காலத்தின் கோலம்
'சார் ரிஜிஸ்டர் போஸ்ட்..'

கவரைக் கையில் வாங்கிய மோகனுக்கு பிரித்துப் பார்க்கக்கூடத் தோன்றவில்லை. முந்தாநாள் இரவு கத்திவிட்டுப் போனவள் நிஜமாகவே இன்று டைவர்ஸுக்கு விண்ணப்பித்து நோட்டீஸ் அனுப்பிவிட்டாளோ? அம்மா பார்க்கிறாளோ? எட்டிப் பார்க்கிறான். பாட்டியுடன் ரொம்ப சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

'உன் பிள்ளைக்கும் மாட்டுப் பெண்ணுக்கும் இவ்வளவு சாமன் பாக் பண்ணுகிறாயே. அவன் கொண்டு போவானா என்று கேட்டுக் கொண்டாயா?'

'மாங்காய் ஊறுகாய்கூட பாக் பண்ணி விட்டேன்.'

'போச்சு போ. உன் பிள்ளை சொன்னானே நினைவில்லையா... எவனோ தூக்கி குப்பையில் போடுவதற்கு இங்கேயே நீங்கள் சாப்பிடுங்கள் என்று வைத்துவிட்டுப் போனானே!'

தேங்காயெண்ணெய்கூட கொண்டுபோகப் போறதில்லை.

'பாட்டி இங்கே வாயேன் கொஞ்சம்.'

'என்னடா வயசான காலத்தில ஏன் படுத்தறே! நீதான் உள்ளே வாயேன்'

'வான்னா வாயேன் பாட்டி. ஒரு முக்கியமான விஷயம். உன்னிடம்தான் சொல்லணும்.'

பாட்டிக்கு எதையும் தாங்கிக் கொள்ளும் இதயம். கல்யாணம் பண்ணி உள்ளே நுழைந்திருக்கிறார்கள். பழுத்த சுமங்கலியான பாட்டி ஆரத்தி கரைத்துக் கொண்டு வர உள்ளே ஓடுகிறாள். தாத்தா, 'இவளுக்கு எதையெடுத்தாலும் ஒரே அவசரம்தான்!' என்று சொல்லிவிட்டு ஈசிசேரில் சாய்ந்து கண்ணை மூடிக்கொள்கிறார். 'பேரன் ஆம்படையாள் வந்த ஜோரில் என்னை மறந்துடாதே! ஜம்மென்று காபி உன் கையால் கலந்துண்டு வா.'

##Caption##தாத்தாவும் பாட்டியும் அந்தக் காலத்தில் மாமன் மகளும், அத்தை மகனும். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள். அவ்வளவு அபிமானமும், புரிதலும் எங்கும் பார்க்க முடியாது. எவ்வளவோ கோயில், பரிகாரங்கள், விரதம் என்று நடுவயதில்தான் அப்பா பிறந்தாராம். ஒரு பிள்ளைதானே என்று அப்பாதான் அதிக செல்லமாம் வீட்டில்.

அப்படியும் பாட்டி சொல்வாள்; 'உன் அப்பா பிறந்தபோது பட்ட சந்தோஷத்தைவிட, நீ பிறந்த போதுதான் மிக அதிக சந்தோஷம். எப்பவுமே அசலைவிட, வட்டிக்குத்தான் மதிப்பு அதிகமாயிருக்கும்டா செல்லக் கண்ணா.'

பேரன் மனைவியை விளக்கேற்றச் சொல்லிவிட்டு பாட்டி காப்பியுடன் தாத்தாவை எழுப்புகிறாள், 'அதற்குள் என்ன தூக்கம்? கல்யாண அலைச்சல் தாங்கலையா?'

அப்பா வந்து தொட்டு எழுப்பிப் பார்க்கிறார். அசைத்துப் பார்க்கிறார். என்ன இது? உள்ளேயிருந்து டாக்டர் மாமா வந்து கைபிடித்துப் பார்க்கிறார். 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்.'

கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் என எந்த மூட்டையும் பிரிக்கப்படாமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது. இத்தனைக்கும் பாட்டி வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு சொட்டு கண்ணீரில்லை.

மாமி ஏதோ சொன்னதற்கு, 'எதெது எந்தெந்த வேளையில் நடக்கணுமோ அதுதான் நடக்கும். இந்தப் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னால் நீங்கள் வெளியே போகலாம்' என்று கையைக் காட்டுகிறாள். மாமி தலைகுனிந்து வெளியே போகிறாள்.

பதிமூணு நாள் காரியங்கள் முடிந்து எல்லோரும் கிளம்பி ஊருக்குப் போன பிறகு பாட்டி கேட்டாள், 'உனக்கு எப்போ அமெரிக்கா கிளம்பணும்? நாளைக்கா?'

பாட்டி! உன்னால் எப்படி இவ்வளவு சர்வசாதாரணமாக இருக்க முடிகிறது? அம்மாவும் அப்பாவும் சோர்ந்து போனவர்களாய் எதையுமே தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி காணப்படுகிறார்கள்.

'நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் பாட்டி' துக்கம் தொண்டையை அடைக்கிறது. கீதாவை கொஞ்சநாள் அவள் அம்மாவுடன் இருந்து விட்டு வரச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவளுக்கும் மனது சரியாகும்.

'எப்போது விசா அனுப்பப் போகிறாய்? கீதாவைப் பற்றிக் கவலையே படாதே. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.'

எல்லார் மனதையும் எப்படிப் படிக்கக் கற்றுக் கொண்டாய் பாட்டி! பேசின வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளைக்கூட நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய்? கண்களைக் கண்ணீர் மறைக்கிறது. வாய்க்கு வாய் 'எதையெடு அவசரம்' என்று பாட்டியைச் சொல்லிக் கொண்டிருந்த தாத்தாவுக்கு எந்த அவசரமான அழைப்பு எமனிடமிருந்து வந்தது?

உடனே விசா அனுப்ப முடியாதபடி ஏதோ சிக்கல். ஆறு மாதம் போன பிறகு தேவதை போல் பறந்து வந்த கீதா, சொர்க்கபூமியில் வந்து இறங்கினாள். கண்ணுக்கெதிரே பார்க்கும் பொருளில் எல்லாம்கூட இவ்வளவு இனிமை இருக்குமா? பூப்போல மென்மை இருக்குமா? சொர்க்க வாழ்க்கைதான்.

'எனக்கு போர் அடிக்கிறது. நான் மேலே படிக்கட்டுமா? வேலைக்குப் போனால்தானே நல்லது. நாமும் ஒரு பெரிய வீடு வாங்கலாம்.' கீதாவின் சொற்களே நச்சரிப்புகளாய்த் தோன்றியபோது, பாட்டியின் குரல் காதில் ஒலிக்கிறது. 'வாழ்க்கை என்றால் நல்லதும், கெட்டதும் கலந்துதான் இருக்கும். அவள் என்ன சொல்கிறாளோ நீதான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போயேன். படிக்கணும் என்றால் படிக்கட்டுமே.'

'எப்படியாவது ஒரு பேரனை என் கண்ணில் காண்பித்துவிடு! அதுதவிர எங்களுக்கெல்லாம் வேற என்ன வேண்டும்?'

கஷ்டப்பட்டு பெரிய காலேஜில் போய்வர செளகரியம் என்று நினைத்ததில் வங்கிக் கணக்கில் பாதிப் பணம் காணாமல் போயிருந்தது. படிக்க வைக்க என்றால் சும்மாவா? அடுத்த வாரம் பரீட்சை என்று எப்போதும் பதைப்புத்தான்.

வீட்டுவேலைகள் என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும், அவள் கண் விழித்து இரவெல்லாம் படிக்கும்போது பரிதாபமாகத்தான் இருந்தது. தனக்கும் எத்தனை நாவல் புரட்டினாலும் தூக்கம் வரவில்லை.

