நினைத்தால் வாழலாம் நீண்ட காலம்...
நீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆவல் மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்குமே இருக்கக்கூடியதுதான். நூறு வயது வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதால் மட்டும் ஆயுள் நீடித்துவிடுவதில்லை. அதற்கு முயற்சி தேவை. மருத்துவ ரீதியாக ஆயுளை நீடிப்பது எப்படி என்று அலசுவோம்.

சென்ற நூற்றாண்டில் 50 வயதுவரை மட்டுமே வாழ்ந்து வந்த மனித இனம் இந்த நூற்றாண்டில் சராசரியாக 70 முதல் 80 வரை வாழ்கிறது. இது ஆண்களுக்கு 77 ஆகவும் பெண்களுக்கு 80 ஆகவும் காணப்படுகிறது. அவரவர் மரபணுக்கள் இதை நிர்ணயித்தாலும், நாம் இதை எப்படி மாற்றுவது?

இந்தக் கேள்விக்கு முதலில் நம்மிடம் உள்ள அட்டவணையை பார்ப்போம். Center of Diseases and Prevention (CDC) 2003ல் எடுத்த கணக்கெடுப்பில், மரணம் ஏற்படுத்தும் பத்து முக்கிய நோய்கள் பின்வருமாறு. இந்த நோய்கள் ஆண்களிடமும் பெண்களிடமும் வெவ்வேறு வகையில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களைத் தாக்கும் பத்து முக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்:

* இருதய நோய்
* புற்றுநோய்
* விபத்து
* பக்கவாதம்
* நுரையீரல் நோய் (COPD)
* நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
* நிமோனியா மற்றும் இன்ஃப்லுயென்ஸா (Influenza)
* தற்கொலை
* சிறுநீரக நோய்
* அல்ஷைமர்ஸ் மனச்சிதைவு (alzheimer dementia)

இந்த வரிசை பெண்களிடத்தில் சற்று மாறிக் காணப்படுகிறது.

பெண்களைத் தாக்கும் பத்து முக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்:

* இருதய நோய்
* புற்றுநோய்
* பக்கவாதம்
* நுரையீரல் நோய் (COPD)
* அல்ஷைர்ஸ் மனச்சிதைவு (alzheimer dementia)
* நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
* விபத்து
* நிமோனியா மற்றும் இன்ஃப்லுயென்ஸா (Influenza)
* சிறுநீரக நோய்
* நுண்ணுயிர்க் கிருமித் தாக்கம் (Sepsis)

பெண்களிடத்தில் தற்கொலை பதினேழாவது இடத்தை வகிக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு அமெரிக்காவில் செய்யப்பட்டாலும், அவரவர் இனத்தை வைத்துப் பாகுபாடு செய்தால், இந்தியரிடத்தில் அதிகமாகக் காணப்பட்ட நோய்கள் மீண்டும் இருதய நோயும் புற்றுநோயுமே ஆகும்.

இந்த நோய்களை முன்தடுப்பு மூலமும், நோய் வந்தபின் கட்டுக்குள் வைப்பதின் மூலமும் ஒருவரது ஆயுளை நீட்டிக்க முடியும். இதற்கான வழி முறைகளைக் காண்போம்.

இருதய நோய்:

இதுவே தலையாய உயிர்க்கொல்லி ஆகும். இருபாலரிடத்தும் அதிகமாகக் காணப்படும் இருதய நோய் சரமாரியாக உயிர்களைப் பதம்பார்க்க வல்லது. 35 முதல் 65 வயது வரையிலான ஆண்களிடத்தில் இருதய நோய் அதிகமாகக் காணப்படுகிறது. ஒருவரின் தினப்படி பழக்க வழக்கங்களைச் சற்றே மாற்றுவதின் மூலம் இந்த நோயைத் தவிர்க்கவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். இதற்கான வழிமுறைகள்:

* புகை பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.
* காய்கள், பழங்கள் உட்கொள்ளவேண்டும்.
* கொழுப்புச் சத்து மிகுந்த உணவைக் குறைவாகச் சாப்பிடவேண்டும்.
* உடல் எடையைச் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும்.
* இரத்ததில் கொழுப்பின் அளவைப் பார்த்து, அதிகம் இருந்தால் குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* இரத்ததில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம் சரியாக இருக்கும்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தினமும் ஒரு சிறிய கோப்பை சிவப்பு ஒயின் (Red wine) அருந்துவது நல்லது. அளவு அதிகமானல் இது கேடு விளைவிக்கும்.
* மருத்துவரின் ஆலோசனை கேட்டு, தினமும் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

புற்றுநோய்:

இது இரண்டாவது பெரிய உயிர்க்கொல்லி. இதில் நுரையீரல், மார்பக, பெருங்குடல் புற்றுநோய்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மேற்கூறியவாறு புகை பிடிப்பதை நிறுத்தி, நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் புற்றுநோயின் அளவும் குறைகிறது. அதிகமாக மது அருந்துவது வயிற்றுப் பகுதி மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டு செய்யவல்லது. மது அருந்துவதை வெகுவாகக் குறைப்பதன் மூலம் இந்தவகைப் புற்றுநோயைத் தவிர்க்கலாம். இதைத் தவிர, அவ்வப்போது செய்ய வேண்டிய பரிசோதனைகளை (Cancer screening tests) செய்வதன்மூலம் புற்றுநோய் இருந்தாலும் அதைச் சரியான சமயத்தில் கண்டுபிடித்து, வாழ்க்கையை நீட்டிக்கலாம். இதில் குறிப்பாக Colonoscopy, Mammogram ஆகியவை உதவும். 50 வயதுக்கு மேற்பட்டோர் இவற்றைக் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்.

விபத்து:

ஆண்களுக்கான உயிர்க்கொல்லிகளில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தேவையில்லாத விபத்துக்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக இளவயது மரணம் விபத்தினால் ஏற்படுகிறது. சீட் பெல்ட் அணிவதின் மூலமும், வண்டியின் வேகத்தை அளவோடு வைத்திருப்பதின் மூலமும் தவிர்க்கலாம். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

பக்கவாத நோயைக் குறைப்பதற்கு மேற்கூறிய இருதய நோய் தவிர்ப்பு முறைகள் உதவுகின்றன. ஆண்டுதோறும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன்மூலம் நிமோனியா, ஃப்ளூ ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கலாம். தவிர, மனச்சிதைவைக் குறைக்க மனஅழுத்தத்தைக் (stress) குறைக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும். தியானம், யோகம் போன்றவை இதற்குப் பெரிதும் உதவுகின்றன. மரணத்தைப் பற்றியே எப்போதும் சிந்தனை செய்வதை நிறுத்த வேண்டும். வாழும்வரை நிம்மதியாக வாழுவோம் என்ற கோட்பாட்டைக் கைக்கொள்ள முயற்சிக்க வேண்டும். தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமும் சிறுநீரக நோயைத் தவிர்க்கலாம். அல்ஷைமர் வியாதியைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

அன்று சாவித்திரி எமனோடு போராடினாள். நாமும் நம் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் ஆயுளைக் கூட்டமுடியும். காலதாமதம் செய்யாதீர்கள். நேற்று வரை வேறு வாழ்க்கை வாழ்ந்தாலும் இன்றுமுதல் அதை மாற்ற முடியும், அதனால் பயன் உண்டு என்று தெளிவோம். இந்தக் கணமே அதற்குச் சரியான கணம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com