ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
ரயில் சுற்றுப்பயணம் பற்றி ஆலோசனை வழங்க என்னை குஜராத் அரசு அழைத்திருந்தது. குஜராத் அரசு நடத்தும் 'ராயல் ஓரியன்ட் டிரெயி'னில் நாங்கள் டெல்லிக்குப் புறப்பட்டோம். என் கணவர், என் சித்தி மகள் நடாஷா ஆகியோருடன் நான் பயணம் செய்தேன். டெல்லியில் எங்களை மலர்மாலை, குளிர்பானத்துடன் வரவேற்றார்கள். குஜராத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சிறு பிரசுரம் ஒன்றையும் எங்களுக்குக் கொடுத்தார்கள். சுகதேபும் அமாகன் சிங்கும் எங்கள் வழிகாட்டிகள். எங்கள் ரயில் பெட்டிக்கு குஜராத் புராணங்களில் கதையாகச் சொல்லப்படும் நாராயண-சரோவர் என்ற ஏரியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
ரயிலில் ஏறுவதற்கு முன் ரயிலையும் எஞ்சினையும் பார்வையிட்டோம். அந்த எஞ்சின் மிகவும் உயர்தரமானது. ரேவாரி மகாராஜாவுக்குச் சொந்தமானது. ரயிலுக்கு கம்பீரமான நீல வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. நீலத்தின் மத்தியில் நெடுகிலும் குஜராத்திய மலர்ச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. புகழ்பெற்ற இடங்களான, சசாங்கிர், பாலிடானா, துவாரகா, சபுதாரா, ஜலவாத், சோமநாத் போன்ற பெயர்கள் ரயில் பெட்டிகளுக்குச் சூட்டப்பட்டிருந்தன. மது வழங்கும் பெட்டியின் பெயர் நர்மதா. அங்கே இந்தியாவில் தயாரான அந்நிய மதுவகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான அலங்கார அமைப்புகள், இருக்கைகள் சிகப்பு நிற வெல்வெட் துணியினால் மூடப்பட்டிருந்தன. முக்காலிகளின் கால்கள் யானையின் கால்போலச் செதுக்கப்பட்டிருந்தன. ஆடம்பர அறையில் ஏகப்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று இருந்தது. இந்தியாவின் கலாசாரம், மக்கள், சிற்பக்கலை, நாட்டுப்புறப் பாடல்கள் இவைபற்றிப் போதிய புத்தகங்கள காணப்பட்டன. பல முக்கியமான திரைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
##Caption##முதல்நாள் பயணம் டெல்லிக்கும் சித்தோர்காருக்கும் இடையில் நடந்தது. ரயிலில் ஓய்வெடுத்துக்கொண்டும், பேசிக் கொண்டும், எல்லோருடனும் அறிமுகம் செய்து கொண்டும், மதுவறையில் வரவேற்பு பானம் பருகிக்கொண்டும் நேரத்தைக் கழித்தோம். பாரம்பரிய குஜராத்தி பாணியில் அலங்கரிக்கப்பட்ட உணவுப் பெட்டியில் பகல் உணவு பரிமாறப்பட்டது. அதன் சுவர்களில் கிராமியப்பாணியில் ஜனங்கள், பிராணிகள், மலர்கள், இலைகள் வரையப்பட்டிருந்தன.