'எப்படி என்ன என்று தெரியாது. நாளைக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறேன்' என்று கீதா சொன்னபோது 'ஏன் என்ன ஆச்சு?' என்றேன்.

'ஒரு மாதம் தள்ளிப் போயிருக்கிறது. ஒரே தலைசுற்றல், வாந்தி. உடம்பு ரொம்பவே முடியல்லை.'

நல்ல சமாசாரம்தானே. ஏன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?'

'நான் படிக்கணும். இவ்வளவு பணத்தைக் கட்டிட்டு பரீட்சை எழுதாமல் வீணடிக்க முடியாது.'

'என் அம்மாவை வரச்சொல்லட்டுமா?'

'அம்மா வந்து என் உடம்பு வேதனையை வாங்கிக் கொள்வாளா? இப்போ இது வேண்டாம்.'

'என்ன சொல்றே நீ?'

'ஆமாம். இப்போ நமக்குக் குழந்தை வேண்டாம்.'

'திடீரென்று நீயாக எதற்கு முடிவு பண்ணுகிறாய்? ஊரில் எல்லோரும் எவ்வளவு ஆசையாய்...'

'அதற்காக நான் எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடியுமா? என் படிப்பு... பரீட்சை...' கண்களில் குளம். 'ஸ்கூல் டீச்சராய் இருக்கும் என் அம்மாவுக்கு நானாவது அமெரிக்காவில் வந்து மேற்படிப்பு படிக்கணும்னு அவ்வளவு ஆசை. இனிமேல் எல்லாமே அவ்வளவுதான்.'

'என்ன இப்படிச் சொல்கிறாய். அப்புறம் படிக்கக் கூடாதா என்ன? எவ்வளவு பேர் வயது வரம்பில்லாமல் படிக்கிறார்கள். இந்த ஊரில் எந்த வயதிலும் படிக்கலாமே.'

அவன் பிடிவாதம் ஜெயித்தது. எல்லாரும் சந்தோஷமாகப் பேசினார்கள். 'எப்படி இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்?' என்று வாராவாரம் போன்.

வாந்தியும், தலைசுற்றலும் நிற்கவில்லை. 'என் கனவும் கற்பனையும் கலைந்தது.' தாறுமாறான பேச்சில் வெறுப்பு மட்டும் மிச்சமிருந்தது.

மோகனுக்குப் பொறுப்புகள் அதிகமாயின. மூன்று மாதம் முடிந்தது. செக்கப் முடிந்து வெளியே வந்தபோது டாக்டர் சொன்னார். 'ஒருவேளை குழந்தை ஊனமாகப் பிறக்கக் கூடும். மண்டை வளரவில்லை. குழந்தை சரியில்லை. நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள்.'

என்ன சொல்வது! கீதாவிடம் சொல்லக்கூட பயமாயிருந்தது. ஆயிரம் சம்மட்டிகள் நெஞ்சில் இறங்கினமாதிரி ஒரு வலி.

விஞ்ஞானம் ஏன் இவ்வளவு வளர்ந்து விட்டது! எல்லாவற்றையும் முன்னாடியே ஸ்கேன் பண்ணிவிடுகிறார்கள். எதிலும் எதிர்பார்ப்பு, த்ரில் இல்லை.

'நீ பிறந்தபோது நான் பேரன் பிறந்திருக்கிறான் என்று ஊர்முழுக்க ஸ்வீட் கொடுத்தேன்...' பாட்டியின் குரல் திரும்பத் திரும்ப காதில் மோதுகிறது.

'இந்தப் பக்கம் திரும்ப வேண்டும். நேராகக் காரை ஓட்டிக் கொண்டு போகிறீர்களே. என்ன யோசனை? எப்படியிருந்தாலும் நீங்கள்தான் ஜெயிக்கப் போகிறீர்கள். நான் என்ன சொல்ல...'

