சுத்த சக்தியின் சங்கடம் பாகம் 13
முன்கதை: சிலிக்கன் வேல்லியில் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, தனது திறமையால் முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் வேகமான தமாஷான இளைஞன். தொழில்- பங்கு வர்த்தகம். ஆனாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்டு மருத்துவமனையில் மருத்துவராகவும், உடலியல் மருத்துவ ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிகிறார். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே சூர்யாவின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்த முரளி, அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க், சூர்ய ஒளி உற்பத்தி நுட்பத்திலும், மின் சக்தியைச் சேமிக்கப் பயன்படும் உயர்தர பேட்டரி நுட்பத்திலும் வெர்டியான் புரட்சிகரமான முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறினார். பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ஆனாலும் பெருமளவில் சூர்ய ஒளி மின்சக்தி தரும் நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் விளக்கினார். சூர்யா, விஞ்ஞானி யூ பிங் சூ தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, ஷாலினியின் உதவியுடன் அவரை நேரில் விசாரிக்கச் செல்கின்றனர்...

மேலாக நம்பிக்கை தெரிவித்தாலும், யூவின் குரலில் இழைந்தோடிய மெல்லிய அவநம்பிக்கையைக் கவனித்துவிட்ட சூர்யா, வழக்கம்போல் அதைத் தகர்த்தெறியும் வகையில் அதிரடிகளை எடுத்து வீசினார்.

'யூ, உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த சந்தர்ப்பம் சரியில்லைன்னாலும், உங்களைப்போன்ற மகத்தான மனிதர்களை சந்திக்கறதுல எனக்கு எப்பவுமே சந்தோஷந்தான். நீங்க உலகிலேயே தலைசிறந்த சூர்யசக்தி விஞ்ஞானின்னு மார்க் சொல்லியிருக்கார். ஆனா விஞ்ஞானத்துல மட்டுமே மூழ்கிடாம, உள்ஞானத்துலயும், அதுவும் பல மதங்களின் நற்போதனைகளை மட்டுமே பகுத்தறிவுரீதியாக ஆராய்வதில் உங்களுக்குத் தீவிர ஆர்வம் இருப்பது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாம, வயலின் இசையிலயும் உங்களுக்கு இருக்கும் பழக்கமும் ஆர்வமும் நீங்க இடமூளையை மட்டும் பயன்படுத்தும் ஒற்றைப் பரிமாணமான நபரல்ல, பல பரிமாணமுள்ள சகல கலா வல்லவர்ங்கறது ஆச்சர்யமூட்டுது. என் மனமார்ந்த பாராட்டுக்கள். அதுமட்டுமா? உங்க பெண்ணும் படிப்பு மட்டுமில்லாம விளையாட்டிலும் கைதேர்ந்தவளா இருக்கறது, தந்தைக்குச் சளைக்கலைன்னு காட்டுது. அவளுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள். அவளோட மின்னஞ்சல்லயும், உடனடித்தகவல் (instant messaging) மூலமாவும் எப்பவும் விடாம தொடர்பு வச்சிருக்கீங்க போலிருக்கு. அந்தக் குடும்ப நெருக்கம், இந்நாள் பரபரப்பு உலகத்துல இருக்கறதும் ரொம்ப ஆச்சர்யந்தானே?'

##Caption##சூர்யா சரமாரியாக வீசிய வேட்டுக்களால் யூ-வின் முகத்தில் அடுத்தடுத்துத் தோன்றி மறைந்த அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தேகம், கோபம், பேசமுடியாத திணறல் போன்ற உணர்ச்சிகளால் அவர் முகம் போன அஷ்ட கோணல்களைக் கண்டு கிரணுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்துவிட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவனிடமிருந்து களுக்கென்று சிறிய சத்தம் வந்து விடவே ஷாலினி அவன் பக்கம் ஓர் அனல் பார்வையை வீசி அவன் காலை ஒரு மிதி மிதித்தாள். அவள் வீசிய தீப்பார்வையாலும் மிதித்த மிதியாலும் வந்த மன மற்றும் உடல் வலிகளால் முகத்தைச் சுளித்துக் கொண் டாலும் இன்னும் சிரிப்பு அடங்காததால் வாயைப் பொத்திக் கொண்டு, உடல் குலுங்க உள்ளேயே சிரித்துக் கொண்டு கிரண் இன்னொரு பக்கம் திரும்பிக் கொண்டான். நல்ல வேளை, யூ தன் பாதிப்பிலேயே ஆழ்ந்திருந்ததால் கிரணின் சேஷ்டைகளை கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் எரிமலையாகவே மாறியிருக்கக் கூடும்.

