நடமாட முடியாமற் போவதை யாரும் விரும்புவதில்லை. நோய்வாய்ப் படாமல், மற்றவர்களுக்கு பாரமாய் இல்லாமல் போய்ச்சேர வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். அது சாத்தியமாக வேண்டுமென்றால் பக்கவாதம் என்று சொல்லப்படும் Stroke வராமல் தவிர்க்க வேண்டும். Stroke என்று சொல்லப்படும் இந்த நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி எப்படி, யாருக்கு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்
இரத்த நாளங்களில் அடைப்பு (Ischemic stroke)
இரத்த நாளங்களில் இருந்து இரத்தக் கசிவு (Hemorragic stroke)
இரத்தக்கட்டி உடைபட்டு, பரவி சிறிய நாளங்களை அடைத்தல் (Embolic stroke)
பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
கீழ்க்கூறிய நோய்கள் உள்ளவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.
உயர் இரத்த அழுத்தம் (Hypertension) நீரிழிவு நோய் அதிகக் கொழுப்பு சத்து இரத்தக்கசிவு மற்றும் இரத்த அடைப்பு நோயின் அறிகுறிகள் (Bleeding and clotting disorders) புற்றுநோய்
பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
மேற்கூறிய மூன்று வகை பக்கவாத நோய் களும் வெவ்வேறு விதமாக வெளிப்படலாம்.
இரத்த நாளங்களில் அடைப்பு: இந்த வகை இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் உடையவர் களைத் தாக்க வல்லது. Atherosclerosis என்று சொல்லப்படும் அடைப்பு மூளையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதே விதமான அடைப்பு இதய நாளங்களை அடைத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகையால் மாரடைப்பு வந்தவர்களுக்கும், மாரடைப்பின் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பவர்களுக்கும் இந்த வித பக்கவாதம் அதிகமாக ஏற்படுகிறது. முதலில் வாய் கோணலும், பேச்சுத் தடைபடுதலும், பின்பு கை மற்றும் கால் விளங்காமல் போவதும் இந்த விதப் பக்கவாத்தின் தன்மையாகும். மிகக் குறுகிய காலத்திலேயே இந்தப் பக்கவாதம் முழு வீச்சை அடைந்து விடும். ஆகையால் முதல் அறிகுறியிலேயே 911 அழைப்பதின் மூலம் நோயின் தீவிரம் முற்றுவதற்குள் தீர்வு காண இயலும். நோய் ஆரம்பித்து ஒருமணி நேரத்துக்குள், TPA என்ற மருந்து செலுத் தினால் இந்த நோய் முற்றாமல், கை கால் செயலிழக்காமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த TPA மருந்து கொடுக்க இயலும். ஆனால் நோயாளி தகுந்தவரா என்ற தீர்வை மருத்துவரே செய்ய இயலும். ஆகையால் தாமதமின்றி 911ஐ அழைக்க வேண்டும். இந்த முதல் ஒருமணி நேரத்தை ‘Golden Hour’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.
இரத்த நாளங்களில் இருந்து
இரத்தக் கசிவு: இந்த வகை பெரும்பாலும் இரத்த அழுத்தம் அதிகமாகும் போது ஏற்படுகிறது. இதைத் தவிர இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உடையவரையும் தாக்குகிறது. இந்த வாய்ப்புகள் பெரும்பாலும் மரபணு மூலம் பெறப்படும் நோய்களாக இருக்கின்றன. ஆனால் முக்கியமாக இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாத காரணமே இந்த வகைப் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் இடத்தைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் வேறுபடும். ஒரு சில முக்கிய இடங்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், மூச்சு விடுவதுகூட நின்று விடலாம். வேறு சில இடங்களில் ஏற்பட்டால் நினைவு தப்பலாம். பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையினால் குணப்படுத்த முடியாத பக்கவாதமாக இந்த வகையைச் சொல்லலாம். மிக துரித காலகட்டதில், ஒரு சில நொடிகள் முதல் மணித்துளிகளில், இந்த வகை இரத்தக்கசிவு மரணத்தை ஏற்படுத்தலாம். இந்த வகை பக்கவாதத்தை தவிர்க்க ஒரே வழி இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதுதான்.
இரத்தக்கட்டி உடைபட்டு, பரவி சிறிய நாளங்களை அடைத்தல் (Embolic stroke): இந்த வகை பெரும்பாலும் Atrial Fibrillation என்று சொல்லப்படும் இருதயத் துடிப்பு தாறுமாறாக இருக்கும் நோய் உடையவர் களைத் தாக்குகிறது. இந்த நோய் உடையவர் களுக்கு பக்கவாத சாத்தியக்கூறுகள் 17 மடங்கு அதிகரிக்கின்றன. இதைக் குறைக்க ஒரே வழி Coumadin என்ற மருந்தை உட்கொள்வது மட்டுமே. ஆனால் இந்த மருந்து உட் கொள்பவர்கள் வாராவாரம் தங்கள் இரத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். INR என்ற எண்ணிக்கை இரத்த ஓட்டத்தின் அளவைக் குறிக்கின்றது. இந்த எண் 2-3 க்குள் இருக்கும் வரை பக்க வாதத்துக்கான வாய்ப்பு குறைகின்றது.
பக்கவாதத்தின் அறிகுறிகள்:
வாய் கோணுதல் பேச்சு குளறுதல் மயக்கம் வருதல் கை அல்லது கால் செயலிழத்தல் சமநிலை தவறிய நடை (off balance) பார்வை மங்குதல் அல்லது இரண்டாகத் தெரிதல் (double vision) தாங்க முடியாத தலைவலி
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே 911ஐ அழைப்பது நல்லது.
தற்காலிக இரத்தை நாள அடைப்பு TIA (Transient Ischemic Stroke):
மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டு சொற்ப காலகட்டத்தில் சரியாகப் போனாலும் மருத்துவரை நாடுதல் வேண்டும். 24 மணி நேரத்தில் முற்றிலும் குணமாகிவிடும் பக்கவாத நோயை TIA என்று அழைப்பதுண்டு. இது ஒரு முன்னெச்சரிக்கை அழைப்பாக கருதப்படுகிறது. அதனால் அவசர சிகிச்சைப் பகுதிக்கு (Emergency room) சென்று தகுந்த சிகிச்சை செய்வதின் மூலம் முற்றிய பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இந்த வகை நோய்வாய்ப்பட்டவர் 1 அல்லது 2 நாட்கள் வரை மருத்துவ மனையில் இருக்க நேரிடலாம். கழுத்துப் பகுதியில் இருக்கும் Carotid artery என்ற இரத்த நாளத்தை சோதித்து, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமும் பக்கவாதம் வருவதைத் தவிர்க்க முடியும்.
தாரக மந்திரம்
முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை: இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள் பக்கவாத அறிகுறி ஏற்பட்டால் உடனே 911ஐ அழைத்து விடுங்கள்
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |