சூழ்ந்த பரவசமாய்' என்ற தலைப்போடு கவிதை இயற்றப்படும் கணங்களில், இயற்றுபவனுடைய உள்ளத்தில் நிகழும் மாயங்களையும், அது எடுக்கும் பரிமாணங்களையும் பேசத் தொடங்கினோம். கவிதையில் சொல்ஆட்சி என்பது என்ன, சொல்வீழ்ச்சி என்பது என்ன என்பதை வரையறுத்த பின்னர், கம்பனுடைய பாட்டில் 'ஐயோ' என்றொரு சொல் ஆளப்பட்டிருக்கும் இடத்தையும், அமைப்பு முறையால் இதை ஒத்திருக்கும் (structurally similar) வேறுசில பாடல்களையும் ஒப்பு நோக்கி, மற்ற பாடல்களில் எல்லாம் 'இந்தச் சொல், இந்த இடத்தில், இத்தனையாவது சீராக அமையவேண்டும்' என்று முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட பின்னரே அந்தப் பாக்கள் எல்லாம் இயற்றப்பட்டிருக்க முடியும் என்பதை நிறுவி, அதன்பின்னர் 'வெய்யோன்ஒளி' என்று தொடங்கும் இந்தப் பாடலில் வரும் 'ஐயோ' என்றசொல், சொல் வீழ்ச்சியே என்பதனைச் சொல்லி, அந்தப் பாடலை இயற்றிக் கொண்டிருந்த நேரத்தில் கவிஞனுடைய மனத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய 'ஆனந்தக் கனவு' எப்படிப்பட்டதாக இருந்திருக்க முடியும் என்பதைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
##Caption##'ஐயோ' என்ற சொல் பொதுவாக, வெகு அரிதாகவே பழந்தமிழிலக்கியத்தில் ஆளப்பட்டுள்ளது. 'அச்சோ, ஐயோ, என்னேயெற்றவன் எனுஞ்சொல் அதிசயமுற இரங்கல்' என்ற சூடாமணி நிகண்டின் வரையறை மூலம், 'அச்சோ' என்ற சொல்லும் இதற்கு இணைச்சொல்லே என்பது தெரிகிறது. திருவாசகத்தில் அச்சோப் பதிகம் என்றொரு பதிகமே செய்யப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களிலும் 'அச்சோ' என்ற சொல் பெய்யப்பட்டு, வியப்பின் குறிப்பாக வெளிப்படுகிற காரணத்தால் இந்த ஆட்சி, சொல் ஆட்சியே அன்றி, வீழ்ச்சி இல்லை என்பது வெளிப்படை. இன்னம் கொஞ்சம் யோசித்தால்,
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனைகள் அத்தனையும் பொறுத்தாயன்றே இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
என்று ஆறாம் திருமுறையில் (தனித் திருத்தாண்டகம்) நாவுக்கரசர் பேசக் கேட்கிறோம். 'ஒருநெறியில் நில்லாத சிந்தையை உடைய பைத்தியக்காரன், முட்டாள், பேயையும் நாயையும் ஒத்த என்னுடைய பிழைகளைக்கூட பொறுத்தாயே, உய்வித்தாயே, என்னுடைய தகுதிக்கு இது பொருந்துமோ! ஐயோ! இறைவா உன் கருணையின் தன்மையைத்தான் என்னவென்று சொல்வேன்!' கிஞ்சித்தும் தகுதியற்ற (அவருடைய பார்வையில் தகுதியற்றதாக அவர் கருதிக்கொள்ளும்) தன்னையும் ஒருபொருட்டாக வந்து ஆட்கொண்ட இறைவனின் கருணையை எண்ணி நைந்து உருகும் குரல் அந்த 'ஐயோ'வில் கேட்கிறது. நாவுக்கரசருடைய உள்ளுணர்வைச் சுமந்து வருகிறது இந்த ஐயோ. ஆனாலும் இது தேர்ந்தெடுத்துப் பெய்யப்பட்ட ஆட்சிதான். வீழ்ச்சி அல்ல.
கம்பனே இன்னோர் இடத்தில் 'ஐயோ' போடக் கேட்கிறோம். சீதையைக் கவர்ந்து கொண்டு செல்வதற்காக உதவிகோரி மாரீசனிடம் வந்திருக்கிறான் ராவணன். 'யாரென்று ராகவனை எண்ணினீர் ஐயா! இதை அறிந்து சொன்னீரோ, அறியீரோ நீர் ஐயா' என்று அருணாசல கவியின் பாடலைச் சற்று மாற்றிப் பாடியதுபோல் மாரீசன் 'இது வேண்டாமப்பா, விட்டுவிடு' என்று சொல்லிக்கொண்டு வரும்போது,
'வெய்யோர் யாரே, வீர விராதன் துணை வெய்யோர்? ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு அவன் என்றால், உய்வார் யாரே நம்மில் எனக் கொண்டு, உணர்தோறும், நையாநின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ?
