ஜூலை 12, 2008 அன்று ஸ்ரீக்ருபா நாட்டியப் பள்ளி மாணவியான ரம்யா ஐஸ்வர்யா ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் சாரடோகா மெக்காஃபி அரங்கத்தில் நடந்தேறியது. குரு விஷால் ரமணியிடம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றுவருகிறார் ரம்யா. பாதவேலை, பாவச்சிறப்பு, அங்க விநியோக நேர்த்தி என்று அத்தனை துறைகளிலும் சற்றும் குறை சொல்ல முடியாதபடி ஆடினார் ரம்யா.
வீணாவாதினியில் புஷ்பாஞ்சலி, மதுரை முரளிதரனின் கனகாங்கி ராக விநாயகர் துதி 'நிருத்த கணபதியே', வலசியில் ஜதிஸ்வரம், முருகன் மீது அஷோக் சுப்ரமணியத்தின் ஷண்முகப்ரியா வர்ணம், வசந்தாவில் 'நடனம் ஆடினார்', அம்புஜம் கிருஷ்ணாவின் 'கண்ணா வா' என்ற ராகமாலிகைப் பதம், பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானா என்று ஜமாய்த்துவிட்டார் ரம்யா.
அற்புதமான திறமை, அபார உழைப்பு.
முரளி பார்த்தசாரதி (குரலிசை), தனம்ஜயன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்), பால கிருஷ்ணன் (நட்டுவாங்கம்) என்று எல்லோருமே சிறப்பாகச் செய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக குரு விஷால் ரமணியின் உழைப்பையும் கற்பனையையும் சொல்லவேண்டும். ஸ்ரீக்ருபா 100வது அரங்கேற்றத்தை நோக்கி வெற்றி நடை போடுவதில் ஆச்சரியமில்லை.
இன்னும் பிற அரங்கேற்றங்களைப் பற்றி அறிய: www.shrikrupa.org
ராஜா |