இன்று இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கும் பலருக்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் முக்கியமானவர் இலக்கியவீதி இனியவன். தாமே ஓர் எழுத்தாளராக இருந்தபோதும், தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல், இலக்கியவீதி அமைப்பின் மூலம் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தவர், ஊக்குவித்து வருபவர். விவசாயத்தில் சம்பாதிப்பதைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகச் செலவழித்து வருபவர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையிடமிருந்து Fellowship பெற்றவர். இலக்கியச் செம்மல், பாரதி பணிச்செல்வர், கலை இலக்கியப் பாரி, குறள்நெறிப் புரவலர் உட்படப் பல்வேறு பட்டங்கள் பெற்றுள்ள இவரைத் தென்றல் இதழுக்காகச் சந்தித்த போது...
கே: இலக்கியவீதி அமைப்பைத் தொடங்கக் காரணம் என்ன?
ப: எனது சொந்த ஊர் பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலை அடுத்துள்ள விநாயக நல்லூர். இது ஒரு குக்கிராமம். பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே நான் படித்தேன். இளமைப் பருவத்திலிருந்தே இருந்த இலக்கிய வேட்கை காரணமாக பாரதி, பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன் எனப் பலரின் நூல்களைப் படித்து எனது தகுதியை வளர்த்துக் கொண்டேன். நான் இளைஞனாக இருக்கும் போதே சிறுகதைகள் எழுதத் தொடங்கி விட்டிருந்தேன். பல பத்திரிகைகளில் கதைகள் வெளியாயின. சிறுகதை, நாவல் போட்டிகளில் பரிசும் வாய்த்தன. இந்நிலையில் எழுத்தாள நண்பர்கள் சிலர் பத்திரிகை தொடங்கலாமே என்று கூறினார்கள். நடைமுறை சாத்தியமின்மை கருதி அம்முயற்சியை மேற்கொள்ளவில்லை. அதே சமயம் இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள் போன்றவற்றை நடத்த ஓர் அமைப்பைத் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி மதுராந்தகத்தில், 1977ஆம் வருடம் ஜூலை மாதம் 10ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது இலக்கிய வீதி. நாரண. துரைக்கண்ணன் தலைமை வகித்தார். ஜே. எம். சாலியின் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இதுவே இலக்கிய வீதியின் முதல் நிகழ்ச்சி. தமிழகத்தில் இயங்கிவரும் இலக்கிய அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக இலக்கியவீதி கடந்த 31 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
கே: இலக்கியவீதி என்ன செய்கிறது?
ப: 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்' என்பதுதான் இலக்கியவீதியின் இலட்சியம். எனவேதான் 'இலக்கியவீதி' என்று இந்த அமைப்புக்குப் பெயர் சூட்டப்பட்டது. மாதம்தோறும் நடக்கும் இலக்கியச் சந்திப்பில் கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, விவாதங்கள் எனப் பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. 'கவிக்குரல்' நிகழ்ச்சி மூலம் புதிய கவிஞர் ஒருவர் அறிமுகம் செய்யப்படுகிறார். சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள், ஆண்டு இறுதியில் நூல் வடிவம் பெறுகின்றன. நூல் ஒன்று திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சுவைஞர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது. வாசகர்களின் கேள்விகளுக்கு நூலாசிரியர் பதில் கூறுவார். இது போன்று கலந்துரையாடல், நேருக்கு நேர் எனப் பல இலக்கிய நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துகிறோம்.
கே: இவற்றுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: ஆரம்பத்தில் நானும் என் நண்பர்களும் விருந்தினர்களுக்கான பயணக் கட்டணம், அழைப்பிதழ் போன்ற செலவுகளைப் பகிர்ந்து கொண்டோம். அமைப்பை நடத்த நிதி வேண்டும் என்பதற்காக நாங்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை. அரிதாக யாராவது நிதி அளித்தாலோ அல்லது நிகழ்ச்சியின் சில பகுதிகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டாலோ அதை மறுப்பதில்லை. எனது தொழிலான விவசாயத்தின் மூலம் வரும் நிதியைக் கொண்டுதான் இந்த அமைப்பை நடத்தி வருகிறேன்.