'ராவணா, விராதனைவிடவும் கொடியவன், சக்திவாய்ந்தவன் ஒருவன் உண்டா? ராமனுடைய அம்பினால், ஐயோ, அவனும் போய்ச்சேர்ந்தான் என்றால் (அவனுடைய அம்பிலிருந்தும்) உய்பவர்கள் என்றும் யாராவது உண்டா? (ஏதோ நான் ஒருத்தன் அவன் அம்பினால் அடியுண்டு, உயிரோடு தப்பிக் கிடக்கிறேன். என்னோடு அன்று வந்திருந்த சுபாகுவும், அதற்கும் முன்னால் தாய் தாடகையும் ஒரே அம்பினால் உயிரை இழந்தார்கள், என்பதையெல்லாம் எண்ணி) உணர்கின்ற போதெல்லாம் உள்ளம் நைந்து, தளர்ந்துபோய்க் கிடக்கின்றேன். இந்த நிலைமையில், இப்படியும் ஒருவார்த்தை சொல்லி என்னை மேலும் வருத்துகின்றாயே' என்று பேசிக்கொண்டு வரும்போது இடையில் விழும் 'ஐயோ'வைக் கவனியுங்கள். விராதன் போனதற்கு 'ஐயோ' என்று வருந்தும் மாரீசனுடைய உள்ளம் தெரிகிறது; உணர்வு வெளிப்படுகிறது. ஆனால், தெள்ளத் தெளிவாக இது சொல் ஆட்சிதான் என்பது ஐயத்துக்கு இடமில்லாமல் புலப்படுகிறது. கவிஞனுடைய கோணத்திலிருந்து உணர்வைக் காட்டிலும் அறிவே அதிக அளவு விகிதாசாரத்தில் ஈடுபட்டு, சொல்லைத் தேர்ந்திருக்கிறது என்பதைச் சொல்லவேண்டிய தேவையே இல்லை.
திருநாவுக்கரசரின் 'ஐயோ' உள்ளத்தின் உருக்கத்தைக் காட்டுகிறது என்றாலும், நாம் காண விழைகின்ற 'தன்-வசம் இழந்ததும், பர-வசம் அடைந்ததுமான நிலையை முற்றிலும் அடைந்த கட்டம் இது இல்லை என்பது புரிகிறது. கம்பன் பயன்படுத்தியிருக்கும் இரண்டாவது 'ஐயோ' (மேலே சொல்லப்பட்டிருப்பது) சாதுர்யமான பிரயோகம்; தற்செயலாக உணர்வு வெளிப்பாட்டுக்கும் பயன்பட்டிருக்கிறது என்பதும் நிதர்சனமாகத் தென்படுகிறது. I would even say the intellect has gained an edge over the spirit that renders itself unto a surrender. அறிவின் குரலே இங்கு ஓங்கி ஒலிக்கிறது. கம்பனே செய்ததாயினும் இந்த 'ஐயோ' அந்த 'ஐயோ'வுக்கு இணையானதன்று.
##Caption## இதற்கு அடுத்த 'ஐயோ' கம்பனுடைய முதல் 'ஐயோ'வுக்குச் சற்று நெருக்கமானது. திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதி பிரானில் தென்படும் ஐயோ.
ஆலமா மரத்தின் இலைமேல், ஒரு பாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான், கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில், நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!
ஏழு உலகங்களையும் உண்டவன், அரங்கத்தில் அரவின்மேல் துயில்பவன், ஆலிலைமேல் ஒரு குழந்தையாக, கழுத்தில் பளீரிடும் மணியாலான ஆரமும், வெண்மையான முத்துச் சங்கிலியும் அளவில்லாத அழகுமாக, முத்தின் வெண்மைக்கு முற்றிலும் எதிர்வண்ண நீல மேனியாய்க் கிடந்த திருக்கோலத்தை மனத்தில் நிறுத்திய கணத்திலேயே, அந்தத் தோற்றம் அகத்தில் உருவான போதிலேயே, 'ஆனந்தக் கனவில்' நனைந்த அகம் 'ஐயோ' என்று கூவுவதையும், வியப்புக்குறிப்பாகவும் 'இத்தனை அழகை என்னுள் நிறுத்திப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லையே' என்ற ஆதங்கமும் கூடவே ஒலிப்பதைக் கேட்கலாம், 'நிறைகொண்டது என் நெஞ்சினையே' என்று. நிறைமாத கர்ப்பிணி, நிறைகொண்ட சூலின் பாரம் தாங்காது எழுப்பும் 'ஐயோ'வின் பாவத்தைத் திருப்பாணாழ்வாரின் 'ஐயோ' ஒத்து ஒலிப்பதைக் கேட்கிறோம்.
