2008 ஜூலை 4, 5, 6 தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா ஒர்லாண்டோவில் (ப்ளோரிடா) இசைப்பேரறிஞர் பெரியசாமித் தூரன் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தூரன் அவர்களின் பாடல்கள் விழா முழுதும் போற்றப்பட்டது. அவர்தம் குடும்பத்தினர் விழா மேடையில் சிறப்பிக்கப்பட்டனர். பேரா. சுப. வீரபாண்டியன் அவர்களின் சிந்தனை பொதிந்த சொற்பொழிவுகளும், இயக்குனர் சீமானின் தமிழுணர்வைத் தட்டியெழுப்பும் இசைகலந்த பேச்சும், இயக்குனர் தங்கர்பச்சானின் யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வெளிப்படையான பேச்சும் இம்மாநாட்டுக்கு வந்தவர்களைக் கொஞ்சமாவது உலுக்கியிருக்கும். பேரா. பாலசுப்பிரமணியத்தின் கணீர்க்குரலில் இசைத்த சிலப்பதிகாரப் பாடல்களும், ஒத்திசைத்த இசைக்குழுவும், கலைமாமணி நர்த்தகி நடராஜின் துடிப்பான பரதமும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன.
தமிழிசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மம்மது அவர்களின் உரை, ஈராயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தமிழிசை, 'கர்நாடக இசை' என்ற பெயரில் இன்று உலவினாலும், தமிழிலக்கியங்களில் தமிழ்ப் பண்களாக விரவிக் கிடப்பதை விளங்க வைத்தது. விழாவின் சீரிய நிகழ்ச்சிகளிடையே மெல்லிய நகைச்சுவையைத் துய்க்கச் செய்தது ஈரோடு மகேஷ் வழங்கிய நிகழ்ச்சிகள். பட்டிமன்றமானாலும், தனிப்பட்ட நகைச்சுவை விருந்தானாலும் அரங்கத்தைக் கலகலப்பூட்டினார் அந்த இளைஞர். நடிகர் நந்தாவின் பேச்சு நம்மை ஈழத்துக்கே கொண்டு சென்றது. ஆணிவேர் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் அவர் அறியவந்த உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழறிஞர் கோ. வேள்நம்பி அவர்கள் தலைமையில் 'தாயே, தமிழே! வருங்காலம் நின் காலம்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. ஈரோடு மகேஷ் தலைமையில் 'இனி, தமிழ் வளர்வது: தாய்த்தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?' என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்திலும் கவியரங்கத்திலும் வட அமெரிக்கத் தமிழர்களே பங்கேற்று தமிழுக்கு மகுடம் சூட்டினர். சுதா ரகுநாதனின் செவ்விசையும், ஐங்கரனின் மெல்லிசையும் மக்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தின.
தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள் பல பிரமிக்க வைத்தன. குறிப்பாக வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் வழங்கிய வினாடி-வினா நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்தையும் வெட்கப்படவைக்கும் தரமான நிகழ்ச்சி. தமிழ்த் தொலைக்காட்சிகள் திரைப்படங்களையும், அரைகுறை ஆங்கிலத் தமிழையும் கட்டிக்கொண்டு அழும் இக் காலத்தில், தமிழ் இலக்கியங்களையும், இசையையும் முன்னிறுத்திய அருமையான வினாடி வினா. இதைப் பல மாதங்களாக உழைத்துச் செம்மையாகத் தயாரித்து வழங்கிய பீட்டர் எரோனிமூஸ் குடும்பத்தினர் பாராட்டுக்குரியர். கனடா தமிழ்ச்சங்கம் வழங்கிய நாட்டிய நாடகம் ஈழத்தமிழர் வாழ்வில் சாதி ஒடுக்குமுறை நிலவியதைக் கண்முன் நிறுத்தியது. மிசௌரி தமிழ்ச்சங்கம் வழங்கிய பறை, சிலம்பம் நிகழ்ச்சி, தமிழர்களின் இசைக்கருவியையும், தற்காப்புக் கலையையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தது.
வெவ்வேறு தமிழ்ச்சங்கங்களும், அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பும் இந்த மாநாட்டில் பல நிகழ்ச்சிகளை வழங்கினர். பல்வேறு நகரத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்தும் குழந்தைகள் வந்திருந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் தொழில்முனைவோர் கருத்தரங்கம், திருமணம் செய்ய முனைவோருக்கான சந்திப்புகள் (www.tamil matrimony.com) போன்றவற்றில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உத்தமம் (www. infitt.org), தமிழ்மணம் (www.thamizmanam.com) அமைப்புகளின் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் மற்றும் வலைப்பதிவுப் பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மின்னஞ்சலிலும், இணையத்திலும் தமிழில் எழுதப் பலர் பயிற்சி பெற்றனர். வேதாத்திரி உலக அமைதி மையம் வழங்கிய வேதாத்திரி மகரிஷியின் சித்த யோகாசனப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பலர் பயன்பெற்றனர்.
தமிழகத்தில் இருந்து வந்திருந்த தமிழிணையப் பல்கலைக்கழக இயக்குனர் முனைவர் நக்கீரனுடன் தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடினர். அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்திட்டம், தேர்வுமுறை, மதிப்பீட்டுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டன. தமிழிணையப் பல்கலைக்கழகச் சான்றிதழ் கல்விமுறை தெரிவு செய்யப்பட்டு, ஐந்து பள்ளிகள் பல்கலைக்கழகத்தின் தொடர்பு மையங்களாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தமிழ்ச் சங்கப் பேரவையின் பள்ளிக்குழு தொடர்ந்து பணியாற்றி, மேலும் பல பள்ளிகளை இத்திட்டத்தில் இணைத்துப் பயன்பெறச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், குழந்தைகளின் தமிழ்த் திறனை வளர்க்கும் விதத்தில் தமிழ் வினாடி வினா, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடந்தன. பொற்செழியன் மற்றும் செல்வன் பச்சமுத்து இவற்றை ஒழுங்குபடுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு மகேஷ் பரிசுகளை வழங்கினார்.
வேலூரிலிருந்து வந்திருந்த விஐடி பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான கி. விஸ்வநாதனுக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்க மண்ணில் தமிழ்த் தொண்டாற்றியமைக்காக சண்முகம் (நியூயார்க்), பாலகன் ஆறுமுகசாமி (வாஷிங்டன்) போன்றவர்களுக்கு மாட்சிமை விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவின் இறுதி நாளன்று 'இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சி' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசினர். விழாவின் அனைத்துக் கொண்டாட்டங்களுக்கிடையேயும், ஈழத்தில் அரசு ஒடுக்குமுறையில் அல்லலுறும் தமிழ் மக்களை நினைவு கூர்ந்தனர். அம்மக்களுக்கு விரைவில் உரிமைகளை மீட்டுத் தர வல்லரசுகள் உதவவேண்டும் என்ற கோரிக்கையைச் சிறப்புப் பேச்சாளர்களும், கலைஞர்களும் வலியுறுத்தினர்.
அடுத்த ஆண்டுத் தமிழ் விழா (2009) அட்லாண்டா (ஜார்.) மாநகரில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டை சி. சுப்பிரமணியம், ஜெய் தபராஜ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர். பேரவைத் தலைவர் தில்லை க. குமரன் மற்றும் செயற்குழுவினர் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மேலதிக விவரங்களுக்கு: www.fetna.org
சொ. சங்கரபாண்டி |