##Caption##கே: நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று இலக்கிய வீதி விழாவை நடத்தியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: இலக்கியவீதியின் முதலாண்டு முடிவதற்குள் ஒரு விழாவை டெல்லியில் நடத்தத் தீர்மானித்தோம். எழுத்தாள நண்பர் ஆதவன் மூலம் ஏற்பாடுகள் தொடங்கின. நானும் கவிஞர் தாராபாரதியும் ஒரு பயணம் ஏற்பாடு செய்து எல்லா நண்பர்களையும் திரட்டிக் கொண்டு பேருந்திலேயே டெல்லிக்குக் கிளம்பினோம். முன்னதாகவே அப்போது டெல்லியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆதவன் மூலமாக இந்திரா பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், க.நா.சு., ஆகியோரை விழாவில் பங்குபெற அழைத்து விட்டிருந்தோம். நடுவழியில் ராஜஸ்தான் அருகே பேருந்து பழுதுபட்டு நின்று விட்டது. பழுது பார்க்கவோ, மாற்றுப் பேருந்துக்கோ வழி கிடையாது. தொலைத் தொடர்புச் சாதனங்களும் இன்று போல இல்லை. நானும், தாராபாரதியும் வேறு பேருந்துகளில் பயணித்துச் சென்றுவிட முடிவெடுத்தோம். எங்களால் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியவில்லை.
விழா அரங்கிற்கு டெல்லி எழுத்தாளர்களும், சுவைஞர்களும் வந்திருந்து வெகுநேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டதாக அறிந்தோம். வருத்தமாக இருந்தது. பின்னர் நானே ஒவ்வொரு எழுத்தாளரின் வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, நடந்தவற்றை விவரித்தேன். வேறு ஒரு நாளில் மிகச் சிறப்பாக அந்த விழாவை நடத்தினோம். இது ஒரு பெருமிதமான அனுபவம்.
கே: இந்தியாவிற்கு வெளியேயும் உங்கள் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, அல்லவா?
ப: டெல்லி, அந்தமானின் முக்கியத் தீவுகள் எனத் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் இலக்கிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறோம்.
கே: இலக்கிய வீதிக்காகப் பழகிய சான்றோர்களுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து...
ப: தற்காலத்தில் எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, சுவைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டம் நடத்துவது என்பது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. ஆனால் அக்காலத்தில், சென்னைக்கு வெகு தொலைவில் இருக்கும் மதுராந்தகத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும்போது கூட தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் படைப்பாளிகள் சிரமம் பார்க்காமல் வந்து, தங்கி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மாலன், வலம்புரிஜான், பாலகுமாரன், அகிலன், இந்துமதி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், வைரமுத்து, தமிழன்பன், அப்துல் ரகுமான், சிலம்பொலி செல்லப்பன், அவ்வை நடராசன், வா.செ. குழந்தைசாமி எனப் பலரும் ஆர்வத்துடன் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
கே: வானொலி, தொலைக்காட்சியில் நடத்திய நிகழ்ச்சிகள் பற்றி?
ப: வானொலி, தொலைக்காட்சியில் எனது சிறுகதைகள் நிறைய இடம் பெற்றுள்ளன. நாடகங்களும் ஒலி-ஒளிபரப்பாகி இருக்கின்றன. பல சான்றோர்களை நேர்முகம் கண்டிருக்கிறேன். குறிப்பாக பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவின்போது அவர் மகன், மகள், மனைவி, நண்பர் ஆகியோரை நேர்முகம் கண்டது மறக்க முடியாத அனுபவம். பல்வேறு இலக்கியப் பணிகளை அரசு நிறுவனங்களுடன் இணைந்து செய்திருக்கிறோம்.
கே: பல கவிஞர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களை நீங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: இலக்கியவீதியின் முதன்மைக் கவிஞர் என்றால், அது 'தாராபாரதி' என அனைவரும் சொல்வார்கள் (பார்க்க: இந்த இதழின் கவிதைப் பந்தல்). அவர், மிகச் சிறந்த கவிஞராக, லட்சியவாதியாக, கொள்கை வீரராக, நல்ல ஆசிரியராக விளங்கியவர். தொடர்ந்து மலர்மகன், பல்லவன், சொல்கேளான், சஞ்சீவி மோகன், கவிமுகில், இரண்டாம் நக்கீரன், வேடந்தாங்கல் சுகுணன், அனலேந்தி, தளவை. இளங்குமரன், கி.வெங்கடேச ரவி, ஒழவெட்டி பாரதிப்ரியன், ராதிகா, வித்யாசாகர், மாசி ஆனந்த் எனப் பல கவிஞர்களைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் இலக்கிய வீதியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர்கள். இவர்களின் படைப்புகள் பல பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் நூல், பாடநூலாகவே அங்கீகாரம் பெற்றுள்ளது.
