மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது
அன்புள்ள சிநேகிதியே...

எனக்கு வயது 38, என் கணவருக்கு 41. கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். ஏழைதான். கிராமத்தில் இருந்த நிலத்தை அப்பா பார்த்துக் கொண்டு இருந்தார். அம்மாவுக்கு ஆஸ்துமா. ஒரு தம்பி, ஒரு தங்கை. எப்படியோ பி.ஏ. முடித்தாலும் வீட்டை நிர்வகிக்கும் நிர்ப்பந்தத்தால் வெளியே வேறு நகரத்தில் வேலை பார்க்க முடியவில்லை.

கணவர் நல்ல பணக்காரக் குடும்பம். கூடப்பிறந்தவர்கள் நால்வர். இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள். எல்லோரும் இங்கே நல்ல வசதியாக இருக்கிறார்கள். என் கணவருக்கு ஏனோ படிப்பு அதிகம் இல்லை. கொஞ்சம் வெகுளி. இவர் மட்டும் இந்தியாவில் தங்கிவிட அப்பா, அம்மாவைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்து பெண் கேட்டு கல்யாண செலவையும் ஏற்றுக் கொண்டார்கள். என் தங்கைக்கு வீட்டுப் பொறுப்பை ஏற்கும் வயது வரவே, நான் இவரைத் திருமணம் செய்து கொண்டேன். நான்கு வருஷம் சந்தோஷமாகத்தான் இருந்தேன். அப்புறம் இவருடைய பெற்றோர்களுக்கு குடியுரிமை (citizenship) கிடைத்து இவருக்கும் இங்கே வரும் வாய்ப்புக் கிடைக்கவே, நான் இங்கே செட்டிலாக மிகவும் ஆசைப்பட்டேன். வந்து ஒரு மாதம் ஒரு மைத்துனர் வீட்டில் தங்கினோம். அவர் ஏதோ முயற்சி எடுத்து இவருக்கு ஒரு மருத்துவமனையில் சாதாரண வேலை வாங்கிக் கொடுத்தார். நானும் ஏதோ சுமாரான வேலை தேடிக் கொண்டேன். சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லை. என் வீட்டுக்கு என்னால் கொஞ்சம் பண உதவி செய்ய முடிகிறது. ஆனால் இந்த அந்தஸ்து வித்தியாசம்தான் என்னைக் கொஞ்ச நாளாக பாதிக்கிறது.

வருடாவருடம் இவர்களுடைய குடும்பம் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏதேனும் பெரிய விடுமுறைப் பயணம் போவார்கள். நாங்கள் கலந்து கொள்வதில்லை. அவ்வளவு வசதியில்லை. அது போகட்டும். Thankgiving அல்லது கிறிஸ்துமஸ் சமயத்தில் இவருடைய அண்ணன் வீட்டில் (250 மைல் தூரம்) சில சமயம் கூடுவார்கள். நாங்கள் டிரைவ் செய்து போகமுடிவதால் செளகரியம். அந்த இரண்டு மூன்று நாள் அங்கே தங்கியிருக்கும் போது எங்களை வேறுபடுத்தி வைப்பது போலத் தோன்றுகிறது. என்னை ஏதோ சமையலறை உதவிக்காகக் கூப்பிட்டிருப்பது போலத் தோன்றும். பணம், குழந்தைகள், விடுமுறை நாள் அனுபவம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள். என் கணவர் புரிந்தது போல தலையாட்டிக் கொண்டு, அவர்கள் சிரிக்கும் போது சிரித்துக்கொண்டு இருப்பார். எனக்குப் பார்க்கப் பாவமாக இருக்கும். இந்த அமெரிக்க வாழ்க்கை பழகப்பழக, இது போன்ற அனுபவம் கசப்பைத்தான் அதிகரிக்கிறது. அங்கே யாருக்குமே எங்களுடைய நிலைமை புரியவில்லையா, இல்லை, புரிந்து கொண்டும் உதாசீனப்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

இதில் ஓர் அண்ணனின் மனைவி (இரண்டாமவர்) பரவாயில்லை. குறைந்தபட்சம் ஆசையாக விசாரிப்பார். மற்றவர்கள், they take us for granted. நண்பர்கள் என்றாலும் இது போன்று ஒன்றுகூடுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால் உறவு. வருடத்துக்கு ஒரு முறையாவது தன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்று இவருக்கு ஆசை. மாமியார், மாமனார் வேறு சில நேரம் பெரிய மகனிடம் தங்க வருவார்கள். ஆகவே கண்டிப்பாகப் போய்த்தான் தீர வேண்டும். நேற்றைக்கு ஒரு போன் கால் வந்தது. கோடையில் ஏதோ இரண்டு வாரம் ஊர்சுற்றப் போகிறார்களாம். நான் லீவு எடுத்துக் கொண்டு அங்கே இருந்து மாமியார், மாமனாரைப் பார்த்துக் கொள்ள முடியுமா என்று. சம்பளத்தை ஈடுசெய்வதாகவும் மைத்துனர் பேசினார். போன கிறிஸ்துமஸ் அனுபவத்துக்குப் பிறகு எனக்கு அந்த வீட்டுக்கே போகப் பிடிக்கவில்லை. இப்போது என் கணவர் 'நீ கண்டிப்பாகப் போக வேண்டும்' என்று அடம் பிடிக்கிறார். மனதே ஒட்டவில்லை. சரி என்று சொல்லிவிட்டுப் பின்னால் முடியவில்லை என்று சொல்லலாமா? அப்போது தான் நம் அருமை அவர்களுக்குத் தெரியும் என்று தோன்றுகிறது. அப்படி நினைப்பதும் தப்புத்தான் என்று உள்மனது சொல்கிறது. இங்கே நிறைய பேர் பணக்காரர்களாக இருக்கிறார்கள். என் நிலையில் எத்தனை பேர் உண்டு என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது. என் மனதைத் திறந்து கொட்டிவிட்டேன்.