'நான் ஜெயித்த அழகு தெரிகிறதே! என் வாழ்க்கை முழுவதும் தோற்றுப் போய் விடுவேன் போல இருக்கிறது.' மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்கிறான். மேலே எதுவும் பேசத் தோன்றவில்லை. சில நாட்களாகவே பேசுவது கூட மிகவும் குறைந்து போயிற்று. அவசியத்திற்குத்தான் பேச்சு என்று ஆகிவிட்டது.

பிடிக்காத இந்த மெளனம் இருவரையுமே ஓரளவு பாதித்திருக்கிறது, ஏசுகிறது. 'எப்போது இந்த மெளன விரிசல் உடையும்?' இருவருக்குமே தோன்றுகிறது. பாட்டி, தாத்தாவுக்கு இடையில் இந்த மாதிரி பிணக்குகள், சண்டைகள் வந்திருக்குமா? தானாகவே மனதில் எப்படியெல்லாம் தோன்றுகிறது.

தூக்கமே வரவில்லை. புரண்டு, புரண்டு படுக்கையில் கை கீதா மேல்பட, தானாக எழுந்து உட்காருகிறாள். அழுகையும், கண்ணீருமாக பேச்சுவராமல் திணறுகிறாள்.

'வயிறு ரொம்ப வலிக்கிறது.'

'இத்தனை நேரம் ஏன் பேசாமல் இருந்தே!' எமர்ஜென்சியில் ஆம்புலன்ஸ் விரையும்போது பாட்டியுடன் உட்கார்ந்து படித்த அத்தனை ஸ்லோகங்களும், கடவுள்களும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். 'எப்படியாவது என் கீதாவை காப்பாற்றிவிடு முருகா!' என்று முனகத்தான் முடிகிறது.

ஐந்து மணி நேரமாய் உள்ளே என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? டாக்டர் வெளியே வந்தார். 'நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனாலும் அபார்ஷன் ஆகிவிட்டது, சாரி.'

இது நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?

பறக்கிறாப்போலே இருக்கிறது உடம்பு.

போன் செய்தால் அம்மா என்ன சொல்வாள்? பாட்டி என்ன சொல்வாள்?

அம்மாதான் போனை எடுத்தாள்.

'என்னது? காய் விழுந்துடுத்தாமா?' தூரத்திலிருந்துகூட பாட்டியின் குரல் இவ்வளவு இயல்பாக இருக்க முடியுமா?

மிகச் சாதாரணமாய் எடுத்துக் கொள்கிற பாட்டியின் குணம். ஜாடி உடைந்து போனால் கூட போனால் போகிறது போ என்று முறமும், விளக்குமாறுமாக உள்ளே வரும் அதே இயல்புக் குரல் காதில் ஒலிக்க பிரமிப்பு மனதைவிட்டு அகலமாட்டேன் என்கிறது.

'அந்த நாள்லே நாங்கள்ளாம் காய் விழுந்த போது...' தொடர்ந்து கேட்கிறது பாட்டியின் குரல்.

போனை வைக்கிறான்.

'ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ கீதாவை' அம்மாவின் குரல் காதில் ஒலிக்கிறது.

பாட்டியைப் பேசச் சொன்னாள் அம்மா.

'கீதாவுக்கு உடம்பைவிட மனசுதாண்டா இப்போ ரொம்ப நொல்பமாயிருக்கும். நீதான் ஜாக்கிரதையாய் பார்த்துக்கணும்' எப்போதும் பிறரைப் பற்றியே யோசிக்கும் குணம். உனக்கு ஏமாற்றம், அதிர்ச்சி எதுவுமே இல்லையா?

நார்மலாக வளையவரும் கீதாவைப் பார்க்கப் பாவம்தான்.

மறுபடி படிப்பு. காலேஜ். போகவர நேரமே இல்லை. காலம் பறக்கிறது.

