ஜூலை 5, 2008 அன்று குமாரி வினிதா ஜனனி கணேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் பெப்பர்டைன் யூனிவர்சிடி ஸ்மோதர்ஸ் ஹாலில் நடைபெற்றது.
நாட்டை ராகப் புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்த நடனம், சாருகேசி ராக ஜதிஸ்வரத்தில் களை கட்டியது. ஜதிகளை வெகு லாகவமாகவும், அநாயசமாகவும் ஆடி ஆச்சரியப்படுத்தினார் ஜனனி. தொடர்ந்து பாரதியாரின் 'சின்னஞ் சிறு கிளியே..' பாடலுக்கு, ஒரு பெண்ணின் சுட்டித்தனத்தை கண்முன் கொண்டுவந்து அவர் நிறுத்தியது சிறப்பாக இருந்தது. ஷண்முகப்ரியா வர்ணம், ஜனனியின் உழைப்பையும், அதில் அவருக்கு இருக்கும் தேர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாய் இருந்தது.
இடைவேளைக்குப் பின் ஆடிய ஜயதேவரின் அஷ்டபதி அபிநயத்தில் அந்த மாயக் கண்ணனின் லீலைகளை, சாகஸத்தை மிக அழகாக அபிநயித்துக் காட்டினார். ‘ஜனனி ஜனனி' கிருதிக்கு (ரேவதி) ஜனனி ஆடிய விதம் பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இறுதி நிகழ்ச்சியாக சுவாதித் திருநாள் மகாராஜாவின் தில்லானா (பூபாளம்) மிக ரசிக்கும்படியாக அமைந்தது.
பாபு பரமேச்வரன் குழுவினரின் இசையும், சேகரின் மிருதங்கமும் நிகழ்ச்சிக்கு மெருகு ஊட்டின. ஜனனியின் குரு பத்மினி வாசன் மிகவும் பாராட்டுக்குரியவர் என்று பாரதி ரங்கராஜன் தனது உரையில் எடுத்துரைத்தது மிகவும் சரிதான்.
இந்திரா பார்த்தசாரதி |