காலை உணவு, பெட்டியின் சொகுசு அறையிலோ அல்லது நமது அறையிலேயோ பரிமாறப்பட்டது. எப்போதும் பழரசம், ரொட்டி, ஜாம், ருசியான முட்டை, பொரி, கட்லெட், உருளைக்கிழங்கு போண்டா, பழங்கள் ஆகியவை உண்டு. இரவு பகல் எந்த நேரத்திலும் கேட்கும்போது தேநீர், காபி கிடைக்கும். காலையில் இருவர் நம் அறைக்கே வந்து பிரியத்துடன் விருந்து படைக்கும்போது ராஜ மரியாதை கிடைப்பது போன்ற உணர்வைத் தவிர்க்கமுடியாது. இரண்டாவது நாள் அதிகாலையில் நாங்கள் சித்தூர் சென்று அடைந்தோம். தற்போதைய சித்தூர் அரசர் உலகத்திலேயே மிகப் பழமையான அரச குடும்பத்தில் எழுபத்தாறாவதாகப் பதவி வகிப்பவர். இந்தியாவில் பொதுவாக வழங்கப்படும் 'மகாராஜா' என்பதற்கு மாறாக 'மகாராணாக்கள்' (மகாவீரர்கள்) என்று கம்பீரமாக அறியப்பட்டவர்கள் இந்த சித்தூர் அரச குடும்பத்தினர்கள் மட்டும்தான். பாபருக்கும் ராணா சங்காவிற்கும், ஹூமாயூனுக்கும் உதயசிங்கிற்கும், அக்பருக்கும் பிரதாப்சிங்கிற்கும் நடந்த இத்தனை போர்களுக்கும் சித்தூர் சாட்சியாக நிற்கிறது. ஐரோப்பாவில் நடந்த நூற்றாண்டு யுத்தத்திற்குச் சமமானது இந்த நீண்ட போர்கள்.
கதைகளுக்கும் புராதன ஐதீகங்களுக்கும் களஞ்சியம் போன்றது சித்தூர். குழந்தை ராணாவின் உயிரைக் காப்பாற்ற, அதன் செவிலித்தாயாக இருந்து வளர்த்த பன்னா பாய், தன் சொந்த மகனையே உயிர்த்தியாகம் செய்யவைத்துத் தியாகத்தின் அத்தாட்சியாகச் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். பிரதாபின் சித்தப்பாவான பன்வாரி, தான் சிம்மாசனம் ஏற இளையராஜ குமாரரான பிரதாபைக் கொன்றுவிட முயற்சி செய்தார். இதை அறிந்த பன்னாதாய் அரச குழந்தையை பத்திரமாக வெகுதொலைவுக்கு அனுப்பிவிட்டு ராஜ குமாரனின் படுக்கையில் தன் குழந்தையைப் படுக்கவைத்தார். பன்வாரியால் பன்னா தாயின் குழந்தை கொல்லப்பட்டது. அரச வாரிசு தப்பியது.
##Caption##இந்தியாவின் மிக அழகிய மாதரசியான 'மகாராணி பத்மினி' மற்றும் 13 ஆயிரம் ராஜபுதனப் பெண்கள், தைரியமாக தீயில் குதித்த (ஜவுஹார்) வரலாறும் இருக்கிறது. மகாராணி பத்மினியைக் கைப்பற்ற மேவார் சமஸ்தானத்துடன் அலாவுதீன் கில்ஜி போர் தொடுத்தான். பல மாதங்கள் முற்றுகையிட்டிருந்த அலாவுதீன் கில்ஜியுடன் நடந்த போரில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட பிறகு, ராஜபுத்திரர்கள் இறுதிப்போரில் தாங்கள் உயிர்த் தியாகம் செய்ய முடிவு செய்தனர். அவர்களுடன் 13 ஆயிரம் பெண்கள் அக்னி குண்டத்தில் குதித்து உயிர் துறந்தனர். மீராபாய் கிருஷ்ணனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் மீராபாய் ஆலயத்தைப் பார்த்தோம். மகாராணி பத்மினியின் அரண்மனை, வெற்றிக்கோபுரம், காம்பிரி நதிக்கரையில் உள்ள கோட்டை ஆகியவைகளையும் பார்த்தோம். சித்தூரிலிருந்து வசீகரம் மிக்க நகரமான உதய்பூருக்குப் புறப்பட்டோம்.
