1. அது ஒரு மூன்று இலக்க எண். அந்த எண்ணை இரண்டால் வகுக்க மீதம் ஒன்றும், மூன்றால் வகுக்க மீதம் இரண்டும், நான்கால் வகுக்க மீதம் மூன்றும், ஐந்தால் வகுக்க மீதம் நான்கும், ஆறால் வகுக்க மீதம் ஐந்தும் வருகின்றது. ஆனால் ஏழால் வகுத்தால் மீதம் ஏதும் வருவதில்லை. அந்த எண் எது?
2. ராமுவிடம் சில சாக்லேட்டுகள் இருந்தன. அது போல் பாபுவிடமும் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமுவிடம் இருந்து ஏழு சாக்லேட்டுகளை பாபுவுக்குக் கொடுத்தால் பாபுவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கை ராமுவினுடையதைப் போல இருமடங்கு ஆகிவிடுகிறது. அதுபோல பாபுவிடமிருந்து ஏழு சாக்லேட்டுகளை ராமுவுக்குக் கொடுத்தால் இருவரிடமும் உள்ள சாக்லேட்டுகளின் எண்ணிக்கை சமமாகி விடுகிறது. அப்படியென்றால் இருவரிடமும் இருந்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
3. ஒரு பண்ணையில் சில ஆடுகளும் கோழிகளும் இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 20. அவற்றின் எண்ணிக்கை 8 என்றால் ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?
4. ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி, வரும் தொகையுடன் அதே எண்ணைக் கூட்டி வரும் தொகையை நான்கால் வகுத்தால் வருவதும் அதே எண்தான். அந்த எண் யாது?
5. 17 மற்றும் 4913 ஆகிய இரண்டு எண்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?
விடைகள்
1. அந்த எண் = 119
119 / 2 = 59; மீதி 1
119 / 3 = 39; மீதி 2
119 / 4 = 29; மீதி 3
119 / 5 = 23; மீதி 4
119 / 6 = 19; மீதி 5
119 / 7 = 17; மீதி எதுவும் இல்லை
ஆகவே விடை 119.
2. ராமுவிடம் இருந்தது = 35
பாபுவிடம் இருந்தது = 49
ராமுவிடம் இருந்து ஏழு சாக்லேட்டுகளை பாபுவிடம் அளிக்க = 35 - 7 = 28;
பாபுவிடம் சேர்வது 49 + 7 = 56.
பாபுவிடம் இருக்கும் சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை ராமுவுடையதைப் போல இரு மடங்காகி விடுகிறது. (2 x 28 = 56)
பாபுவிடம் இருக்கும் சாக்லேட்டுக்களில் இருந்து ஏழு சாக்லேட்டுகளை ராமுவிடம் அளிக்க 49 - 7 = 42;
ராமுவிடம் சேர்வது = 35 + 7 = 42.
ராமுவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கையும், பாபுவிடம் இருக்கும் சாக்லேட்டுகளின் எண்ணிக்கையும் சமமாகி விடுகிறது.
3. ஆடுகள் 2; கோழிகள் 6
மொத்தக் கால்களின் எண்ணிக்கை = 20
2 ஆடுகளின் கால்கள் = 2 x 4 = 8
6 கோழிகளின் கால்கள் = 6 x 2 = 12
4. விடை = 3
ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்க = 3 x 3 = 9
அதே எண்ணால் கூட்ட = 9 + 3 = 12
வரும் தொகையை நான்கால் வகுக்க = 12 / 4 = 3
5. இரு விதங்களில் தொடர்பு உண்டு
4 + 9 + 1 + 3 = 17;
17 x 17 x 17 = 4913