்களை ஒளிப்பதிவு செய்யும் விதம், அடிக்கடி நடக்கும் கதை மாற்றம் என நாடகம் முழுவதும் நையாண்டிக் காட்சிகள்.

அழகான மேடையமைப்பு, யதார்த்தமான நடிப்பு, சிறப்பான நகைச்சுவை, திறமையான இயக்கம் என்று பெப்பெரப்பே குழுவினர் கலக்கிவிட்டார்கள். இவர்களைப் பற்றி அறிய: www.peppae.com

வெங்கட் அருணா, கன்ஸாஸ்

© TamilOnline.com