யூ திணறலுடன் கொந்தளித்தார், 'எப்படி... இதெல்லாம்பத்தி உங்களுக்கு எப்படித் தெரியும்? வெர்டியான் பிரச்சனைக்காக என் தனிப்பட்ட விவகாரத்தையெல்லாம் ஏன் குடாய்ஞ்சீங்க? என்ன இது மார்க்? நீங்க இவரை விட்டு என் மகளைப் பத்தியெல்லாம் ஆராயச் சொன்னீங்களா இல்லை, இவரே தகாத மாதிரி...' என்று குமுறியவர், மார்க்கும் சிரிப்பை அடக்கிக் கொள்வதைக் கவனித்து விட்டுக் குழம்பி நிறுத்தினார். 'என்ன, இந்த விஷயம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?'

மார்க் கையைத் தூக்கிக் காட்டி அவரை அமைதிப்படுத்தினார். 'யூ, கொஞ்சம் சாந்தி, சாந்தி! நீங்க நினைக்கறா மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்லை. சூர்யாவோட பிரமாதமான யூகத்திறன்தான்.

என்னை முதல்முறை சந்திக்கும்போதுகூட இவர் இப்படி எதோ யூகிச்சு அள்ளி வீசினார். எனக்கேகூட உங்களை மாதிரியே கோபம் வந்துச்சு. சூர்யா, நீங்களே உங்க வித்தையை விளக்கிடுங்க.'

முரளியும் முறுவலுடன் ஆமோதித்தார். "ஆமாம் யூ. சூர்யா பத்து நொடிகளில நூறு விஷயம் கிரகிச்சு, ஆயிரத்தை யூகிச்சுடுவார். சொல்லுங்க சூர்யா, எனக்கேகூட நீங்க இப்ப இவ்வளவு விஷயங்களை எப்படி கணிச்சீங்கன்னு ஆச்சர்யமாத்தான் இருக்கு.'

சூர்யா புன்னகையுடன் விளக்கினார். 'மன்னிச்சுக்குங்க யூ! இதெல்லாம் உங்க தனிப்பட்ட விஷயந்தான் ஒத்துக்கறேன். ஆனா கண்ணுக்கெதிரேயே பளிச்சுன்னு பட்டதுனால பார்த்து யூகிக்காம இருக்க என்னால முடியலை.'

யூ தன்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டார். கண்ணுக்கு அப்படியொன்றும் விசேஷமாகப் புலப்படாததால், இன்னும் நம்ப முடியாமல், 'கண்ணுக்கெதிரயா, அப்படி என்ன?'

சூர்யா தொடர்ந்தார். 'இதோ பாருங்க உங்க படுக்கைக்குப் பக்கத்துல இருக்கற புத்தகங்கள். சீனத் தத்துவக் கலாசாரத்தில் புத்தமதத் தாக்கத்தால் எந்த மாதிரி மாற்றங்கள் ஏற்பட்டிருக்குன்னு ஒண்ணு. இன்னொண்ணு பல மதங்களின் போதனைகளில் பகுத்தறிவு அடிப்படைப் பத்தி. அதோட பின்னட்டையில, புத்தம், பைபிள், கீதை போன்ற பல மதச்சார்பான பெரும் தத்துவப் போதனைகளை, அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கப் பொருந்தறா மாதிரி விளக்கறதாப் போட்டிருக்கு. இன்னும் ரெண்டு புத்தகங்கள் வயலின் இசைக் குறிப்புகள். அதோ அங்க வயலின் பெட்டி. இன்னும் வாசிக்க முடியலைன்னு நினைக்கிறேன், ஆனாலும் புத்தகம் படிச்சும் இசைத்தட்டுக்கள் கேட்டும் மனசுக்குள்ளேயே வாசிக்கறா மாதிரி நினைச்சு ரசிக்கறீங்க போலிருக்கு.'

மூச்சு விடுவதற்காக சூர்யா ஒரு நொடி நிறுத்தவும், அந்த விளக்கத்தால் அமைதியானது மட்டுமன்றி ஆச்சர்யமும் அடைந்ததால் மலர்ந்த முகத்துடன் யூ தூண்டினார். 'பிரமாதம் சூர்யா! ஆனா என் மகளைப் பத்தி சொன்னது, அவளோட நெருக்கமாத் தொடர்பிருக்கறது, அதெல்லாம் பத்தி எப்படி கணிச்சீங்க?'

கிரண் இடையில் குதித்தான். 'அது என் டிபார்ட்மென்ட். எனக்கே தெரியும், நானே சொல்றேன் சூர்யா' என்று கூறினான். அவர் கையாட்டி தொடருமாறு சைகையில் அனுமதி அளித்ததும் விளக்கினான். 'இதோ பாருங்க - உங்க படுக்கைக்குப் பக்கத்துல இருக்கற இன்னொரு மேஜைமேல உங்க பொண்ணு ஃபோட்டோ. அதுல உங்க பொண்ணு டென்னிஸ் ரேக்கேட்டும் ஒரு பரிசுக் கோப்பையும் வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டிருக்காங்க...'