இத்தனை ஐயோக்களைப் பார்த்தோம். இப்போது கம்பனுக்குத் திரும்புவோம். 'வெய்யோன் ஒளி தன்மேனியின் விரி சோதியில் மறை'யுமாறு காடு நோக்கிச் சென்ற ராமபிரானை அகத்தில் நிறுத்தியிருக்கும் கம்பனுடைய குவியம் (focus) முழுக்க ராமன் பேரிலேயே நிற்கிறது. வருணனையில் இறங்கினான் என்றால் அந்தச் சௌந்தரிய ரூபத்தை மனமாரப் பாடி முடிக்க--ஒவ்வொரு முறையும் பத்துப் பாடல்களுக்குக் குறையாமல்--எடுத்துக் கொள்ளும் பிராட்டியார்கூட அவன் கண்ணில் பெரிதாகப் படவில்லை. 'பொய்யோ எனும் இடையாளொடும்' என்றொரு அபூர்வமான பிரயோகத்தோடு பிராட்டியைப் பற்றிய வருணனையை நிறுத்திக் கொண்டான்; இளைய பெருமானையோ, ஒருவிதமான அடைமொழியையும் சேர்க்காமல் 'இளையானொடும்' என்று பேசி நகர்கிறான். எதற்கு இந்த அவசரம்?
அவன் மனத்தை முற்ற முழுக்க நிறைத்திருப்பதோ ராமனுடைய திருக்கோலம் மட்டுமே. ஒளியை மறைத்த ஒளியாக நடப்பவனுடைய மேனிவண்ணம் இப்போது அவன் அகத்தில் வடிவம் பெறுகிறது. 'நீலமேனி, ஐயோ, நிறைகொண்டது என் நெஞ்சினையே' என்று திருப்பாணாழ்வார் ஒரே ஒரு வண்ணத்துக்கே உருகினார் என்றால், கம்பன் காட்டும் வண்ண ஜாலங்கள் எத்தனை! 'மையோ' இவன் மேனிவண்ணம் என்ன கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையைப்போல் கருப்பு என்பேனா; 'மரகதமோ' அல்லது மரகதத்தைப் போல பச்சை என்பேனா, 'பச்சைமா மலைபோல் மேனி' என்று பெரியாழ்வாரை ஒட்டிச் சொல்வேனா; 'மறிகடலோ' அப்படியும் இல்லாவிட்டால், இவன் நீலமேனியன், 'கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினயே' என்று இளங்கோவாகப் பேசவா; அப்படியும் இல்லாவிட்டால் 'மழைமுகிலோ' மைக் கருப்பு இல்லாமல், நீரால் நிறைந்து வெடித்துச் சிதறிப் பொழியத் தயாராகக் காத்திருக்கும் இருண்ட, அடர்ந்ததாக இல்லாவிட்டாலும், ஆழமான கருப்பாக விளங்கும் கார்முகில் என்று சொல்லவா, என்ன சொல்வேன்! இந்த வண்ணம் எந்த வண்ணம்!
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ ? மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக் கண்டேன்.'
அகலிகை சாப விமோசனம் ஆன சமயத்தில் இந்த 'வண்ணம்' என்ற சொல்லை வைத்து ஒரு விளையாட்டுக் காட்டியவனல்லவா கம்பன்! 'உன் பாத தூளி பட்டு, கல் பெண்ணாக மாறி இவ்வண்ணமாக நிகழந்த இந்த உலகம் எல்லாம் உய்யும் வழியல்லவா! இதை விடுத்து வேறு துயரமான வழிகளை (இந்த உலகம்) அடைவதும் உண்டாகுமா? கரிய நிறத்து அரக்கியுடன் செய்த போரில், கார்முகில்போன்ற நிறமுடைய ராமா! உன்னுடைய கைகளுடைய ஆற்றலைக் கண்டேன். இதோ, இப்போது, கால்களுடைய ஆற்றலைக் காண்கிறேன்-- என்று, விதம், வழி, நிறம், திறம் என்று பலபொருள்களில் வண்ணம் என்ற சொல்லை ஆண்டவன் அல்லனா கம்பன்! இங்கேயோ, இந்த ராமனை என்ன நிறத்தவன் என்று சொல்ல இயலாது தடுமாறுகிறான். கருப்பு, கரியன் என்று சொல்லவா என்று தொடங்குகிறான்; மனம் கேட்கவில்லை. பச்சை நிறம் என்று சொல்லிப் பார்க்கிறான்; மனம் நிறைவு கொள்ளவில்லை; கடல்நீலம் என்று அடுத்ததாக ஒரு வண்ணத்தை இணை சேர்த்துப் பார்க்கிறான். மனமோ கேட்க மாட்டேன் என்கிறது. மழைமுகில் என்று சொல்லவா என, மைக்கரி இல்லாத, ஆனாலும் அடர்ந்த கருமையுள்ள பொருளைப் பற்றி யோசிக்கிறான். கடைசியில் எதுவுமே அவனுடைய வருணனைக்குள் சிக்கவில்லை. 