சித்தூரின்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், 400 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அழகு நகரமான உதய்பூருக்கு மேவாரின் தலைநகரம் மாற்றப்பட்டது. அரண்மனைக்கும் ஏரிகளுக்கும் புகழ்பெற்ற, இணையற்ற நகரமான உதய்பூருக்கு மகாராணா உதய்சிங் அடிக்கல் நாட்டினார். மனிதர்களால் வெட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நான்கு ஏரிகள் அங்கு உள்ளன. புகழ்வாய்ந்த 'ஏரி அரண்மனை' நாட்டின் மிகவும் சிறப்பான ஐந்து நட்சத்திர ஓட்டல்களுள் ஒன்றாகி தாஜ் குழுவினரால் நடத்தப்படுகிறது. இந்த ஏரியிலுள்ள பல கட்டிடங்கள் பல்வேறு பணக்காரக் குடும்பங்களுக்குச் சொந்தமாகி ஓட்டல்களாக ஆக்கப்பட்டுள்ளன. மகாராணாக்களுக்குச் சொந்தமான 'ஃபடேநிவாஸ்', 'சிவ நிவாஸ்' என்ற மற்ற இரண்டு அரண்மனைகளும் கூட அரண்மனை ஓட்டல்களாக மாற்றப்பட்டு விட்டன. சுற்றுச்சுவர்களுக்கு உள்ளே விலை உயர்ந்த பழைய கார்கள் அணிவகுத்து நிற்பதை இங்கு காணலாம். ஒரு காரின் எண் தகடு ராஜஸ்தான் 14 என்பதைக்காட்டுகிறது. முதன்முதலாக வாங்கப்பட்ட பதினான்கு கார்களில் ஒன்றுதான் இது. ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரும்பொருள் காட்சியகமும், சித்திரச் சாலையும் மேவார் ராணாக்களைப்பற்றிய முழுவிபரங்களையும் தருகிறது.
இந்த ஏரி நூறு ஏக்கர் வனப்பூங்காவினால் சூழப்பட்டுள்ளது. வனப்பூங்கா பச்சை வண்ணப் பட்டைபோல் ஏரியைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது. உதய்பூரில் சில்பகிராம் எனப்படும் ஒரு கைவினைஞர் கிராமம் உள்ளது (Shilp Gram). இங்கு அநேகக் கலைஞர்களும் கைவினைஞர்களும் வசிக்கிறார்கள்; உற்பத்தி செய்கிறார்கள்; அவற்றை விற்பனை செய்கிறார்கள். அங்கு சால்வைகளும் உள்ளூர் ஜவுளிகளும் விற்பனையாகின்றன. இங்கு சுட்ட மண் பொம்மைகள், மணிகள், நகைகள், வண்ணச் சித்திரங்கள், மரத்தில் செய்தவைகள் நியாயவிலையில் கிடைக்கின்றன. பாம்பாட்டி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாம்பின் படம்போல தங்கள் கைகளைத் தூக்கிக் கொண்டு சுற்றிச்சுற்றி நடனம் ஆடுகிறார்கள். ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திறந்தவெளித் தேநீர்விருந்துடன் எங்கள் பயணம் நிறைவு பெற்றது.
உதய்பூரிலிருந்து மாலை 6.30க்கு ரயில் புறப்பட்டது. ரயிலில் இரவு உணவு முடிந்தபிறகு எங்கள் பயணக்குழுவிலுள்ள இதர உறுப்பினர்களுடன் அறிமுகம் செய்துகொண்டு பழகினோம். உற்சாகத்தை அளித்த இந்தப் பயணம் எங்களால் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக எங்களுடன் பயணம் செய்த வெளிநாட்டவர்களான காலின்-ரோஸ்மேரி, பேராசிரியர் ஓர்லியேக்-மெர்லின், கனடாவாழ் இந்தியர்களான ஷா தம்பதிகள் ஆகியோரை மறக்க இயலாது. மற்றும் உ.பியைச் சேர்ந்த காதல் ஜோடிகளான பிரசாத்-ராணி, இளமையும் துடிப்பும் கொண்ட பம்பாய்ப் பெண்கள் அர்ச்சனா, ஜெவேலா ஆகியோருடன் எங்கள் பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருந்தது.
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை |