காயம்பட்டாலும் கண்ணியம் காப்பேன்
மன உளைச்சல் தரப்பட்டபோதும், கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டதில்லை. நான் காயம்பட்டாலும் கண்ணியம் காப்பேன். என்னைக் களங்கப்படுத்த நினைத்தாலும் என் கடமையைச் செய்வேன். காரணம், நான் முரசொலி மாறனின் மகன்.
- தயாநிதி மாறன்

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவுக்குள் அனுமதியின்றி நுழைந்து, நம் ஆட்சியாளர்களைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்குச் சில நாட்களே போதும்.
- தா. பாண்டியன், இடது கம்யூனிஸ்டுத் தலைவர்.

மாயாவதியால் பிரதமராக முடியாது. நான்கூடத்தான் பிரதமராக ஆசைப்படுகிறேன். ஆனால், ஆக முடியுமா?
- லல்லுபிரசாத் யாதவ்

நடிகர்களால் பாடல்களுக்குப் பெருமையில்லை. இனிய திரைப்பாடல்கள்தான் நடிகர்களுக்குப் பெருமை சேர்க்கின்றன.
- டி.எம்.சௌந்திரராஜன்

சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 18 கொலைகள் நடந்திருக்கின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், மற்ற பெரு நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை பாதிதான்.

- சேகர், சென்னை மாநகரக் காவல்துறை கமிஷனர்

தனது எழுத்து மூலமும் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் கருணாநிதி. அவரது எழுத்துக்களை அவரது சொந்தச் செலவிலேயே ஆங்கிலப்படுத்த முடியும். ஆனால் பாரதியார் பல்கலைக்கழக நிதியைக் கொண்டு கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தும் துணைவேந்தரின் செயல், மோசமான முன்னுதாரணம்.
- அர்ஜுன் சம்பத்

அப்போது செல்லப்பா வீட்டில் பெரிய வறுமை. தனக்குக் கிடைத்த சுதந்திரப் போராட்டத் தியாகி உதவித் தொகையைக்கூட அப்போது அவர் வாங்க மாட்டேன் என்று மூன்று வருடங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தார். அப்புறம் நடையாக நடந்து நான் சில உதவிகள் செய்து உதவித் தொகையை வாங்கித் தந்தேன். அப்போதுதான் க.நா.சு. 'செல்லப்பா தியாகி உதவித் தொகையை வாங்கிக்கொண்டு இப்போது ரொம்ப சௌகர்யமாக இருக்கிறார்' என்று எழுதிவிட்டார். அதனால் பெரிய வாக்கு வாதம் வந்தது.
- கி.அ. சச்சிதானந்தம், எழுத்தாளர், பதிப்பாளர்

திரைப்படத்தில் பத்தும் குத்துப்பாட்டாக இருந்தால் தாங்க முடியாது. இலை முழுக்க ஊறுகாய் இருந்தால் எப்படிச் சாப்பிட முடியும்?
- வைரமுத்து

© TamilOnline.com