விரிசல் விட்ட மாதிரி. பழைய நெருக்கம் வரவே மாட்டேன் என்கிறது. யோசித்து யோசித்துப் பேச வேண்டியிருக்கிறது.

நண்பன் ஸ்ரீராம் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். எல்லோரும் கலகலவென்று பேசிக் கொண்டிருக்க கீதாவால் ஒன்றும் முடியவில்லை.

குழந்தை ஏதோ கேட்க, கையில் குழந்தையை தூக்கிக் கொண்டவள், குழந்தையுடன் அப்படியே விழுந்து மயக்கமாகி விட்டாள். எல்லோரும் ஓடி வந்தார்கள். வலிப்பு மாதிரி வந்துவிட்டது. இதுதான் முதல் தரமானதால் மோகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

உடனே ஆஸ்பத்திரி, எமர்ஜென்சி.. மருந்து மாத்திரைகள். எனக்கு மட்டும் ஏன் இப்படி? ஆபிசில் உட்கார்ந்து வேலை பார்க்க முடியாமல் எண்ண அலைகள். இப்போது சரியாக இருப்பாளா? இன்று மறுபடி மயக்கமாகி விழுந்து கிடப்பாளா? வெறும் எண்ண அலைகள் இவ்வளவு கவலை உண்டாக்குமா?

உடனே ஓடிவிடக் கூடிய தூரம் இல்லை வீடு. டிராபிக்கில் போய் சேரவே ஒருமணி நேரம் ஆகும். உடனே வீடு மாற்ற வேண்டும். அல்லது அவளை ஊருக்குக் கூட்டிப் போய்விட வேண்டும்.

வீடு மாற்றுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. 'நான் படிப்பை முடிக்க வேண்டும். வேறு வேலை தேட வேண்டும்...' அவள் வெறி பிடித்தது போலக் கத்த ஆரம்பித்தாள்.

'உனக்கு எப்போது மயக்கம் வரும் என்று உனக்கே தெரியாது. நீ வேலைக்குப் போக வேண்டாம்.'

'எனக்கு ஹிஸ்டீரியா வந்து விட்டதென்று முடிவே கட்டிவிட்டீர்களா?'

தன் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் என்ன பெண் இவள்?

'இந்தத் தடவை நாம் ஊருக்குப் போனால் டெல்லி, காஷ்மீர், குலுமணாலி எல்லா இடங்களும் சுற்றிவிட்டு வரலாம். ஊருக்கு டிக்கெட் வாங்கவா, வேண்டாமா?' அரை மனதோடு ஒப்புக் கொண்டாள்.

பைநிறைய மருந்துகள், கை நிறையப் பணம், மனம் நிறையக் கவலைகள் சுமந்துகொண்டு சென்னைக்கு விமானம் ஏறினார்கள்.

வீட்டில் நுழையும்போதே வெறிச்சென்று இருந்தது. பாட்டிமட்டும் கவலை தோய்ந்த முகத்துடன்!

'என்ன ஆச்சு பாட்டி?'

'நேற்று ராத்திரி உங்கப்பா நெஞ்சுவலின்னு துடிச்சான்.. ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிவிட்டு உங்கம்மா, மாமா எல்லோரும் அங்கேயேதான் இருக்கிறார்கள்.'

'உள்ளே வா, கால் அலம்பி, காபி சாப்பிடலாம் வா' பாட்டி பேசிக்கொண்டே போனாள்.

அப்பாவை இவ்வளவு ஓய்வெடுத்து படுக்கையில் படுத்தபடி பார்த்ததேயில்லை. பைபாஸ் சர்ஜரி உடனே பண்ணினால்தான் நல்லது. டாக்டர்களின் அபிப்பிராயம். அம்மாவின் முகம் கலவரமானது.

'நிறைய ரூபாய் செலவாகுமேடா?'

'அம்மா' மோகனின் குரல் அம்மாவை அடக்கியது. 'நீ ஏன் ரூபாயைப் பற்றி யோசிக்கிறாய்?'

