பூரம் சத்தியமூர்த்தி
தமிழ்ச் சிறுகதைக் களத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் வேற்றுமொழி இலக்கியங்களுக்கிணையாகப் பல பரிசோதனைகளைச் செய்து, அதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, ஆர்.வி. என்ற வரிசையில் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு சிறுகதை இலக்கியத்தை வளர்த்தவர்கள் பலர். அவர்களுள் முக்கியமானவர் பூரம் என்றழைக்கப்படும் பூரம் எஸ். சத்தியமூர்த்தி.

'இலக்கியங்கள் என்பவை சாதாரண பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை சமூகத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த சாதனங்கள்' என்று கூறும் சத்தியமூர்த்தி, 'இந்தச் சொற்சிற்பத்தை எந்த வடிவத்திலும், எந்தக் கோணத்திலும் நறுக்குத் தெரித்தாற் போல் வடிக்க முடியும். அதுவே எனது கொள்கை' என்றும் கூறுகிறார்.

1937ஆம் வருடம் ஏப்ரல் 21 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சத்தியமூர்த்தி, புதுகை மாமன்னர் கல்லூரியில் பயின்றார். படிக்கும் காலத்திலேயே புதுகையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டிங் டாங்' சிறுவர் இதழில் கதைகள் எழுதத் தொடங்கினார். அவரது நண்பரும் குழந்தைகள் பத்திரிகையின் ஆசிரியருமான பரசுராம் வெங்கட்ராமன் (வடமலையழகன்) இவரை ஊக்குவிக்கவே, தொடர்ந்து பல கதைகளை எழுதத் தொடங்கினார். 'கண்ணன்' குழந்தைகள் பத்திரிகையில் பல நாடகங்களும், சிறுகதைகளும் எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றார். அவரது சிறுகதைகள் சிறுவர் இதழ்களிலும், பிரபல இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளியாகின.

##Caption##பின்னர் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். கணிதமேதை ராமானுஜத்துக்குப் பிறகு அவர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்து பணியாற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 'கலைமகள்','கல்கி', 'சுதேசமித்திரன்' போன்ற பத்திரிகைளில் பெரியவர்களுக்கான கதைகளும், ‘கோகுலம்' 'ரத்னபாலா' 'ஆதவன்' ‘சின்ன கண்ணன்' போன்ற பத்திரிகைகளில் குழந்தைகளுக்கான கதைகளும் எழுத ஆரம்பித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் சத்தியமூர்த்தியின் சிறுகதைகள் கி.வா.ஜ., அழ.வள்ளியப்பா, கல்கி போன்ற முன்னோடிகளால் பாராட்டப் பெற்றுள்ளன. கலைமகள், கல்கி போன்ற பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறார். பத்திரிகைக்காகவும் வானொலிக்காகவும் நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். இலக்கிய ஆர்வம் மட்டுமில்லாது வேதம், உபநிடதம் போன்றவற்றிலும் அளவற்ற மேதைமை கொண்ட சத்தியமூர்த்தி, அவற்றைப் பற்றி விரிவாகச் சொற்பொழிவு ஆற்றுமளவுக்கு விஷய ஞானம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை துறைமுகத்தின் தலைமை மேலாளராகப் (office superintendent) பதவி உயர்வு பெற்ற இவர், 1992-ல் திடீரென ஏற்பட்ட கண்பார்வைக் குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். பதவி ஓய்வுக்குப் பிற்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிக்கும் பணியை மேற்கொண்டார். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் வேதம் பயின்றிருக்கிறார்கள். அவர்கள் இன்று உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பதே இவரது பெருமைக்குச் சான்று. இவரது இந்தப் பணிக்காக 'வித்யா வேத ரத்னா' என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

'ஒரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ சொல்லப்பட வேண்டிய ஒரு புதிய கருத்தினை, எப்படிப்பட்ட கதாபாத்திரங்களை - எப்படிப் படைத்தால், அந்தக் கருத்து வாசகன் மனதில் ஆழமாகப் பதியவைக்க முடியும் என்று பார்த்து, சொற்களாலே சிற்பம் வடிப்பதுதான் சிறுகதைக் கலை' என்று கூறும் பூரம் சத்தியமூர்த்தி, 'தற்காலத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைக்கு இடமே இல்லை என்னும் நிலை மிகவும் வருந்தத் தக்கது' என்று கவலை தெரிவிக்கிறார்.

சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் வரவேற்பு முற்றிலுமாக இல்லை என்பதாகப் பத்திரிகைகள் கூறுகின்ற இக்காலத்தில், வாசகர்களிடையே சிறுகதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், சிறுகதை பற்றிய புதிய பார்வைக்கும், விமர்சன வளர்ச்சிக்கும் வித்திடுவதற்காக 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கி, சிறுகதை ஆர்வலர்களையும், எழுத்தாளர்களையும் வாரந்தோறும் வரவழைத்து, கதைகளைப் படிக்கச் சொல்லி, திறனாய்வு செய்துவருகிறார்.

'முதலில் பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல சிறுகதைகளைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினால் அது அடுத்த தலைமுறையிலாவது சிறுகதை வளர்ச்சிக்கு வழி வகுக்கும்' என்று கூறும் சத்தியமூர்த்தி, ‘நடைமுறை மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்' என்கிறார் வருத்தத்துடன்.

பணம், புகழ், போட்டி, பொறாமை என்பதே முக்கியமாகப் போய் விட்ட இந்த இயந்திர யுகத்தில், முற்றிலும் கண்பார்வை இழந்த இந்த 72 வயது இளைஞர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு ஆற்றிவரும் தொண்டு போற்றத்தக்கது.

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com