தமிழினத்தின் மேன்மையையும் தமிழ்க் கலாசாரத்தின் பெருமையையும் உலகம் முழுவதும் பரவச் செய்யும் விதமாக டென்மார்க் தமிழர்களின் நிதியுதவியுடன் 'இளம்புயல்' என்ற புதிய படம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதுமுகம் வஸந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு இணையாக பூர்ணிதா நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஸ்ரீமன், சிந்துராஜ், ரவி, சுஜிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டென்மார்க்கில் ஆசிரியராகப் பணியாற்றும் கே.எஸ்.துரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவர் இப்படத்தைப் பற்றிக் கூறும்போது, 'நம்முடைய தொன்மையான கலாசாரத்தில் பொதிந்துள்ள முற்போக்கான விஷயங்களை திரையில் காட்டியிருக்கிறோம். படத்தில் பணியாற்றியுள்ள அனைவரும் தமிழர்களே. திருவள்ளுவர், சேக்கிழார், கணியன் பூங்குன்றன் ஆகியோரின் பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளின் பின்னணியில் கதைக்களத்தை அமைத்திருக்கிறோம்' என்றார். ஒளிப்பதிவு: கிச்சாஸ். வசனம்: கண்மணி ராஜாமுகமது. படத்தொகுப்பு: சதீஸ் குரோசோவா. படத்தின் நாயகன் வஸந்தே இசையமைத்துள்ளார்.
அரவிந்த் |