அறுவை சிகிச்சையும் முடிந்தது. லீவும் முடிந்தது. கீதாவின் ஹிஸ்டீரியா பற்றி யாருக்கும் சொல்ல சந்தர்ப்பம் வரவில்லை. சொல்ல முடியவும் இல்லை.

'கீதா அவ அம்மாவுடன் கொஞ்சநாள் இருந்துவிட்டு வரட்டும். நான் மட்டும்தான் திரும்பப் போறேன்' என்றான் திடீரென்று.

'ஏண்டா?' பாட்டிக்கு பதில் சொல்வதற்குள் செல்போன்.

'ஹலோ நான் வேதா பேசுகிறேன். இன்ஷ்யூரன்ஸ் பணம் இன்னும் வரவில்லை. எனக்கு ரொம்பக் கஷ்டம். நீங்கள் எப்போது இங்கு வருகிறீர்கள்?'

'நான் நாளை மறுநாள் 15ம் தேதி கிளம்பி வரலாம் என்றிருக்கிறேன்.'

'கீதா, வேதாவின் போன்.' கீதா எங்கிருந்தாள் என்று தெரியவில்லை.

வேதாவின் சோகம் பொறுக்கமுடியாது. நண்பன் சேகரும், வேதாவும் குழந்தைகளுடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு பெரிய லாரியுடன் திருப்பத்தில் ஆக்சிடெண்ட். பெரிய ஆக்சிடெண்ட். சேகர் பிழைக்கவில்லை. வேதாவும், குழந்தையும் பிழைத்துக் கொண்டார்கள்.

ஆபீசில் ஒரு சிலரைத் தவிரத் தன் மனிதர்கள் என்று யாரும் இல்லை. குழந்தையும், வேதாவும் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கீதாவும் உடன்வந்து கவனித்துக் கொண்டவள்தான். அப்புறம் இன்சூரன்சுக்கு ஆபீசுக்கு, வேலைக்கு என்று அலையும் போது தனியாகப் பலமுறை வேதாவைச் சந்திக்க வேண்டியிருந்தது.

முதலில் எல்லா இடத்துக்கும் தயாராகி வந்து கொண்டிருந்தாள். கீதா மனதில் யார் என்ன சந்தேக விதை விதைத்தார்கள் என்று தெரியவில்லை. வெளிப்படையாக எதுவும் கேட்காவிட்டாலும் அவனை நம்பவில்லை என்பது வெளிப்படையாகப் புரிந்தது.

தூக்கத்தில் ஒருநாள் அவள் புலம்பிக் கொண்டிருந்த போதுதான் 'வேதாவை நீங்கள் உள்மனதில் விரும்புகிறீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒத்துவரவில்லை. அவ்வளவு தான்.' புரிந்துகொள்ள முடிந்தது.

தானாக ஆரம்பித்தாலும் நன்றாக இருக்காது. இந்தச் சந்தேகத்திற்கு எப்படி விளக்கம் சொல்வது? மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த ஊரானாலும்தான் என்ன? எந்தக் கலாசாரம் இருந்தால்தான் என்ன? சந்தேக விதை காளான் மாதிரி. காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தான். பாட்டி சொல்லும் பழமொழிகள் ஏன் அடிக்கடி ஞாபகம் வருகிறது?

'கீதா எங்கே போயிருந்தே?'

'ஏன் பின்பக்கம் ரோஜாத் தொட்டிகளைப் பார்த்துத் தண்ணீர் விட்டுவிட்டு வந்தேன். ஒரு ரோஜா எவ்வளவு அழகாகப் பூத்திருக்கிறது பெரியதாக...'

சந்தோஷமாக ஓடிவந்தாள். 'யார் போன்?'

'வேதா பேசினாள். உன்னைப் பேசக் கூப்பிட்டேன்.'

'இப்போ என்னவாம் அவளுக்கு?'

