லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம்
ஏப்ரல் 5, 2008 அன்று லலித கான வித்யாலயா 'மும்மூர்த்திகள் தினம்' என்ற முழுநாள் கர்நாடக இசை நிகழ்ச்சியை சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சேர்ந்திசை, குறுங்கச்சேரி, தியாகப் பிரம்மத்தின் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் ஆகியவை இடம்பெற்றன. தவிர, பல்லவி ஸ்ரீராம் நவக்கிரஹ கிருதிகள் பாடினார்.

பஞ்சரத்னக் கீர்த்தனைகளுக்கு ஏ.மஹாதேவனும் (மிருதங்கம்) நாகராஜ் மண்ட்யாவும் (வயலின்) பக்கம் வாசித்தனர். முத்துசுவாமி தீட்சிதரின் 'ராஜகோபாலம் பஜேஹம்' (மோஹனம்), 'சுவாமிநாத பரிபாலய' (நாட்டை); தியாகராஜரின் 'விதமுசேய' (கரஹரப்ரியா), 'சரஸ சாம தான' (காபி நாராயணி); சியாமா சாஸ்திரிகளின் 'ஹிமாத்ரி சுதே' (கல்யாணி) ஆகியவற்றைச் சில முதுநிலை மாணவர்கள் தனித்தனியே பாடினர். இவர்களுக்கு பாலாஜி மஹாதேவன் மிருதங்கம் வாசித்தார்.

மூன்று வயதிலிருந்தே விரிகுடாப் பகுதி கர்நாடக ரசிகர்களைத் தனது இசையால் மகிழ்வித்து வந்துள்ள சித்தார்த் ஸ்ரீராம் பல தியாகராஜ கிருதிகளைப் பாடி ஒரு குறுங்கச்சேரியே செய்துவிட்டார். (இப்போது இவர் கல்லூரிப் படிப்புக்காகக் கீழைக் கடற்கரைக்குச் செல்லும் இளைஞர்.) இவருடன் நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), ஏ. மஹாதேவன் (மோர்சிங்) பக்கம் வாசித்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களில் சிலர் எட்டு வயதே ஆனவர்கள், தெளிவாக அழகாகத் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதக் கீர்த்தனைகளைப் பாடியது லலித கான வித்யாலயாவின் இயக்குனரான லதா ஸ்ரீராம் அவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும் சான்று.

நீலகண்டன்

© TamilOnline.com