எழுத்தாளர்கள் என்றால் எஸ். ஷங்கர நாராயணன், ஐஷ்வர்யன், சரோஜா மூர்த்தி, தேனீ. சீருடையான், கார்த்திகா ராஜ்குமார், எஸ்.குமார், எஸ். குமாரகிருஷ்ணன், மது. ராஜேந்திரன், சூர்யகாந்தன், கல்கிதாசன், அவினாசி முருகேசன், வைகைச்செல்வி, மழபாடி ராஜாராம், ஆனந்தம் கிருஷ்ண மூர்த்தி எனப் பலரைச் சொல்லலாம். புஷ்பா பாலசந்தர் என்ற பெயரில் எழுதியவர்தான் புஷ்பா கந்தசாமி. இவர் இயக்குநர் பால சந்தரின் மகள். க்ருஷாங்கினி, பாவண்ணன், கே.ஜி. ஜவஹர், சுப்ரபாரதி மணியன், கோதா பார்த்தசாரதி, பூதலூர் முத்து, நந்தலாலா, ராசி. அழகப்பன், சுப்ரஜா, பட்டுகோட்டை ராஜா, சுபா (சுரேஷ்-பாலா) என பிரபலமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் இலக்கியவீதியின் கதை, கவிதைப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.
கே: இலக்கியவீதியின் பிற சாதனைகள் என்னென்ன?
ப: இதுவரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்கள் எனச் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்டோரை இலக்கியவீதி அடையாளம் காட்டியிருக்கிறது. இலக்கியவீதியின் சிறுகதை நூல்கள் முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தன. அண்மையில் நாங்கள் வெளியிட்டுள்ள ஜே.எம். சாலியின் சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டு சென்னை புதுக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
##Caption##கொல்லங்குடி கருப்பாயி யாரென்றே தமிழகம் அறியாத நிலையில், அவரை அழைத்து வந்து 'நாட்டுப்புறப் பாட்டுக் குயில்' என்ற பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தோம். பத்திரிகைகள் அவரைப் பற்றி எழுத ஆரம்பித்தன. பல திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. மற்றொருவர் முத்துக்கூத்தன். 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை', 'சம்மதமா..' போன்ற பாடல்களை எழுதியவர். கொள்கைப் பிடிப்பான மனிதர். பொம்மலாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டு, அல்லும் பகலும் அந்தக் கலை வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவர் மூலம் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 'கவிஞனின் காதல்' நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். தொடர்ந்து ஆதரித்தோம்.
மற்றொரு முக்கியமான மனிதர் திருக்குறள் இராமையா. கோவில்பட்டியில் வாழ்ந்த கண்பார்வையற்ற இராமையாப் பிள்ளை, சிறப்பான, ஆனால் சமுதாயத்தின் கவனம் பெறாத கவனகர் (அவதானி). ஒரு வானொலி நிகழ்ச்சியின்போது அவரைப்பற்றி அறிந்து, இலக்கியவீதியில் நிகழ்ச்சி நடத்துமாறு அழைத்தேன். மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சி நடந்தது. அடுத்தடுத்து, அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆனூர் ஜெகதீசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடந்தன. எனவே அது அரசின் கவனத்திற்குச் சென்றது. பார்வையற்ற ஒருவர் திருக்குறளில் இந்த அளவுக்குப் புலமை பெற்றவராக, சிறந்த கவனகராக விளங்குவதைக் கண்ட அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், திருக்குறள் இராமையாவை அரசவைக் கவிஞராக்கினார். இன்று அவருடைய மகன் கனகசுப்புரத்தினம் பதினாறு கவனகராகப் புகழ்பெற்றிருக்கிறார்.
கே: நீங்களே ஒரு எழுத்தாளர்தான். உங்கள் நூல்களைக் குறித்துச் சொல்லுங்கள்.
