ராஜபோக ரயில் பயணங்களில் - 2
ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

ஜூனாகத் சோமநாதர் ஆலயம்

பின்னர் ஜூனாகத் சோமநாதர் ஆலயத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. ஜூனாகத்தில் ஆரத்தி எடுத்து பெண்கள் எங்களை வரவேற்றனர். அக்காலத்தில் ஹைதராபாத் நிஜாம் போல ஜூனாகத் நவாபும் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொள்ளவே விரும்பினார். ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை. மக்கள் கிளர்ச்சி செய்தவுடன் நவாப் தன் உறவினர்களுடன் சொத்துக்களை அள்ளிக்கொண்டு வெகு அவசரமாகப் பாகிஸ்தானுக்கு விமானத்தில் பறந்து விட்டார்.

நவாபின் திடீர்ப் பயணத்திற்கு சான்றாக ஜூனாகத் அரசவையும், கொலுமண்டபமும் அப்படியே இருக்கின்றன. சரவிளக்குகள், சுவரில் சித்திரங்கள், புகைப்படங்கள், உடைவாள்கள், நவாப் அமரும் புலி ஆசனம் என யாவும் அன்று இருந்தது இருந்தபடியே இன்றும் இருக்கிறது. பேனசீர் புட்டோவின் பாட்டனாரின் புகைப்படத்தையும் அங்குக் காண முடிந்தது. நாட்டுப்பிரிவினையின் போது அவர் ஜூனாகத்தின் முதன்மந்திரியாக இருந்ததையும், ஜூனாகத்தின் குடும்பம் கராச்சி செல்வதற்கும் அவரே காரணகர்த்தராக இருந்தார் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அவர்கள் குஜராத்திலிருந்து சென்றவர்கள் என்பது எனக்கு முன்பே தெரிந்ததுதான்.

##Caption## முன்னாள் ஜூனாகத் நவாப்களின் சமாதிகளைச் சென்று பார்த்தோம். அவை மத்தியகால இந்திய-இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டானவை. உயரமான கோபுரத்தில் ஏறி அதன் உச்சியிலிருந்து முழுநகரத்தையும் பார்ப்பது சுவையான அனுபவம். மாலையில் புராதனமான சோமநாதர் ஆலயம் வந்து சேர்ந்தோம்.

இந்தியாவின் மிக முக்கியமான கடற்கரைக் கோவில்களில் சோமநாதர் ஆலயமும் ஒன்று. இது அரபிக்கடலைப் பார்த்தவாறு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. பண்டைய இந்தியாவில் ஏராளமாகச் செல்வம் கொட்டிக் கிடந்த கோவில் இது. பலமுறை கொள்ளையிடப்பட்டு சூறையாடப்பட்டது. பதினேழு முறை மீண்டும் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது. முகம்மது கோரி, முகம்மது கஜினி இருவரும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் கோவிலில் இருந்த தங்கத்தையும் சொத்துக்களையும் செல்வத்தையும் மாறிமாறிப் படையெடுத்து வந்து கொள்ளை அடித்துச் சென்றனர். கடைசியாகப் பதினாறாவது நூற்றாண்டில் நடந்ததுதான் மிகப்பெரிய கொள்ளை. அதிலிருந்து இனி கோவிலை மீண்டும் கட்டுவதில்லை என்று மக்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். பல அர்ச்சகர்கள் கொல்லப்பட்டனர். பெருமளவில் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்துகொள்வதும் நடந்தது. தப்பிப் பிழைத்த அர்ச்சகர்கள் வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஓடிவிட்டனர். பலர் மஹாராஷ்டிரத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் சென்றனர். அவர்களில் அர்ச்சகர் வேலை கிடைக்காதவர்கள் தென்னிந்தியாவில் நடைபெற்ற ஆலயத் திருப்பணி வேலைகளில் ஈடுபட்டனர். காலப்போக்கில் இவர்களில் சிலர் சிற்ப வேலைகளைக் கற்றுக்கொண்டு கோவில் சிற்பிகளானார்கள். இங்கு ஸ்தபதிகள் என்ற வகுப்பு இருக்கிறது. அவர்கள் தங்களை சோமநாதர் கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர்களின் சந்ததியினர் என்று சொல்லிக் கொள்கின்றனர். இந்தியாவின் இதர பகுதிகளில் சோம் பிராமணர்கள் என்று பலர் வசிக்கின்றனர். அவர்களது மூதாதையர்களும் சோமநாதர் கோவிலிலிருந்து வந்த அர்ச்சகர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.

