சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா
ஜூலை 12, 2008 அன்று சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் வருடாந்திர 'முத்தமிழ் விழா' ஃப்ரிமாண்ட் நகரின் சீனியர் சென்டர் அரங்கத்தில் நடந்தேறியது. 'சொல்லரசு' நெல்லைச்சாமி அவர்களின் சிறப்புச் சொற்பொழிவுடன் விழா துவங்கியது. தலைவர் காமராஜரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் அவர் வட அமெரிக்கத் தமிழ்மக்களின் தமிழார்வத்தைப் பாராட்டிப் பேசினார்.

தொடர்ந்து, பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர் இணைந்து வழங்கிய 'வள்ளி திருமணம்' தெருக்கூத்து நிகழ்ச்சி வெகு அழகாக இருந்தது. இசை, நடனம், நாடகம் என்று மூன்று சுவைகளையும் கலந்து இந்த நிகழ்ச்சியைச் சுவையாக வடிவமைத்திருந்தனர். தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான தெருக்கூத்து பார்வையாளர்களைத் தாயகத்திற்கே அழைத்துச் சென்றது.

முத்தாய்ப்பாக, சன் தொலைக்காட்சி புகழ் ராஜா அவர்கள் தலைமையில் 'வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பது நேற்றைய நினைவுகளே! நாளைய கனவுகளே!' என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் நடந்தது. 'நேற்றைய நினைவுகளே!' அணியில் கௌரி சேஷாத்ரி, காவேரி கணேஷ், கருணாகரன் பழனிச்சாமி ஆகியோரும், 'நாளைய கனவுகளே!' அணியில் நித்யவதி சுந்தரேஷ், உமா குருசுவாமி, ராஜாமணி ஆகியோரும் சிறப்பாக வாதிட்டனர்.

மன்றத்தின் உபதலைவர் (கலை) பிரியா ஷங்கர் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.

காவேரிகணேஷ்

© TamilOnline.com