யார் இவர்?
அந்தச் சிறுவன் எப்போதுமே சற்று கூச்ச சுபாவமுள்ளவன். அமைதி விரும்பி. வம்புச் சண்டைக்குப் போக மாட்டான். பள்ளிக்குப் போவதும், அருகிலுள்ள தோப்பில் விளையாடுவதும் அவனுக்கு மிகவும் பிடித்தவை. அந்தத் தோப்பில் சிறுவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாடகம் நடத்துவார்கள். எல்லாம் புராண நாடகங்கள். அதில் அவனும் ஆர்வத்துடன் கலந்து கொள்வான். அவனே சிவனாக, பார்வதியாக, ராமனாக, கிருஷ்ணனாக மாறி மாறி நடிப்பான். அவ்வாறு நடிக்கும்போது தன்னை மறந்து, அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவான். சில சமயங்களில் ஒருவித சமாதியில் ஆழ்ந்து விடுவான். மற்றச் சிறுவர்கள் அவன் தூங்கிவிட்டதாக நினைத்துப் பேசாமல் இருந்து விடுவர்.

அப்படித்தான் ஒரு சிவராத்திரி அன்று அவன் இருக்கும் ஊருக்கு நாடகக் குழு ஒன்று வந்து நாடகம் நடத்தியது. சிவனாக நடிப்பவருக்கு உடல் நலமில்லாததால் அந்தச் சிறுவனுக்கு சிவ வேடம் அணிவித்து நடிக்க ஏற்பாடுகள் செய்தனர். நாடகமும் ஆரம்பமாயிற்று.

சிறுவன் மேடைக்கு வந்தான். சில நிமிடங்கள்தான் ஆயிருக்கும், அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். கண்கள் மேலே சொருகியிருக்க, ஒரு விதப் பரவச நிலையில் இருந்தான். பேச்சில்லை. மூச்சில்லை. அவனுக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டதாக ஒரு சிலர் நினைத்தனர். அவனை மேடையிலிருந்து இறக்கி, தண்ணீர் தெளித்து அவன் மயக்கத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். ஆனால் பயனில்லை. விடிய விடிய அதே யோக சமாதியில் தன்னை மறந்து இருந்தான் அவன்.

சிறுவனாக இருந்தபோது மட்டுமல்ல; வளர்ந்து பெரியவனான பிறகும் கூட அந்தச் சமாதி நிலை தொடர்ந்தது. அவரது தத்துவங்களால், போதனைகளால் ஈர்க்கப்பட்டு பலர் அவரிடம் சீடர்களாகச் சேர்ந்தனர். அச்சீடர்களால் பாரதம் புத்துயிர் பெற்றதுடன், வெளிநாடுகளிலும் அதன் புகழ் பரவியது. பாரதத்தின் இழந்த பெருமை மீட்டெடுக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணமான அந்த அன்றையச் சிறுவன் யார் தெரியுமா?

அரவிந்த்

விடை

© TamilOnline.com