இவற்றாலும், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதரவின்மையாலும் அடுத்த நானூறு ஆண்டுகள் சோமநாதர் கோவிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்யும் பணி சாத்தியமில்லாது இருந்தது. அத்தனை நூற்றாண்டுகளும் அது பாழடைந்தே கிடந்தது. சென்ற நூற்றாண்டில் 'சோமநாதர்', ராணி அகில்யாபாயின் கனவில் தோன்றி தனக்குக் கோவில் கட்டும்படி கேட்டுக்கொண்டாராம். பழைய கோவிலில் கைவைக்காமல் அதற்கு அருகிலேயே சிறியதாக ஒரு கோவிலை அகில்யாபாய் நிர்மாணித்தார். (இதேபோல் அகில்யாபாய் 'காசிவிஸ்வநாத'ருக்கும் வாரணாசியில் ஒரு கோவில் கட்டினார்.) குஜராத் மண்ணின் மைந்தரும் நவீன இந்தியாவை நிர்மாணித்தவர்களில் ஒருவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, அரபிக்கடல் ஓரத்தில் சோமநாதருக்கு மீண்டும் கோவிலைக் கட்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சுதந்திரம் கிடைத்த உடனேயே முன்னர் கோவில் இருந்த இடத்தில் புதிதாகக் கோவில் நிர்மாணிக்க உத்தரவிட்டார். அவரது நேரடி மேற்பார்வையில் நிர்மாணப்பணிகள் தொடங்கின. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் போய் வசித்து வந்த புராதன அர்ச்சகர்கள் குடும்பச் சந்ததியினர் மீண்டும் சோமநாதபுரம் குடியேறினர். மீண்டும் கோவில் மணிகள் ஒலிக்க ஆரம்பித்தன.

பஞ்சாப் சிங்கம் என்று பெயர் பெற்ற மகாராஜா ரஞ்சித்சிங் பிற்காலத்தில் ஆப்கனிஸ்தானத்திலிருந்து பெருமளவு தங்கத்தையும் சோமநாதர் ஆலயத்தின் பொற்கதவுகளையும் மீட்டுவந்தார். ஆனால் அவர் அவற்றைத் திருப்பித் தருவதாக அறிவித்த சமயம், ஆலயம் இடிபாடாகக் கிடந்தபடியால் அர்ச்சகர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவற்றை மகாராஜாவே உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். பின் அந்தத் தங்கம் அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில் கோபுரங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டது. அசல் தங்கக் கதவுகள், பொற்கோவிலின் வாயில்களில் பொருத்தப்பட்டன. அவற்றை இன்றும்கூட நாம் பார்க்க முடியும். சோமநாதபுரத்தைப் பார்த்த பின்னர் நாங்கள் சொகுசு ரயிலுக்குத் திரும்பினோம்.

கிர்காடு

நான்காவது நாள் அதிகாலை கிர் காட்டின் ஓரமாக உள்ள சசான் என்ற சிறிய கிராமத்திற்குச் சென்றது எங்கள் ரயில். கிர், இந்தியாவிலேயே புகழ்பெற்ற சிங்கச் சரணாலயங்களில் ஒன்று. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. எங்கள் பயணத்தில், கம்பீரமான நீலநிறக் காளையைப் பார்த்தோம். அது உயரமாகவும் அழகாகவுமிருந்தது. சிறுத்தைகள், பாம்புகள், பலவகை மான்களைக் கண்டோம். கடைசியாக ஒரு சிங்க ராணியை அதன் இரண்டு குட்டிகளுடன் பார்த்தோம். பின் ரயிலுக்குத் திரும்பினோம். ரயில் வனத்தின் வழியாக மணிக்கு இருபது கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்ததால், ரயில் பெட்டியில் அமர்ந்தபடியே ஜன்னல் வழியாக அழகு கொஞ்சும் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க முடிந்தது. வன விலங்குகளுக்கு விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரயில் மிகவும் மெதுவாகவே சென்றது. பிறகு, எங்களது அடுத்த இலக்கான டையூ சென்றடைந்தோம்.

டையூ

டையூ மிக வசீகரமான, சிறிய தீவு நகரம். அழகானதாகவும், தூய்மையானதாகவும், இருந்தது. பாண்டிச்சேரியைப் போலவே கடற்கரை ஓரமாக நடந்து செல்ல முடியும். இங்குள்ள பழங்காலத்துச் சிறை தற்போது கிடங்காகப் பயன்படுகிறது. இப்போது சிறை கோட்டைக்குள் இருக்கிறது. அதற்குள் அநேக கட்டிடங்கள் கொண்ட பெரிய வளாகம் அடங்கியுள்ளது. கோட்டையின் எந்தப் பகுதியில் நின்று கொண்டும் பரந்த கடலின் இயற்கை அழகைக் கண்டு களிக்கலாம். அங்கிருந்து சூரியன் மேற்கில் மறைவதையும், அப்போது வானம் சிகப்பு, ஆரஞ்சு வண்ண விந்தைகள் காட்டுவதையும், பிறகு கடல் நீலவண்ணப் போர்வையைப் போர்த்திக் கொள்வதையும் பார்த்து மகிழ்ந்தோம்.