'ஏன் மூஞ்சி சுருங்குகிறது? எத்தனையோ பிரண்ட்ஸ் பேசுகிறார்கள். இப்படியா முகம் சுளிக்கிறாய்?'

'என்ன இருந்தாலும் வேதா பேசினால் ஸ்பெஷல்தான் உங்களுக்கு...'

'ஏன் இப்படி தனியாகப் பிரித்துப் பேசுகிறாய்? அம்மா, பாட்டி காதில் விழப்போறது.'

'அப்பவே இரண்டு பேரும் கோவிலுக்குப் போயாச்சு. நல்ல சிவப்புக் கலரும், சுருட்டை மயிரும், என்ன இருந்தாலும் அவள் அழகுதான்...'

'அதற்கென்ன இப்போ? என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? இன்னும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை. வேலையும் இல்லை. அவள் கஷ்டப்படுகிறாள்.'

'அப்போ நீங்க உதவி செய்ய வேண்டியது தானே. என்னை ஏன் பேச இழுக்கிறீர்கள்? எனக்குப் பிடிக்கவில்லை.'

'என்ன சொன்னாலும் நீ நம்பப் போவதில்லை. நான் என்ன அனுமாரா, நெஞ்சைப் பிளந்து காட்ட? எப்போது நீ என்னை புரிந்து கொள்கிறாயோ அப்போது நீ வந்தால் போதும்.'

'எப்படியிருந்தாலும் நாளைக்கு நான் என் அம்மாவிடம் போகத்தான் போகிறேன். நீங்களாக மனசு மாறி வா என்று கூப்பிடும் வரை நானும் வரப்போவதில்லை.'

அவ்வளவுதான். பாட்டி, அம்மாவுடன் சிரித்துப் பேசி விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள். 'நீயும் கூடப்போய் அவாத்தில் தலைகாட்டிட்டு வாயேன்' இது பாட்டி

'நீ மாறவே மாட்டாயா?'

நேற்றிலிருந்து பேச்சுவார்த்தை என்னும் நூலிழைகூட அறுந்துவிட்டது. பாட்டிக்கு ஏன் தெரியப்படுத்த வேண்டும்?

இன்று ஒரு லெட்டர் அனுப்பியிருக்கிறாள். 'நான் ஏன் டைவர்ஸ் பண்ணக்கூடாது உங்களை?' என்று கேட்டிருக்கிறாள்.

பாட்டி வந்து படியில் நின்றுகொண்டு இருக்கிறாள். 'எதுக்குடா கூப்பிட்டே. இத்தனை நாழியா எதைப்பற்றி யோசித்துக் கொண்டேயிருக்கிறாய்?'

'கீதா டைவர்ஸ் பண்ணப் போகிறாளாம்?'

பாட்டி பெரிதாகச் சிரித்தாள். 'போடா நீ... உனக்கு விளையாட வேறு சமயம் கிடையாதா? விவஸ்தையே இல்லாமல் பேசிக் கொண்டு.' பாட்டி உள்ளே போய்விட்டாள்.

'எனக்குத் தலைக்குமேல வேலை கிடைக்கிறது. இவன் வேற விளையாட்டுத்தனமா பேசிக்கொண்டு...'

பாட்டி எதையும் நம்பப் போவதில்லை. நடக்கிறது நடக்கிறபடி நடக்கட்டும். கவரை மூடிப் பெட்டியின் அடியில் போடுகிறான். துணிகளை மேலே வைத்துப் பெட்டியை மூடினான்.

வேதாவின் இன்சூரன்ஸ் தரப்பட்டுவிட்டது. 'என் அப்பாவுடன் நான் ஊருக்கே போய் விடலாம் என்றிருக்கிறேன்' என்றாள் வேதா.

