கோடை விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு வரும் நமது பெற்றோர்கள் பலருக்கு மூட்டுவலியும் நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுவது சகஜம். இந்த வலியின் வேதனையை வார்த்தையில் சொல்வது கடினமாக இருக்கலாம். நரம்பு வலி மற்ற உறுப்புகளின் வலியைவிட மாறுபட்டு உணரப்படுகிறது. நீரிழிவுநோய் உள்ளவர்களிடம் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி (Neuropathy) குறிப்பாக அதிகம் காணப்படுகிறது. 'தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்ற பழமொழியுடன் 'நரம்பு வலியின் வேதனை நரக வேதனை' என்று சேர்த்துக் கொள்ளலாம்.
நியூரோபதி - காரணங்கள்
* நீரிழிவு நோய் (Diabetes Mellitus) * மது அருந்துதல் * வைடமின் - குறிப்பாக வைடமின் B12 - குறைவு * விபத்து * அழுத்தம் தரும் வகையில் படுத்திருத்தல் அல்லது அமர்ந்திருத்தல் * கட்டி அல்லது வேறு காரணத்தால் உடல் உறுப்பு பெருத்து, நரம்பை அழுத்துதல்
இதில் முக்கியமான காரணம் நீரிழிவு நோய். நம்மில் பலருக்கு இந்த நோய் இருப்பதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது அதிகமாகிறது.
நோயின் அறிகுறிகள்
* ஊசிமுனை குத்துவது போல் வலி * உணர்ச்சி இன்றி மரத்துப் போதல் * கை மற்றும் கால் பகுதிகளில் வலி அதிகமாக ஊடுருவுதல் * மூட்டுகளில் இருந்து விரல்களுக்குப் பரவுதல், மெலிதான கையுறை (glove) அல்லது காலுறை (socks) அணிந்திருப்பது போன்ற உணர்ச்சி * நோய் முற்றிய காலத்தில் செயல்பாடு குறைதல். * கை கால்களில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்ச்சி
நரம்புகள் பலவிதம்
நம் உடலின் நரம்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் நடுநரம்புப் பகுதி மூளையிலும் முதுகுத் தண்டிலும் ஓடுகிறது. கை மற்றும் கால் பகுதிகளில் ஓடும் நரம்புகள் peripheral நரம்புகள் எனப்படும். இதைத் தவிர சிறுநீரகப் பை, பெருங்குடல் ஆகியவற்றில் வேலை செய்யவும் நரம்புகள் உள்ளன. இதில் peripheral நரம்புகளே பெரும்பாலும் நியூரோபதி மூலம் பாதிக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு அவ்வப்போது ஏற்படும் நரம்புத் தளர்ச்சி நாளாக நாளாகத் தொடர்ந்து எப்போதுமே இருக்கலாம். பலருக்கு தவறான உடற்பயிற்சி அல்லது தவறான முறையில் கை அழுத்திப் படுத்தல் போன்றவை மூலம் இந்த நரம்புத் தளர்ச்சி அதிகப்படும். உதாரணத்திற்கு, அதிக நேரம் கணினி விசைப்பலகையில் (computer keyboard) வேலை செய்பவருக்கு விரல் நுனிகளில் தளர்ச்சி ஏற்படலாம்.
கால் பாதங்களில் இந்த உணர்ச்சியின்மை அதிகரித்தால் செருப்பு இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. சூடு அல்லது காயம் ஏற்பட்டாலும் அதை அறியாமலே இருக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் பலருக்குச் சரியான உடற்பயிற்சி மூட்டுகளையும் நரம்புகளையும் பலப்படுத்துகிறது. அதன் மூலம் நிவாரணம் கிடைக்கவும் வழி இருக்கிறது.
நோயின் தீர்வு
Tylenol அல்லது Motrin போன்ற வலி மாத்திரைகளை வலி நிவாரணத்திற்கு உபயோகிக்கலாம். இதைத் தவிர நரம்புகளின் உணர்ச்சி சரியாகச் சில மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். Lyrica அல்லது Neurontin என்ற மாத்திரைகள் நரம்பு உணர்ச்சியைச் சரிப்படுத்த உதவுகின்றன. தகுந்த உடற்பயிற்சி மூலமும் நரம்புகளை பலப்படுத்தலாம். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதின்மூலம் இந்த வகை நரம்புத் தளர்ச்சி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம். வைடமின் B12 அளவு குறைவாக இருப்பின், நல்ல காய்கறிகள் பழங்கள் உண்பதின் மூலம் சரிக்கட்டலாம். தேவைப்பட்டால் வைடமின் மாத்திரைகளும் ஊசியும் எடுத்துக் கொள்ளலாம்.
மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். புகைபிடிப்பதால் நரம்புகளின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
தசைகளும் தசைநார்களும் வலுப்பெற அவற்றை நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகள் அவசியம். நீண்ட நேரம் நடத்தல், வேகமான உடற்பயிற்சி ஆகியவைகளும் தசைகளின் வலுவை அதிகப்படுத்தும். ஒரே மாதிரியாக நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ இருப்பவர்களும் இந்தத் தசை நீட்டிக்கும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கீழே கொடுத்துள்ள வலைத்தளத்தைப் பார்த்து அதிலுள்ளது போல தினமும் செய்தால் தசைகள் வலுப்பெறும். ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 வினாடிகள் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைத்தளம்: www.mayoclinic.com
டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன் |