ஈழத்துத் தமிழ்ச் சூழலில் 1930 தொடக்கம் சிறுகதை உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படக்கூடிய காலம் உருவானது. இதற்குச் சாதகமாக இரண்டு காரணிகள் அமைந்தன. ஒன்று ஆங்கிலக் கல்வியின் பயனாக எழுத்தாளர்களுக்கு அறிமுகமான சிறுகதை இலக்கியம் பற்றிய பரிச்சயம். மற்றையது தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த சுதந்திரச்சங்கு, கிராம ஊழியன், நவசக்தி, மணிக்கொடி, கலைமகள் போன்ற இதழ்கள் மூலம் அறிமுகமான சிறுகதைகள் ஏற்படுத்திய அருட்டுணர்வு.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரும் இந்த இரு நிலைமைகளுக்கும் ஆட்பட்டிருந்தனர். சிறுகதை எனும் இலக்கிய வகைமையை அவரவர் தத்தமது அறிவு, அனுபவம், திறன் சார்ந்து கையாளக்கூடிய நுட்பங்களுடன் படைப்பாக்க உந்துதல் மேலெழ வெளிப்பட்டனர். இவ்வாறு வந்தவர்தான் இலங்கையர்கோன்.
சிவஞானசுந்தரம் என்னும் இயற்பெயர் கொண்டவர் இலங்கையர்கோன். ஆங்கில மொழி மூலம் கற்றவர். இலங்கை நிருவாக சேவையில் உயர் அதிகாரியாக இருந்து பணிபுரிந்தவர். இவரது அனுபவம் வெவ்வேறுபட்ட களங்கள் நோக்கி கவனம் குவிக்க வைத்தது. ஆங்கில இலக்கிய ஊடாட்டம் இவரது படைப்பாளுமையில் மிகுந்த தாக்கம் செலுத்தியது.
##Caption## இவர் தனது 18வது வயதில் எழுத்துலகில் நுழைந்தார். ஆரம்பத்தில் பல ஆங்கிலக் கதைகளை மொழிபெயர்த்தார். இதன்மூலம் கதைகூறும் முறைகளின் சில அடிப்படையான நுட்பங்களை அறிந்து தெளிந்து கொண்டார். மேலும் இதிகாச சரித்திரக் கதைக்கருக்களை வைத்துக்கொண்டு சுலபமாக எழுதும் பயிற்சியில் ஈடுபட்டார் இவையாவும் 'இலங்கையர்கோன்' என்னும் படைப்பாளியைப் பட்டைதீட்ட உதவின எனலாம். இதனால் நவீன சிறுகதையின் அம்சங்களை, பண்புகளை உள்வாங்கிய படைப்புகள் இவரிடம் இருந்து வெளிவரத் தொடங்கின. இவரது முதற் சிறுகதையான 'மரியாமதலேனா' 1930ல் கலைமகளில் பிரசுரமானது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழகேசரியிலும் சிறுகதைகள் எழுதி வந்தார். வெள்ளிப் பாதசரம், மனிதக்குரங்கு, மச்சாள், சக்கரவாகம், நாடோடி, வஞ்சம், கடற்கரைக்கிளிஞ்சல் முதலான கதைகளில் யாழ்ப்பாணம் களமாக அமைந்தது. இந்த மண்ணின் வாழ்க்கையும் மனித உறவுகளும் கலாசாரப் பெறுமானங்களும் சிறுகதையின் பொருளாக அமைந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையில் புதிய செல்நெறிப் போக்குகள் தடம்பதிக்க இலங்கையர்கோன் காரணமாக அமைந்தார்.
இவரது ஆதர்ச எழுத்தாளராக கு.ப.ராஜகோபாலன் விளங்கினார். இருப்பினும் தனக்கென்று தனித்துவம் வாய்ந்ததொரு நடையைப் பின்பற்றி வந்தார். உரையாடல்கள் வாயிலாகச் சம்பவங்களை விளக்கிச் சொல்லும் திறன் இயல்பாக இருந்தது. இதைவிட மனவுணர்வுகளின் அடிப்படையிலான முரண், மோதல் இவற்றை நுட்பமாகப் பதிவுசெய்யும் ஆற்றல் கொண்டிருந்தார். குறிப்பாக உணர்வு பூர்வமான சித்திரிப்புக்கு அழுத்தம் கொடுத்தார். ஆண்-பெண் உறவு நிலையில் எழக்கூடிய மாற்றங்கள், எண்ணவோட்டங்கள் அற்பமானவையாக இருந்த போதும் அவை எத்துணை அற்புதமான நெருடல்களையும் நெருக்கங்களையும் உருவாக்கும் என்பதனை 'வெள்ளிப் பாதசரம்' கதை நுட்பமாகப் பதிவு செய்கிறது. வாழ்க்கையின் நுட்பமான உணர்ச்சிகளில் உள்நுழைந்து நயம் காணும் ஆற்றல் இருந்த அளவுக்கு, அவற்றின் விளைவாக காத்திரமான படைப்புகள் இவரிடமிருந்து வெளிவரவில்லை. இதே காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்ற ஆளுமைகள் தமிழில் ஏற்படுத்திய புதிய சலனங்கள் புதுப்பார்வை போல் இவரால் புதுத் தடத்தில் கனதியாக வெளிப்பட முடிய வில்லை.
இருப்பினும் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் முகிழ்த்துவந்த படைப்பாக்க வெளியில் இலங்கையர்கோன் ஒரு தொடக்கமாக மெதுமெதுவாக நகர்கின்றார். பெரும் பாய்ச்சல் மடைமாற்றங்களுக்கு தளமாற்றம் செய்தவர் என்று கூறமுடியாது தான். ஆனால் இந்த மரபின் தொடர்ச்சி பின்னால் உருவான படைப்பாக்கச் செழுமைக்கு வளம் சேர்த்தது. மண்வாசனை மிகு இலக்கியங்கள் உருவாக்கப்படுவதற்கும் சாதகமான சூழல்களை உருவாக்கிக் கொடுத்தது.
இலங்கையர்கோன் சிறுகதைகள் மட்டுமின்றி நாடகம் எழுதுவதிலும் அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக இவர் வானொலிக்காக எழுதிய நாடகங்கள் இவருக்குப் புகழ் சேர்த்தன. மேடை நாடகங்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். பச்சோந்தி, லண்டன் கந்தையா, விதானையார் வீட்டில், மிஸ்டர் குகதாசன் ஆகியன யாழ்ப்பாணத்தில் மேடை ஏறிய நாடகங்கள். இவர் ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுப் பின்னர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்துத் தொடர்ந்து நாடகம் எழுதுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது 46வது வயதில் (15.11.1962); காலமானார். இதற்குள் இலங்கையர்கோன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடிப் பரம்பரையுள் ஒருவராக வாழ்ந்துள்ளார். ஈழத்து விமரிசனச் சூழல் இவரை இன்னும் முழுமையாக மதிப்பிடவில்லை. ஆனால் இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது.
இவரது வெள்ளிப்பாதசரம் என்னும் சிறுகதைத் தொகுப்பு 1962-ல் கி.வா. ஜகந்நாதன் அவர்களின் மதிப்புரையுடன் வெளிவந்தது. தற்போது இந்நூல் 3ம் பதிப்பாக மித்ர வெளியீடாக வெளி வந்துள்ளது.
மதுசூதனன் தெ |