##Caption## மாதாகோவில் வழியே செல்லும்போது அங்கு போர்ச்சுகீசிய வழமைப்படி நடந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் பேறு எங்களுக்குக் கிடைத்தது. இந்தியாவில் போர்ச்சுகீசிய முறையில் வழிபாடு நடத்தும் ஒரே மாதாகோவில் இதுவாகத்தான் இருக்கும். அங்கிருந்தவர்கள் மதப்பற்றுள்ளவர்களாகவும் தெய்வ பக்தியில் திளைத்ததவர்களாகவும் திகழ்ந்தனர். இன்னமும் அங்கு போர்ச்சுகீசிய மொழி பேசும் பதினேழு குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நான் கண்டுபிடித்தேன். பழைய பள்ளிக்கூடங்கள், கன்னியா மடங்கள், அலுவலகங்கள் போன்ற பழமையான மாளிகைகளும் அங்கு இருக்கின்றன. மாவட்ட ஆட்சியாளரின் அலுவலகம் அங்கிருப்பதால் அந்த நகரம் மேலும் சிறப்புப் பெறுகிறது.

டையூவில் சாராயக்கடைகளும், தங்கி மது அருந்தும் மாளிகைகளும் ஏராளமாக உள்ளன. இங்கு மக்கள் மதுவில் மயங்கிக் களிக்கின்றனர். பொன்னாலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட நகைகள் மிகவும் நியாயமான விலையில் இங்கு கிடைக்கின்றன. எங்களில் சிலர் வெள்ளியில் செதுக்கப்பட்ட வளையல்களையும் தங்கத் தோடுகளையும் வாங்கினோம். இந்தப் பயணத்தில் எங்களை மிகவும் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

பாலிடானா

ஐந்தாவது நாள் அதிகாலையில் புண்ணிய யாத்திரை நகரமான பாலிடானா வந்து சேர்ந்தோம். சமணர்களின் முக்கிய புனித யாத்திரைத் தலங்களில் இது ஒன்று. ஒரு குன்றின் உச்சியில அற்புதமான ஆலய வளாகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குன்றின் உச்சியை அடைய ஆயிரத்து ஐநூற்று எழுபத்தாறு படிக்கட்டுகள் ஏறியாக வேண்டும். ரயில்நிலையத்திலிருந்த குதிரைகள் பூட்டிய சாரட் மூலம் குன்றின் அடிவாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்களை உயரே கொண்டு செல்ல நால்வர் சுமக்கும் டோலி பல்லக்கு அடிவாரத்தில் தயாராக இருக்கிறது. அங்கேயே, நடந்து செல்கிறவர்களுக்குத் தேவையான கான்வாஸ் காலணியும் ஊன்றுகோலும் வாடகைக்குக் கிடைக்கிறது.

புனிதத் தலத்துக்கு முடிந்தவரையில் நடந்து செல்வதே உன்னதமானது என்ற நம்பிக்கை நிலவி வருவதால், நான் நடந்து செல்ல முடிவு செய்தேன். ஏறிச்செல்வது கடினம்தான். ஆனால் மிக இன்பகரமானது. மேலிருந்து பார்க்கும்போது தெரியும் காட்சி நாடக அரங்கம் போன்று தோன்றுகிறது. கோவில்கள் அனைத்தும் தெய்வாம்சம்தான். மகாவீரர் - சமண தீர்த்தாங்கரர்களில் இறுதியானவர் - இங்கேதான் ஞானோதயம் பெற்றார் என்பதை அறிந்தபோது இதயம் நெகிழ்ந்து உருகியது. குன்றின் உச்சியில் பல்வேறு காலகட்டங்களின் உருவகமாகக் கட்டிடக்கலை பரந்து விரிந்து காட்சி தருகிறது. அங்கு சலவைக் கற்களினால், கருப்புக் கற்களினால் செதுக்கப்பட்டதும், செங்கற்கள், சுண்ணாம்பு, சிமெண்ட் கலவைகளினால் உருவாக்கப்பட்டதுமான பலவித சிலைகள் உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக வரிசை வரிசையாகப் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை மிஞ்சும்படியாக கம்பீரமாக உள்ளன. என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் காணாத மிக வசீகரமான இடம் இது.

பாலிடானாவில் தயாராகும் தயிர் மிகவும் ருசியானது என்று சொல்கிறார்கள். நீண்ட நேரம் சிரமத்துடன் ஏறி உச்சிக்கு வந்த பிறகு அருந்திய அந்தத் தயிர் உண்மையாகவே தேவாமிர்தமாக இருந்தது. பாலிடானாவின் தயிர் விற்கும் பெண்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட படிகள் தாண்டி உச்சிக்கு வந்து தயிர் விற்கிறார்கள். ஒரு தட்டு தயிரை கழே ஐந்து ரூபாய்க்கும் குன்றின் உச்சியில் பத்து ரூபாய்க்கும் விற்கிறார்கள். குன்றின் உச்சியில் உண்மையாகவே நீங்கள் பசியால் களைத்திருக்கும் போது அந்தத் தயிரைச் சாப்பிடுவதைத் தவிர வேறு எதுவும் சுகமானது இல்லை. பாலிடானாவில் பெண்களுக்கான பைகளையும் பூவேலை செய்யப்பட்ட வெல்வெட் துணிகள் மற்றும் குஜராத் பாணி துணிகளையும் வாங்கலாம்.

ஆங்கில மூலம்: சி.கே.கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com