ப: ஆரம்ப காலத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். சில சிறுகதைகள், நாவல்களுக்கு பரிசுகளும் கிட்டியுள்ளன. இலக்கியவீதியைத் தொடங்கிய பின்னர் மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணம் மேலோங்கியது. ஆகவே எழுதுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன். இதுவரை இலக்கிய, வணிக இதழ்களில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். 17 குறுநாவல்களும், 15 நாவல்களும் வெளி வந்துள்ளன. இரண்டு பயண இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறேன். பறவையியல் பற்றிய எனது 'வேடந்தாங்கல்' என்னும் நூல் குறிப்பிடத்தக்க ஒன்று. மற்றொன்று சோமலெவின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழுதிய 'உத்திரமேரூர் உலா'. ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களிடம் பழகி இந்த நூலை எழுதினேன். உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் உட்பட, பல்வேறு அரிய வரலாற்றுச் செய்திகளை இந்நூலின் மூலம் வெளிக்கொணர முடிந்தது.
கே: உங்களது பிற பணிகள் யாவை?
ப: கடந்த மூன்று ஆண்டுகளாகச் சென்னைக் கம்பன்கழகச் செயலாளராக இருக்கிறேன். நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களால் நிறுவப்பட்ட இக்கழகத்தில் தற்போது அருளாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார். அதுபோக தமிழ்ச்சான்றோர் பேரவையில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுடன் இணைந்து மொழிக்கான விழிப்புணர்ச்சி ஊட்டும் பல பணிகளைச் செய்திருக்கிறேன்.
கே: இலக்கியவீதியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: மீண்டும் சிறுகதைப் போட்டி நடத்தி புதிய எழுத்தாளர்களைக் கண்டுணர்ந்து ஊக்குவிக்க இருக்கிறோம். புதிய இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வளரும் வகையில் பல போட்டிகள் நடத்த இருக்கிறோம். போட்டிகளில் உலகளாவிய தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். படைப்புகள் அனுப்பலாம். சமுதாய அக்கறையுள்ள சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கதை-கவிதைப்போட்டி என பல போட்டிகளை நடத்த எண்ணியிருக்கிறோம். கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் நினைவாக அவர் வாழ்ந்த ஊரில் ஒரு நூலகம், பயிற்றகம், உருவச்சிலை போன்றவற்றை அமைக்க இருக்கிறோம்.
கே: கவிஞர்கள் - அப்போதும், இப்போதும்; ஒப்பிடுங்கள்.
ப: முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை, மாறிவிட்டிருக்கிறது. தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் காரணமாக இளைஞர்களிடையே கவிதை ஆர்வம் குறைந்திருக்கிறது. இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்களில் பலரும், அத்துறை பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆளுமைத் திறன் இருப்பதில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு திரைத்துறைக்குச் செல்லலாமா, அரசியல் போன்ற வேறு துறைகளில் ஈடுபடலாமா என்ற நோக்கங்களுடன் தான் வருகின்றார்களே தவிர, தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும், இலக்கிய, சமூக வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. கவியரங்குகளில் கை தட்டல் வாங்க வேண்டும், நகைச்சுவையாகப் பேசிப் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் வருகின்றார்கள். உள்ளார்ந்த சமூக சிந்தனை, அக்கறை, ஈடுபாடு ஆகியவை இல்லை. வேகம், விழிப்புணர்ச்சி தற்போது அறவே இல்லை. இந்த நிலை மாறவேண்டும்.
கே: தற்போது பத்திரிகைகள் சிறுகதை, தொடர்கதைகளை வெளியிடுவதில்லை. வாசகர்களிடையே வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. உண்மையா?