'ஐயோ' என்று நிற்கிறான் கவிஞன். நான் ஒன்று சொல்வேன். மற்ற பாடல்களில், இந்தப் பதின்மூன்றாவது சீரில் இன்ன சொல்லை அமைக்கவேண்டும் என்று நினைத்துத் திட்டமிட்டு, அதற்கேற்பப் பாடலின் மொத்த அமைப்பையும் உருவாக்கிக் கொண்ட கம்பன், இந்தப் பாடலில் பன்னிரண்டாவது சீரை எழுதிமுடிக்கும் வரையில்கூட அவனுக்கு இந்த 'ஐயோ' என்று சொல் மனத்தில் உதித்திருக்க வாய்ப்பே இல்லை. பேசிக் கொண்டிருக்கும் பொருளோ ராமன். அவனைப் பேசும்போது இந்தச் சொல்லை, அரிதிலும் அரிதாக, அதுவும் தன்னைக் குறிக்க மட்டுமே கவிஞர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு சொல்லை, ராமனை நோக்கிப் பயன்படுத்த அவன் மனம் முதலில் திட்டமிட்டிருக்காது. இது கைநழுவி விழுந்த சொல்.
என்னென்னவோ வண்ணங்களை என்மனத்தில் தோன்றி நிற்கும் இந்த மூர்த்தியின் வண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து ஓய்ந்துவிட்டேன். ம்கூம். இதற்குமேலும் முயல என்னால் முடியாது. 'இவன் அழகு என்பது ஓர் அழியா வடிவுடையான்' என்று சொல்லி, தன்னுடைய வருணனை முயற்சியையே கைவிடுவதுபோல வார்த்தை விழுகிறது. 'இதற்குமேல் சொல்ல என்னால் முடியவில்லை' என்று கவிஞன் தன்னுடைய இயலாமையைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொள்கிறான்.
இயலாமையைப் பெருமிதத்துடன் ஒப்புக்கொள்வதா என்று கேட்கிறீர்களா? பாஞ்சாலி சபதத்தின் குறிப்புரைகளை பாரதி எழுதியிருக்கிறான் அல்லவா, அங்கே ஒரு சூரியாஸ்தமனக் காட்சியை உரைநடையில் தீட்டுகிறான் பாருங்கள். நீண்ட வருணையின் கடைசிப் பகுதியை மட்டும் தருகிறேன். 'எத்தனைவகை நீலம்! எத்தனை விதச் செம்மை! எத்தனைவகைப் பசுமை! எத்தனை வகைக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்க ஜரிகைக் கரைபோட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கிலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம், போ, போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது' என்றவாறு இரு கரங்களையும் உயர்த்தித் தலைக்குமேல் குவித்து வணங்கி நிற்கிறானே, இந்த வருணனையிலேயே அற்புதமான பகுதி எது என்று கேட்டால், அந்த 'போ போ, என்னால் அதை வர்ணிக்க முடியாது' என்று சொல்கிறானே, அந்த இடம்தான் என்று சொல்வேன். நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.
அப்படித்தான் இந்த 'ஐயோ'. எப்போது 'முடியவில்லை' என்று சொல்கிறானோ, அப்போதே வெல்கிறான் என்ற அதிசயமான உண்மையையும் நிலைநிறுத்திக் காட்டுகிறான் கம்பன். 'தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்' என்று 'கண்ணன்--என் சீடன்' பாடலில் வரும் கண்ணனாகிய சீடன் 'குரு'வாகிய பாரதிக்கு உபதேசம் செய்வதைப் போல்.
நல்ல கவிதை உருவம் பெறும் விதத்தையும், அது உருப்பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் கவிஞனுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான சுழிப்புகளையும் அலை களையும் ஆர்ப்பரிப்புகளையும் விந்தையிலும் விந்தையான காட்சிகளையும், 'ஆனந்தக் கனவுபல காட்டல்' என்ற தொழிலுக்குள் அவன் அகப்பட்டுக் கொண்டு அலைபட்டு, பர-வசத்தில் மிதந்து, நிலைகொள்ளும் விதத்தையும் ஒரு துளியளவு பார்த்தோம். இனி, அடுத்த நிலைக்குப் போவோம்.
ஹரி கிருஷ்ணன் |