யூ சிரித்தார். 'சரிதான், ஓகே, ஓகே. அந்தப் பகுதி இப்பப் புரியுது. ஆனா அது எப்படி உன் டிபார்ட்மென்ட்?'

கிரண் உரக்க சிரித்து விட்டு விளக்கினான். 'அது இல்லை. ஆனா அதுக்கப்புறம் நெருங்கிய தொடர்புன்னு சொன்னதுதான். இதோ பாருங்க, பக்கத்துலயே உங்க லேப்டாப் கம்ப்யூட்டரைத் திறந்து வச்சிருக்கீங்க. அதுல மின்னஞ்சல் விண்டோ தெரியுது, பக்கத்துலேயே உடனடிச் செய்தி விண்டோவும் திறந்திருக்கு இல்லையா? ரெண்டுலயும் உங்க பொண்ணோட நீங்க செய்திகள் தொடர்ந்து பரிமாறிக்கிட்டிருக்கறது நல்லாத் தெரியுது. ரெண்டையும் பாத்துட்டுதான் சூர்யா சொல்லியிருக்கணும். என்ன சூர்யா, உங்க யூகத்தைப் பத்தின என் யூகம் சரியா?'

சூர்யாவும் சிரித்துவிட்டு, தலையாட்டி ஆமோதித்தார். 'பர்ஃபெக்ட்! அப்படியேதான்.'

யூ மலர்ந்த முகத்துடன் சிரித்தபடி பாராட்டினார். 'அதிபிரமாதம். சில நொடிகளுக்குள்ள அத்தனையையும் ஆழ்ந்து கவனிச்சு அதுக்கும் மேல சரியா கணிச்சிருக்கீங்க. உங்க திறமை அபாரம்!

மிகமிக அபாரம்! இப்பதான் எனக்குப் புரியுது ஏன் உங்கமேல மார்க் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கார்னு. எனக்கும்கூட எங்க பிரச்சனைக்கான காரணத்தை நீங்க கண்டுபிடிச்சுடுவீங்கன்னு இப்ப பலத்த நம்பிக்கை வந்திடுச்சு.'

சூர்யா மெல்லத் தலையாட்டிப் பாராட்டுதலை ஏற்றுக்கொண்டு விசாரணையை ஆரம்பித்தார். 'என்னாலானதை நிச்சயமா முயற்சிக்கிறேன். சரி இப்ப அது பத்திக் கொஞ்சம் மேல பேசலாம்.

நினைச்சாலே வலியாத்தான் இருக்கும். இருந்தாலும் நீங்க தாக்கப்பட்ட சமயத்தில என்ன நடந்ததுன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கறவரை விவரமா சொல்லுங்க' என்றார்.

யூ மனவுறுதியுடன் மெல்லத் தலையாட்டிக் கொண்டு தொடர்ந்தார். 'எனக்கு ஞாபகம் வர்றவரைக்கும் நிச்சயமாச் சொல்றேன். உங்களுக்கு உதவறத்துக்கு என்னால என்னெல்லாம் முடியுமோ அத்தனையையும் செய்ய நான் தயார். வெர்டியானின் உன்னத வேலையைத் தடுத்துக் குலைக்க நினைக்கும் அயோக்கியர்களைக் கண்டுபிடிச்சு, அவங்க தீய முயற்சிகளைத் தகர்த்தெறிஞ்சே ஆகணும்.'

அவர் அதைக் கூறும்போது அவருடைய கண்களில் கணப்பொழுது தோன்றி மறைந்த ஒளியைச் சூர்யா கவனித்தார். யூ பார்ப்பதற்கு மென்மையானவராக இருந்தாலும் அவர் எஃகு போன்ற உறுதியான நெஞ்சத்தைக் கொண்டவர் என்பதை உணர்ந்தார். யூ தன் துறையில் தலைசிறந்த நிபுணராகியது வெறும் கல்விச் சிறப்பால் மட்டுமல்ல, அவருடைய மகத்தான மனஉறுதியாலும் கூடத்தான் என்று அனுமானித்துக் கொண்டு அவருக்கு பதிலுறுதி அளித்தார். 'நிச்சயமா! நாமெல்லாம் சேர்ந்து முயன்று சீக்கிரமே செய்யலாம். உங்களுக்கும், மார்க்குக்கும், வெர்டியானுக்காகவும் மட்டுமல்ல, இந்த உலகச் சுற்றுச் சூழலின் நன்மைக்காகவுந்தான்.'

சூர்யா சுத்தசக்தி சங்கடத்தின் சிக்கல்களைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு தன் வாக்குப்படி விரைவில் நிவர்த்திப்பதற்காக, தன் விசாரணைகளை துரிதப்படுத்தலானார்.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com