ப: வாசகர்களிடையே சிறுகதைகளுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது. நல்ல சிறுகதைகளை வெளியிட்டால் நிச்சயம் வாசகர்கள் வரவேற்கவே செய்வார்கள். அதற்கு மாறாக, ஊடகங்கள் அனைத்தும் மலினமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசகர்களை திசை திருப்பி விடுகின்றன. படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வாசகன், தற்போது பத்திரிகை என்ன கொடுக்கிறதோ அதை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாசக ரசனையை மழுங்கடித்து விட்டது முழுக்க முழுக்க ஊடகங்களின் குற்றமே தவிர, அதற்கு வாசகரைக் குறை சொல்ல முடியாது. சொல்லப்போனால், எல்லாத் தளங்களிலும் மக்களுக்குக் கெடுதி செய்யும் சூழல்தான் இருக்கிறது. மூளையை மழுங்கடிக்கும், போதையுணர்வை உண்டாக்கக் கூடிய செயல்கள்தான் ஊடக தளத்தில் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மக்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய, அவர்களது எண்ணங்களை மேம்பாடு அடையச் செய்யும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் நல்ல இலக்கியத்தின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலைதான் மேலோங்குகிறது. சமுதாயப் பொறுப்புள்ளவர்கள் ஒருங்கிணைந்து சிந்திக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
கே: விருதுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: உண்மையான கலைஞன் விருதுகள் பற்றிக் கவலை கொள்வதில்லை. மக்களிடத்தில் அவன் பெற்றிருக்கும் நற்பெயரே அவனுக்கு ஒரு விருதுதான். விருதுகளைப் பொறுத்தவரை தற்போது பரந்த கண்ணோட்டம் இல்லாத நிலையே கண்கூடு. எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு உள்ளது. கட்சி சார்ந்தவர்களுக்குத்தான் பெரும்பாலான விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஒன்றிரண்டு விருதுகள் கண் துடைப்புக்காக உரியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். மற்றபடி நிலைமை ஆரோக்கியமானதாக இல்லை என்பதே உண்மை. குறிப்பாக, கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவது கேலிக் கூத்தாகவே இருக்கிறது. இந்த நிலைமை மாறவேண்டும். அரசியல் சார்பு இல்லாமல் தகுதியானவர்களைக் கண்டறிந்து விருதுகள் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த விருதிற்கும், அதனைப் பெறும் கலைஞர்களுக்கும் சமூகத்தில் மதிப்பு ஏற்படும். அரசின் மீதான விமர்சனங்களும் தவிர்க்கப்படும்.
கே: தற்போதைய பதிப்பகச் சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: மக்கள்தொகை வளர்ந்ததால் வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிமாகி விட்டதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் நல்ல புத்தகங்களை அவர்கள் வாசிக்கின்றார்களா என்பது ஆய்வுக்குரிய விஷயம். தன்னம்பிக்கை நூல்கள், பொருளாதார நூல்கள், ஆன்மீக நூல்கள் போன்றவற்றின் விற்பனை பெருகினால், பரவாயில்லை, வரவேற்கலாம். ஆனால் வாஸ்து, ஜோதிடம், எண்கணிதம், சமையல் குறிப்புகள் போன்ற சராசரி நூல்களின் விற்பனையால் இலக்கியமோ மொழியோ வளரப்போவதில்லை.
கே: இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
ப: நல்ல நூல்களைப் படியுங்கள். பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், நா.பா., அகிலன், தி. ஜானகிராமன்., மு.வ., சுந்தரராமசாமி, கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி என முன்னோடி எழுத்தாளர்களின், கவிஞர்களின் நூல்களைப் படியுங்கள். ஆழமாகச் சிந்தியுங்கள். ஒரு நல்ல வாசகன் தான் ஒரு நல்ல எழுத்தாளனாக முடியும்.
கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
சிங்கப்பூரில் வசிக்கும் என்னுடைய நண்பர் ஜே.எம்.சாலி தென்றல் குறித்துச் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். அத்தகைய இதழில் இலக்கியவீதி பற்றிய செய்தி வெளிவருவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தென்றல் இதழைப் பார்க்கும்போது அமெரிக்காவில் வசிக்கும் அயலகத் தமிழர்களின் ரசனையை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள இதழ்களைப் போல மலினமான விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நல்ல பல விஷயங்களுக்கு ஆதரவுதரும் ஆரோக்கியமான இதழாக தென்றல் இருக்கிறது. இப்படியான செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆசிரியர் குழுவினரின் உழைப்பும், பதிப்பாளரின் ஒத்துழைப்பும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்களைப் பார்த்தாவது இங்குள்ளவர்கள் திருந்த வேண்டும்.
நல்ல சிறுகதைகளை, எட்டிலிருந்து பன்னிரண்டு பக்கங்களுக்கு மிகாமல் நீங்கள் இலக்கியவீதிக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசளிக்கப்படுவதுடன், அவை புத்தகமாகவும் வெளியிடப்படும். அயலகத்தில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து சிறந்த சிறுகதை, கவிதைகளை இலக்கியவீதி ஆர்வமுடன் வரவேற்கிறது.
அரவிந்த் சுவாமிநாதன் |