ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் தனது பேரன் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக அவனைத் தொலைவிலிருந்த ஒரு நகருக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்கு வரும் அந்தச் சிறுவன், தாத்தாவுடன் விளையாடியும், அவர் கூறும் கதைகளைக் கேட்டும் பொழுது போக்குவான். அந்த முதியவருக்கு உதவியாக ஒரு கணக்குப்பிள்ளை இருந்து வந்தார். முதியவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்து வந்தார்.
ஒருநாள் திடீரென அந்தப் பெரியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. பேரன் ஊரிலிருந்து வரவழைக்கப்பட்டான். பெரியவர், கணக்குப் பிள்ளையிடம் தன் சேமிப்பாக வைத்திருந்த 1000 பொற்காசுகளைக் கொடுத்தார். பின் தன் பேரனைச் சுட்டிக் காட்டி 'ஐயா, இவன் மிகவும் சிறுவன். பணத்தை சரிவரக் கையாளுமளவுக்குப் பயிற்சி இல்லாதவன். அதனால் இதை நீங்களே வைத்திருந்து, அவன் இளைஞனான பிறகு, உங்களுக்கு விருப்பமான தொகையைக் கொடுங்கள்' என்று கூறி உறுதி வாங்கிக்கொண்டார். கணக்குப்பிள்ளையும் ஒப்புக் கொண்டார். பெரியவரும் மனநிம்மதியுடன் காலமானார்.
வருடங்கள் கடந்தன. நகரத்தில் படித்து வந்த சிறுவன் இளைஞனாகி விட்டான். நல்ல உலக அனுபவமும் அவனுக்கு வாய்த்திருந்தது. ஏதாவது ஒரு தொழில் தொடங்கி நடத்தலாம் என எண்ணியவன், அதற்கான பணத்துக்காக கணக்குப் பிள்ளையை அணுகினான். 'ஐயா, தாத்தா கொடுத்து வைத்த பணத்தைத் தாருங்கள்' என்று கேட்டான்.
கணக்குப் பிள்ளை 100 பொற்காசுகளை மட்டும் அவனிடம் தந்து விட்டு, 'அப்பா, உன் தாத்தா, எனக்கு விருப்பமான தொகையை மட்டுமே உன்னிடம் தருமாறு கூறியிருக்கிறார். அதன்படி எனக்கு விருப்பமான தொகை இந்த 100 பொற்காசுகள்தான். இதை வைத்துக் கொண்டு நீ நிம்மதியாக வாழ்க்கை நடத்து. போய் வா' என்று கூறினார். கணக்குப் பிள்ளை தன்னை ஏமாற்ற முயற்சிப்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனால் கணக்குப்பிள்ளை அவன் என்ன கூறியும் கேட்கத் தயாராக இல்லை. அதனால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடினான் அவன்.
நீதிபதி கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டு விசாரித்தார். கணக்குப்பிள்ளையோ, 'என் செயலில் தவறு ஏதும் இல்லை. எனக்கு விருப்பமான 100 பொற்காசுகளைப் பேரனுக்குக் கொடுத்துவிட்டேன்' என்று கூறினார்.
நீதிபதி அவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார். 'அப்படியானால் மீதித் தொகையான 900 பொற்காசுகள் எங்கே?' என்று கேட்டார். 'நான் எடுத்துக் கொண்டுவிட்டேன்' என்று கூறினார். உடனே நீதிபதி, 'உங்களுக்கு விருப்பமானது என்பதால்தானே அந்தத் தொகையை நீங்களே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், பெரியவருக்கு நீங்கள் அளித்த வாக்குப்படி உங்களுக்கு விருப்பமான தொகையை நீங்கள் பேரனுக்குத் தரவேண்டும். அதன்படி நீங்கள் விருப்பப்பட்டு எடுத்துக்கொண்ட 900 பொற்காசுகளை உடனடியாகப் பேரனிடம் அளிக்க வேண்டும். மேலும், தேவையில்லாமல் பேரனையும், நீதிமன்றத்தையும் ஏமாற்ற முயன்ற குற்றத்திற்கு அபராதமாக மேலும் 100 பொற்காசுகளை வழங்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தார்.
நல்ல தீர்ப்புதானே? சரி, மீண்டும் சந்திக்கலாம். வருகிறேன்.
சுப்புத்தாத்தா |