1977ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அந்த இளமங்கை பரதநாட்டியம் ஆடி முடித்ததுதான் தாமதம், பல அமெரிக்க இந்தியப் பெற்றோர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்களது வேண்டுகோள் 'எங்கள் குழந்தைகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுங்கள்' என்பது தான். அந்த நாட்டிய நங்கை, தற்போது சான்பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியின் பிரபல குருவான விஷால் ரமணி. 31 ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவரிடம் நடனம் கற்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி விட்டது.
அதிகாரபூர்வமாக ஸ்ரீக்ருபா நடனக் குழுமத்தை விஷால் ரமணி தொடங்கியது 1992ல்தான். அதனாலென்ன, அவரே ஒரு நிறுவனமாக இருந்து கற்றுக்கொடுத்துதானே வந்திருக்கிறார்! தற்போது நடந்துவரும் நிகழ்கலைகள் தொடர் அரங்கேற்றங்கள் கோடைப்பருவத்தோடு முடியும்போது நூறையும் தாண்டி, 103ஐத் தொட்டுவிடும். ஸ்ரீக்ருபாவுக்கும் விஷால் ரமணிக்கும் இது முக்கியமான மைல்கல். சான்டா கிளாராவிலும் மோர்கன் ஹில்லிலுமாகச் சேர்ந்து அவரிடம் தற்போது பயிற்சிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல்.
##Caption##பரதநாட்டியத்துக்கான ஸ்ரீக்ருபாவின் நிகழ்கலைகள் தொடர் 1983ஆம் ஆண்டின் கோடைப்பருவத்தில் தொடங்கியது. முதலில் அரங்கேறியவர் சசிகலா பட். கூர்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர் முன்னர் நடனமாட இந்தத் தொடர் வழி செய்தது. அவர்கள் தொழில்முறை நடனக்காரர்களாகப் பரிணமிக்க இது உதவியது. ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களோடு உள்ளூர்க் கலைஞர்களை இணைத்து நிகழ்ச்சிகளை வழங்குவது விஷாலின் வழக்கமாக இருந்துவருகிறது. டெல்லியில் லீலா சாம்ஸனுக்குப் பின்பாட்டுப் பாடும் வசந்தி கிருஷ்ணா ராவ் அவர்களை விரிகுடாப் பகுதிக்கு அறிமுகப்படுத்தியவர் விஷால்தான். மதுரை ஆர்.முரளிதரன், கே.எஸ்.பாலகிருஷ்ணன் (நட்டுவனார்கள்), பத்மா சேஷாத்ரி சகோதரிகள், கோமதிநாயகம், முரளி பார்த்தசாரதி (பாடகர்கள்), சீதாராம் ஷர்மா, என்.வீரமணி (வயலின்), எம்.தனம்ஜயன் (மிருதங்கம்) போன்ற கலைஞர்கள் இந்தத் தொடரின் அங்கமாக இருந்துவருகிறார்கள்.
மும்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலாமந்திரின் மாணவியான விஷால் ரமணி அரங்கேறியபோது அவருக்கு வயது ஏழுதான். '2400 வருடப் பழமையானதும் இந்து மதத்தில் வேர்கொண்டதுமான இந்தக் கலையைப் பத்தாயிரம் மைல்களுக்கும் அப்பால் பயிற்றுவிக்கும்போது நான் பாரதத்தின் கலாசார தூதுவராகவே உணர்கிறேன்' என்கிறார் விஷால் ரமணி.
விஷால் ரமணியும் ஸ்ரீக்ருபா நடனக் குழுமமும் இன்னும் பல மைல்கல்களைத் தாண்ட 'தென்றல்' வாழ்த்துகிறது. |