வீட்டைக் காலி செய்து கடன்களை அடைத்து அவளை ஊருக்கு அனுப்பும்வரை வேலை சரியாக இருந்தது. கீதாவிடமிருந்து எந்த போனும் இல்லை. அம்மா மட்டும் அவ்வப்போது ஏதோ பேசுகிறாள். 'திடீரென்று கீதாவின் அப்பா ஸ்ட்ரோக் வந்து விழுந்து விட்டாராம். கீதாதான் பார்த்துக் கொள்கிறாள். மூன்று மாதம் கழித்து அவள் வரும் போது உனக்கு என்ன வேண்டுமோ கொடுத்து அனுப்புகிறேன்...' அம்மா பேசிக்கொண்டே போகிறாள்.

கீதா சொல்லியிருப்பாளோ. இப்போது எப்படி இருக்கு, என்ன ஏது என்று விசாரி என்கிறாள் பாட்டி.

நீயாகப் பேசும்வரை நானும் பேசப் போவதில்லை, சபதம் எடுத்துக் கொண்டது போல இருக்கிறது. ஈகோ பிராப்ளம் இதுதானா? புரியவில்லை.

போனைக் கையில் எடுக்கும் வரைதான். கீதாவுடன் நானே பேசிவிட்டால் தான் என்ன என்று தோன்றுகிறது. நம்பரை அமுக்கக் கை வரவில்லை. தனக்குத்தானே எதிரியாக இந்த மனம் ஏன் செயல்படுகிறது?

கீதா அவள் அப்பாவை மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள அலைந்துகொண்டு பிசியாக இருப்பாள். அதான் போன் பண்ண முடியாமலிருக்கும்.

போனுக்கு அருகில் போகையில் அது தானாகவே ரீங்கரிக்கிறது. அம்மாதான். 'ஹலோ அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்?'

'அதுக்குத்தாண்டா போன் பண்ணினேன். இன்று விடியற்காலை கீதாவின் அப்பா தவறிவிட்டார். நீ கீதாவின் செல் நம்பரில் போன் பண்ணிப் பேசிவிடு. என்ன, உன்னால் வரமுடியுமா?'

கை தானாகவே போனை வைக்கிறது. நாம் யோசித்து எதையும் முடிவு செய்ய முடிவதில்லை. எது நடக்குமோ அது தானாகவே நடந்துவிடுகிறது.

அடுத்த ரிங்! இது கீதாவாக இருக்கலாமோ? மனது படபடக்கிறது. கீதாவேதான்!

'அப்பா இன்று காலை...' அழுகையாய் வெடிக்கிறது.

'அப்பாமேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாய்! இதே மாதிரிதான் நானும் என் அப்பாவுக்கு ஒரே பிள்ளை. எங்கும் போக முடியாதபடி நமது பிளான் கெட்டுப்போனது. நீ அதைப் பெரிய தப்பாக எடுத்துக் கொண்டாய். ஹிஸ்டீரியா வந்து கத்தினாய்?' மனதில் ஓடும் எண்ணங்களைத் தடைசெய்ய முடியவில்லை.

'என்ன மெளனமாய் இருக்கிறீர்கள்? என்மீது ஏதாவது கோபமா?'

எவ்வளவு நடந்திருக்கிறது. எவ்வளவு சாதாரணமாய்ப் பேசுகிறாய்? என் மனநிலை உனக்கு என்றுமே புரியாதா? நீ முயற்சி செய்யவே மாட்டாயா? யோசித்துப் பார்க்கவே மாட்டாயா? உள்ளூரிலிருந்தே கோவமாய் லெட்டர் போட்டாயே.. மறந்து போய்விட்டதா?

'ஓகே. நீங்கள் பேசாவிட்டால் பரவாயில்லை. உங்களை எனக்குத் தெரியாதா. அம்மா மன நிலை கொஞ்சம் சரியான பிறகு நான் புறப்பட்டு வருகிறேன். நாளைக்குப் பேசுகிறேன்.'

என்ன நடக்கிறதென்று புரியாமலே, ஆனால் சந்தோஷத்துடன் போனை வைத்தான் மோகன்.

ஜானகி ஸ்ரீநிவாசன்,
ஃப்ளோரிடா

© TamilOnline.com