ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 23, 2008 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஃபுல்லெர்டன் (Fullerton) Campus Theatreல் ஆர்த்தி வெங்கடேஷின் நடன அரங்கேற்றம் நடந்தேறியது. தனது ஒன்பதாவது வயது தொடங்கி ஆர்த்தி, குரு திருமதி ரம்யா ஹரிசங்கரிடம் எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிற்சிபெற்றார்.

இறைவணக்கத்தைத் தொடர்ந்து 'ஆனந்த நர்த்தன கணபதி' (நாட்டை) பாடலுடன் புஷ்பாஞ்சலி. அடுத்து மோகனகல்யாணியில் ஜதிஸ்வரம். சுறுசுறுப்பான நாட்டிய அசைவுகளையும் தாளக்கட்டுடன் கூடிய சுத்தமான அடவுகளையும் ஆர்த்தி வெளிப்படுத்தினார்.

பாபநாசம் சிவனின் நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துக்கு அற்புதமான அபிநயங்களும் அழகிய நிருத்தமும் செய்தார். சுப்ரமண்ய பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்கு அற்புதமாக ஆடினார். கண்ணனின் பொல்லாத்தனத்தை அவர் அபிநயத்தால் கொண்டுவந்த விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆர்த்தியின் அரங்கேற்றம் நடைபெற்றது கண்ணனின் பிறந்த நாள் ஆகும். எல்லோரும் கண்ணனே மேடையில் இருப்பது போன்று உணர்ந்தனர்.

அடுத்து கோபாலகிருஷ்ண பாரதியாரின் 'வருகலாமோ ஐயா' என்ற பாடலில் நந்தனார் இறைஞ்சுவதையும், அவரது பக்தியின் மேம்பாட்டையும், சன்னிதிக்கு வர இயலாமையையும் முகபாவத்தின் மூலம் உணர்த்திய விதம் அருமையிலும் அருமை. பார்க்கிறவர்கள் கண்களில் கண்ணீரை வந்துவிட்டது. இந்தப் பதம் குரு ரம்யா ஹரிசங்கரின் நாட்டியப் பயிற்சிக்குச் சிறந்த அத்தாட்சி.

'இனி என்ன பேச்சிருக்குது' வெகு அழகு. பூர்ணசந்திரிகா தில்லானாவுக்கு இவர் துள்ளலுடன் துரிதகதியில் ஆடிய நடனத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இறுதியாக மங்களத்துடன் தனது குருவுக்கு நன்றி நவின்ற நடனத்துடன் நடன அரங்கேற்றம் நிறைவு பெற்றது.

ஒவ்வொரு பாடலுக்கும் ஆடும் முன்னர் அதன் சாராம்சத்தை குரு ரம்யா ஹரிசங்கர் ஆங்கிலத்தில் கூற அதற்கு ஆர்த்தி வெங்கடேஷ் அபிநயித்தது இந்திய மொழிகளை அறியாதவரும் நடனத்தை ரசிக்க வாய்ப்பேற்படுத்தியது. ஸ்ரீகாந்த் (வாய்ப்பாட்டு), ரம்யா ஹரிசங்கரின் (நட்டுவாங்கம்), பதினான்கு வயதே நிரம்பிய கிரண் ஆத்ரேயா (வயலின்), ஹரிபாபு (மிருதங்கம்), ரகுநந்தன் (புல்லாங்குழல்) ஆகியவை அரங்கேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தன.

ஆர்த்தி வெங்கடேஷின் பெற்றோர் நன்றி கூறினர். ஆர்த்தி வெங்கடேஷ் தனது உரையில் குரு ரம்யா ஹரிசங்கர் தனக்கு குருவாக அமைந்தது தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் எனக் கூறி நெகிழ்ந்தார்.

ஆர்த்தி பயின்ற பள்ளியின் இசைக்குழு சீனாவின் ஒலிம்பிக் முன்னோட்டக் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கபட்டிருந்தது. அந்தக் குழுவில் இருந்த ஆர்த்தி சீனாவிலும், ஷாங்காய் கார்னகி அரங்கிலும் பாடினார். சீனப் பெருஞ்சுவரில் பள்ளியின் இசைக்குழுவோடு பாடிய பெருமையுடன் பெய்ஜிங் ஓபராவையும் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆர்த்தி வெங்கடேஷின் பெற்றோர் வெங்கடேஷ், சுதா இந்த அரங்கேற்றத்துக்குப் பெரிதும் உழைத்தனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன், இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com