ஒரு விபத்து நடந்தால் கார் ஓட்டுவதையே விட்டுவிடுவோமா?
அன்புள்ள...

நிறையப் பெண்கள் பக்கம் பிரச்சனையைப் பற்றித்தான் உங்கள் பகுதியில் படிக்கிறேன். மாமியார் சரியில்லை, மருமகள் சரியில்லை, கணவர் சரியில்லை என்ற புலம்பல்களைப் பார்க்கிறேன். மனைவி சரியில்லை என்று எத்தனை பேர் உங்களிடம் புகார் செய்திருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது நானும் அவளும் பிரிந்து வாழ்கிறோம். 2 வயதுப் பெண். என்னிடம் ஒட்ட விடாமல் அவளும் அவள் அம்மாவும் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் காரணமாக விவாகரத்துக் கோராமல் உடகார்ந்துகொண்டு இருக்கிறேன்.

நிறையப் படித்துவிட்டாளாம். இந்தியாவில் வெறும் BA தான். நான்தான் MBAவுக்குத் தயார் செய்து படிக்க வைத்தேன். வேலையும் நல்லதாகக் கிடைத்தது. மூன்று வருடம் ஒழுங்காகத்தான் இருந்தாள். அப்புறம் பதவி ஆசை. பெரிய அசைன்மெண்ட். வெளி மாநிலத்தில் கிடைத்தது. போகவேண்டாம் என்று சொன்னேன்.கேட்கவில்லை.

'உன்னுடையது பெரிய வேலை ஒன்றுமில்லை. நீ பதவி விலகி என்னோடு வா' என்று என்னிடமே திருப்பினாள். வார்த்தை கொஞ்சம் முற்றிப் போய்விட்டது. அண்ணன், தம்பி என்று குடும்பமே இங்கேதான் இருக்கிறார்கள். அம்மா கிரீன் கார்டு உள்ளவர். அப்புறம் என்ன, கிளம்பிவிட்டாள். ஒன்றரை வயதுக் குழந்தையுடன்.


##Caption## உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், அவள் செய்தது சரிதானா? கணவன், குழந்தை என்று ஏற்பட்டவுடன் குடும்பத்துக்குத் தானே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஒரு புருஷனும் அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லையென்று சொல்லவில்லை. ஏதோ கேட்காததைக் கேட்டுவிட்டேனாம். அவள் தன்மானம் போய்விட்டதாம். தனியாக வாழ்ந்து காட்ட முடியுமாம். என் குழந்தையின் குரலைக் கேட்க முடியாமல் ஏங்குகிறேன். எனக்கு இந்த வக்கீல், கோர்ட் விவகாரம் எதுவும் பிடிக்காது. அது அவளுக்குத் தெரியும். அந்த தைரியம் வேறு.

எப்படி இவளிடம் பணிந்து போய் வாழ்க்கை நடத்துவது? இந்த முறை நானே மன்னிப்புக் கேட்டு ஏதோ செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அவளது திமிரான நடத்தையினால் சண்டை வராது என்று என்ன நிச்சயம்? நீங்கள் எப்போதும் பிறருக்காகப் பரிந்து 'single pedal' செய்வீர்கள். இந்தமுறை என் நியாயத்தைப்பற்றி மட்டும் பாருங்கள்.... ப்ளீஸ்...

இப்படிக்கு
......

அன்புள்ள.....

என்னை நன்றாக 'அனலைஸ்' செய்திருக்கிறீர்கள். உண்மைதான். இரண்டு பக்கங்களின் வாதத்தையும் தெளிவாகக் கேட்க இயலாமல் இருக்கும் நிலையில் யாருக்கு மனம் புண்ணாகியிருக்கிறதோ அவருக்குச் சிறிது ஒத்தடம் கொடுக்க விரும்புகிறேனே தவிர, புண்ணைக் கிளறப் பிடிப்பதில்லை. நீங்கள் படும் வேதனையும் உண்மைதான். ஒரு பாசமுள்ள தந்தையாக, காதல் உள்ள கணவனாக, பொறுப்புள்ள வீட்டுத் தலைவனாக நீங்கள் இருக்கிறீர்கள், ஆசைப்படுகிறீர்கள் என்று நிச்சயம் புரிகிறது.

ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் புரியவைக்க முயற்சி செய்கிறேன். 20, 30 வருடங்கள் முன்பு இருந்த ஒரு பெண்ணின், மனைவியின் நிலைமை வேறு. இப்போது இருக்கும் நிலைமை வேறு. ஓர் ஆண் எல்லா வகையிலும் உயர்ந்தவன், ஒரு பெண் தாழ்ந்து இருக்க வேண்டும் என்ற சமூக விதி (ஜாதியில் உயர்வு, தாழ்வு போல) இருந்தது. வீட்டுக்குள் முடக்கிவைக்கப் பட்ட பெண், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண், கதவை நெட்டி முறித்து வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தைக் குடும்பமோ, சமுதாயமோ ஏற்படுத்தியபோது, கொஞ்சம் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போக வேண்டிய நிலை குடும்பத்துக்கும் சமூகத்துக் கும் ஏற்பட்டது. இப்போது, அதுவும் இந்த அமெரிக்க வாழ்க்கையில் ஆண்கள் நிறைய விட்டுக்கொடுத்து, வீட்டு வேலையிலும் பங்கேற்று, அனுசரித்துக்கொண்டு போகிறார்கள்.

டிஷ்-வாஷ் செய்தாலும், பலசரக்கு வாங்கப் போனாலும், மனதில் 'ஐயோ இதைச் செய்யாவிட்டால் கத்தித் தீர்த்துவிடுவாளே' என்ற சங்கடமான உணர்ச்சிதான் பொறுப்புணர்ச்சியைவிட அதிகம் இருந்தால், அங்கே கணவன்-மனைவிக்குள் conflict வந்துவிடும். நீங்கள் 'பொறுப்புணர்ச்சி' கணவராக இருந்தும், அவள் மனைவி, அவள்தான் குடும்பத்தை ஓட்டிச் செல்லத் தன் விருப்பு வெறுப்புகளை அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தோன்றும்போது, அங்கே தன்முனைப்பு (Ego) தன்னுள் வளர்ந்து கொண்டே போகிறது.

உங்கள் மனைவி செய்வது சரியென்று நான் சொல்லவில்லை. எனக்கு அவர்களைத் தெரியாது. என்னிடம் எந்த நியாயம் கேட்டும் வராத நிலையில் நான் அவர்களுக்கு எதையும் எடுத்துச்சொல்ல இயலாமல் இருக்கிறேன். 'ஆமாம், உங்கள் மனைவி மிகவும் மோசம். உங்களை விட்டுப் பிரிந்து போயிருக்கக் கூடாது' என்று உங்கள் பக்கம் பேசுவதால் உங்கள்மேல் கோபமும் வெறுப்பும் தான் அதிகமாகும். வார்த்தை முற்றியது என்று சொன்னீர்களே -- அவர்கள் வருத்தத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியக்கூடும்?

குழந்தையின் குரல் கேட்கவேண்டுமென்றால் ஒரு surprise visit செய்து பாருங்கள். முதலில் உங்கள் மனைவி கொஞ்சம் பிடிவாதம், கோபம் எல்லாம் காட்டுவார்கள். உங்கள் தன்மானம் கொஞ்சம் அடிபடும். அதனால் என்ன? உங்கள் மனைவி, உங்கள் குழந்தை, உங்கள் குடும்பம். ஒரு தடவை accident ஆகிவிட்டது என்று எவ்வளவு நாள் காரையே தொடாமல் இருப்போம்! அதுபோலத்தான்...

உங்கள் மனைவிக்கு உங்கள்மேல் அவ்வளவு வெறுப்பு ஏற்படக் காரணம் என்னவென்று நீங்கள் தெரிவிக்கவில்லை. அவருக்கும் அதே 'தன்முனைப்பு' உங்களைப் போல இருக்கக் கூடும். அவ்வளவுதான். நீங்கள் அவரைவிட மனதில் உங்களை உயர்வாக நினைத்தீர்கள் என்றால், நீங்கள் உயர்ந்தவர்தானே -- விட்டுக்கொடுத்து விடுங்கள். நீங்கள் அவருக்குச் சமமானவர் என்று நினைத்தால் -- அவரும் சமம்தானே, இந்த தடவை விட்டுக் கொடுத்துவிடுங்கள்.

Life is beautiful. I am not asking you to surrender to anyone. Just render.

வாழ்த்துக்கள்.
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com