குழம்பு வகைகள் பாகம் 2
தினம்தினம் என்ன குழம்பு வைப்பது என்று குழம்ப வேண்டாம். இதோ சில குழம்பு வகைகள். (சு)வைத்துப் பாருங்கள்.

பல்வகை பருப்பு குழம்பு

தேவையான பொருட்கள்

புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
அரிசி - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 6
நல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

நான்கு வகைப் பருப்புகளையும் வேகவிட்டு மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிளகு, மிளகாய் வற்றல், அரிசி, வெந்தயம் இவற்றைத் தனித்தனியே வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து பெருங்காயம், தேங்காய், கறிவேப்பிலை போட்டு வதக்கிப் புளியை ஊற்றி உப்பும் போட்டு நன்கு

கொதிக்க விடவும்.

பிறகு பொடியை போட்டு, சுருண்டு கொதிக்கும் போது மசித்து வைத்துள்ள பருப்பையும் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.

இந்தக் குழம்பில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய், ஒரு தேக்கரண்டி விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com