விண்வெளிக்குள் பார்க்க டிஷ் ஆண்டென்னா
எல்லோரும் டிஷ் ஆண்டென்னாவைப் பயன்படுத்தி சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்களைத்தான் நாள்முழுக்கப் பார்க்கிறார்கள். அதன் வழியே வானிலுள்ள நட்சத்திரங்களையே பார்க்கலாம் என்கிறார் ஜெகன்னாதன் ஃபெனலன்!

ஃபெனலன் 69 வயதான பொறியியலாளர். சிறுவயதில் இருந்தே இவருக்கு வானியல் துறையில் ஆர்வம் அதிகம். அதுபற்றிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அதில் ஆய்வுகள் செய்வதும் அவருக்கு வழக்கம்.

வானியல் ஆய்வில் முக்கியமானதாகக் கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளில் ஈடுபட்டார். வானியல் ஆய்வுக்கு கண்ணாடித் தொலைநோக்கி, ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடித் தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றைக் கண்களால் காண முடியும் என்றாலும் மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும்போது இதைப் பயன்படுத்த முடியாது. ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்கச் செலவு மிகமிக அதிகம். அது பெரிதானதாகவும் இருக்கும். அதற்கான மாற்றுவழிகளை ஆராய ஆரம்பித்தார் ஃபெனலன்.

பல ஆண்டுக்கால ஆய்வுக்குப் பிறகு டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டென்னா இதற்கு உதவும் என்பதைக் கண்டறிந்தார். அதைச்சிறுகருவி ஒன்றுடன் இணைப்பதன்மூலம் தேவையான தகவல்களைப் பெற முடியும் என்பதே இவரது ஆய்வு முடிவு. வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும், வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தருமா தராதா என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியுமாம்.

ரேடியோ தொலைநோக்கித் தயாரிப்பில் முக்கியமான ஆய்வாகக் கருதப்படும் இந்த வழிமுறை சரியே என்று ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கழகத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாதில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது எனப் பாராட்டி அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் ஃபெனலனின் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆர்வம், உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஃபெனலன் ஓர் உதாரணம்.

அரவிந்த்

© TamilOnline.com