இலையுதிர்காலக் கனிகள்
ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு திசையில்
ஓய்வில்லாமலே செய்கிற பயணம்!
எவ்விதம் முடியும் எங்கே முடியும்
ஒவ்வொரு நெஞ்சும் கொள்வது சலனம்!

போகும் பாதையில் காண்பவர் யாரும்
சேரும் வரையில் வருவதுமில்லை!
வருபவர் யாரும் இன்னொரு திசையில்
வருவார் என்பது நிச்சயமில்லை!

நிச்சயம் இல்லாப் பொழுதுகள் மட்டும்
நித்தம் நித்தமும் பனியாய்க் கரையும் !
நித்தியமில்லாக் காட்சிகள் யாவும்
நீரில் கோலம் நெருப்பில் தாளம் !

இனியொரு சங்கமம் எங்கே என்பது
இலையுதிர்க்காலக் கனிபோல் தோன்றும்!
இனிமைப் பொழுதுகள் என்று வருமோ
எண்ணி எண்ணியே இளகிடும் உள்ளம்!

பழகிய வரையில் உத்தம நெஞ்சும்
விலகிய பொழுதில் கொட்டிய அன்பும்
வாழ்வோ ஏட்டில் எழுதிக்கொள்ளும்!
வாழும் நாட்களின் அழியாச் செல்வம்!

உதயகுமார் J.R.,
சன்னிவேல் (கலி.)

© TamilOnline.com