தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை
சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்தான் முதலாளி. மற்ற எல்லாரும் அவரிடம் சம்பளம் வாங்கும் தொழிலாளிகள் தான். ஆனால் சினிமாத் தொழில் ஒன்றில்தான் தொழிலாளியிடம் முதலாளி கை கட்டி நிற்க வேண்டி வருகிறது.
எம்.என். நம்பியார்

*****


வெங்கட்சாமிநாதன் வில்லிசை பற்றி ஒரு புஸ்தகம் எழுதி இருக்கிறார். பாவைக் கூத்தைப் பற்றி ஒரு பிரமாதமான புஸ்தகத்தை டெல்லியில் இருந்துகொண்டு எழுதி இருக்கிறார். யார் செய்ய வேண்டிய வேலையை யார் செய்திருக்கிறார் பாருங்கள்? இங்குள்ளவர்கள் கலையைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கிடையாது.
சோ. தருமன், எழுத்தாளர்

*****


ஏன் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின், தலித் தலைவர் திருமாவளவன் எல்லாரும் முதுகுவலி, கழுத்து வலிக்கே தனியார் மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்? அரசு மருத்துவமனையை இவர்களே பயன்படுத்தத் தயங்கினால், எப்படி மக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை வரும்?
ஞாநி, பத்திரிகையாளர்

*****


பிரதமருடனும், சோனியாவுடனும் தொலைபேசியில் பேசுவதாகப் பிரசாரம் செய்யும் முதல்வர் கருணாநிதி விலைவாசி உயர்வு குறித்து இதுவரை ஏன் பேசவில்லை?
விஜயகாந்த்

*****


241 நாவல்களும், உடையார் என்கிற மகா உன்னதப் படைப்பும் எனக்கு மிக நிறைவைக் கொடுத்திருக்கின்றன. யாரைப் பார்த்தும், யாரைக் குறித்தும் பொறாமைப்பட வேண்டாத ஒரு வாழ்க்கை எனக்கு குரு அருளால் கிடைத்திருக்கிறது. இது மிகப் பெரிய சந்தோஷம். லைஃப் இஸ் ரிலேஷன்ஷிப். தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. வேண்டாதவர்களை விட்டு விலகி வந்துவிடுகிறேன். நல்ல நண்பர்களோடு இனிமையாக வாழ்கிறேன்.
பாலகுமாரன்

*****


விலைவாசி உயர்வுக்குக் கச்சா எண்ணை விலை உயர்வே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. 1 லிட்டர் பெட்ரோலுக்கு உற்பத்திச் செலவு ரூ. 22 தான். மீதி எல்லாமே வரியாகத்தான் வசூலிக்கப்படுகிறது. வரியைக் குறைத்தாலே பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்
சுப்ரமணியம் சுவாமி

*****


அரசுப் பேருந்துகளில் காலத்தால் அழியாத திருக்குறள் இடம் பெற்றிருந்தது. தற்போது அவற்றை அழித்துவிட்டு தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எழுதியவற்றையும், பேசியவற்றையும் பொன்மொழி என்ற பெயரில் எழுதி வருகிறார்கள். இதை எதிர்த்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்.
ஜெ. ஜெயலலிதா

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com