அன்புள்ள சிநேகிதியே...

உங்கள் வேதனை புரிய பணம் இல்லாத நிலை வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படித்தவர்கள், பணக்காரர்கள், எல்லோருமே இந்த feeling of discriminationஐ ஏதேனும் ஒரு காலகட்டத்தில், சந்தர்ப்பத்தில் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் அந்தஸ்து வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டு கொஞ்சம் அனுசரணையாக இருந்திருக்கலாம். வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்தால், அவர்களுக்கு அந்த sensitivity, முதிர்ச்சி இல்லை என்றுதான் அர்த்தம். ஒரு வகையில் நீங்கள் உணர்வது, சொல்வது எல்லாமே உண்மைதான். எல்லோருமே தான் மதிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்குப் பணம், பதவி நிச்சயமாக உதவி செய்கிறது. கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகருக்குக்கூட, ஒரு பிரமுகர் வந்து விட்டால் கைகளும், வாயும் திருவுருவத்தைப் பார்க்க, கண்களும், மனமும் வந்திருக்கும் மனிதருக்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கும். யதார்த்தம் இதுதான். அதே பிரமுகர் வேறு ஒரு இடத்தில் முக்கியஸ்தரல்லாது போகலாம். இதுவும் யதார்த்தம்தான். இது பெரிய தத்துவம் இல்லை. சின்ன observation. இது புரிந்தாலே, நம்மை விட நம்மைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு கூட்டத்தில் அதீத மரியாதை கிடைக்கும் போது, அங்கே கோபமும் இருக்காது. தாழ்வுணர்ச்சியும் இருக்காது. மனதில் சிரிப்புத்தான் இருக்கும்.

கிராமத்தில் ஏழைமையில் குடும்பத்துக்காக உழன்ற போதுகூட இல்லை வேற்றுமை உணர்ச்சி. இப்போது மனதில் ஏழைமையை உணருகிறீர்கள். இது கண்டிப்பாக விலக வேண்டும். விலக்க வேண்டும். விலகிப்போகும். என்னுடைய பயிற்சி வகுப்புகளில் Individual Recognition strategy of 3E formula என்று சொல்லுவோம். Expertise, Experience, Exposure. உங்கள் உறவினர்களிடம் நீங்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் மதிப்பை எதிர்பார்ப்பது போலத் தோன்றுகிறது. மரியாதை என்பது வாங்கி வருவது. இதற்குப் பணம், பதவி போதும். ஆனால் மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது. மரியாதை சம்பிரதாயம்; மதிப்பு சமர்ப்பணம். மதிப்பு என் நோக்கில் மிக முக்கியம். அதை நிச்சயமாக நீங்கள் பெற்றுவிடுவீர்கள் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

* ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம். குடும்பத்தினருக்கு எதிலே சிறிது ஆர்வம் உண்டு, ஆனால் தேர்ச்சி இல்லையோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள். Knowledge is power, skill is confidence.

* உங்கள் குடும்ப gettogether வருடத்துக்கு ஒரு முறைதானே? அந்த அனுபவத்தைச் சமாளிக்கும் பக்குவம் ஏற்பட நீங்கள் வசிக்கும் இடத்திலேயே நிறைய சமுதாய/தன்னார்வப் பணிகளில் ஈடுபடுங்கள். சமுதாய/ஆன்மீக அமைப்புகளில் பொதுவாக அந்தஸ்து வித்தியாசம் நிறையத் தெரியாது. நல்ல அனுபவம் கிடைக்கும்.

* பெரிய சுற்றுலா என்று இல்லாவிட்டாலும் சின்னச் சின்ன இடங்களுக்கு உங்கள் கணவருடன் போய் வாருங்கள். அவருடைய ஆர்வம், அவருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். அவற்றை ஊக்கப்படுத்துங்கள்.

* உங்களால் முடிந்தால் அழகாகப் போய் 2 வாரம் உங்கள் மாமனார், மாமியாரைப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே நீங்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் விதம், அவர்களுக்கு உங்கள் மேல் அன்பும் அக்கறையும் உண்டாக வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்காகப் பணம் வாங்கிக்கொள்வதை உங்கள் தன்மானம் தவிர்த்துவிடும். உங்கள் மேலே நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மதிப்பு உங்கள் complexகளை நொறுக்கிவிடும்.

இங்கே வந்து 2-3 வருடம் தானே இருக்கும். போகப்போக நீங்களே ஆச்சரியப்படும் வகையில் வளர்ந்து கொண்டு போவீர்கள், பிறர் மதிப்பில். உங்கள் மதிப்பிலும்தான். உங்களுக்கு அந்தத் திறமை இருக்கிறது.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com