புலிகள் ஆதரவு பிரச்சாரம்!
இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தை சிங்கள விமானங்கள் குண்டுவீசி அங்குள்ள அப்பாவி மாணவிகளை கொன்று குவித்ததை தொடர்ந்து இலங்கையில் சிங்கள ராணுவத் தினருக்கும், விடுதலை புலிகளுக்கும் பலத்த மோதல்கள் உருவாகியுள்ளது.

இலங்கை ராணுவத்தினரின் கொடூர செயலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி, அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தை இயக்கத்தின் தலைவர் திருமாவளவன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கி ணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் கோபி அன்னான் உலக நாடுகளின் சார்பில் இலங்கை அரசை வன்மையாக கண்டித்துள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் பதற்றம் வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் அந்நாட்டு அரசுக்கு ராணுவ ரீதியிலான எத்தகைய உதவியையும் மத்திய அரசு செய்யக்கூடாது. ஆயுத விற்பனையில்கூட ஈடுபடக்கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ.

கடந்த 17ம்தேதி (ஆகஸ்ட் 17) இலங்கை படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மேலும் இவ்வியக்கத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் அமைதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, இலங்கையில் தமிழர்களின் நியாயமான உரிமைகளை வழங்க இலங்கை அரசுக்கு இந்தியா எல்லா வகையிலும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறுமிகள் படுகொலை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில், இலங்கை ராணுவத்தின் இக்கொடிய கொலைவெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் பேரவை தெரிவித்துக் கொள்ளுவதாக தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com