எண்ணெயா, மின்சாரமா - எது நமது காரை இயக்கும்
ஹைப்ரிட் கார் விற்பனை கடந்த நான்கு மாதங்களில் 25% உயர்ந்துள்ளது. நகரப் போக்குவரத்துக் கழகங்கள் மின்கலப் பேருந்துகளை வேகமாக சேவைக்கு அமர்த்தி வருகின்றன. இவற்றில் முதலிடத்தில் இருப்பது சான்டா பார்பரா கழகம். இம்மாதிரியான செய்திகள் எகிறிவரும் எண்ணேய் விலைக்கு பயந்த மனங்களுக்கு இதமாக இருக்கும். இருந்தாலும் நல்ல நடப்பை சுலபமாக நம்ப மறுக்கும் எனக்கு, இது, நூற்றாண்டுச் சுழற்சியோ என்றுதான் முதலில் தோன்றியது.

மின்கல ஊர்திகள் போக்குவரத்துக்குப் புதிதல்ல. 1891லேயே வில்லியம் மோரிஸன் என்பவர் மின்னூர்தியைக் கண்டுபிடித்தார். இதிலும் முத்திரை பதித்தார் ஆல்வா எடிஸன். இவரது முயற்சியால் அல்கலைன் மின்கலம் முன்னேற்றம் அடைந்தது.இருபதாம் நூற்றாண்டின் முதல் 5 வருடங்களுக்கு நியூயார்க், லண்டன், போன்ற நகரங்களில் பேரளவில் மின்னூர்திகள் உலா வந்தன. நுட்பத்திலும் பராமரித்தலிலும் மின்கல வண்டிகளே முன்நின்றன.

##Caption##லண்டன் பேருந்து நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் மின்கல வண்டிப் போக்குவரத்துக்கு மக்கள் அளித்த ஆதரவைக் குறுக்கு வழியில் பணம் ஈட்டப் பயன்படுத்த முயன்றது. 300 வண்டிகளை அமர்த்த 300,000 பவுண்டு நிதி வேண்டுமென பங்குகளைச் சந்தையில் விற்றது. முதல் நாளிலேயே 120,000 பவுண்டு கிட்டியது. முழு நிதியீட்டு முன் வண்டவாளம் தண்டவாளம், இல்லை தார் ரோட்டில், ஏறியது. வண்டி வாங்குவது, பேடன்ட் உரிமம் போன்ற நடவடிக்கைகளில் முறைகேடாகப் பணத்தை நிறுவன அமைப்பாளர்கள் விழுங்கியுள்ளனர் என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டனர். தொடர்ந்த தொல்லைகளால் திவாலானது இந்த நிறுவனம். இந்த ஊழல் மட்டும் நடந்திருக்காவிட்டால் மின்கல மற்றும் மின்சார ஊர்திகள் பெட்ரோல், டீசல் ஊர்திகளுக்கு மாற்றாக இருந்திருக்கும் என விவாதிப்பவர்களும் உண்டு. 1900ல் ஒரு பெட்ரோல் வண்டிக்கு இரண்டு மின்சார வண்டிகள் இருந்தன என்பதை கருத்தில் கொண்டால் நாமெல்லாம் இப்போது கேஸ் நிலையத்தில் மின்கம்பியை வண்டியில் சொருகிவிட்டுக் காத்திருப்போம் என நினைக்கத் தோன்றுகிறது.

சுதாரித்த எஞ்சின் தொழில்நுட்ப முன்னேற்றம், பரவலான எண்ணெய்க் கண்டுபிடிப்பு, ஃபோர்ட் போன்றவர்களின் தொழில் நிர்வாகத்திறன் போன்றவை பெட்ரோலியப் போக்குவரத்துக்குப் பெரும் சாதகங்களாக அமைந்தன. மின்கல ஊர்தித் தொழிலில் எடிசனின் சிஷ்யராக ஃபோர்ட் தேர்ந்து வந்தார் என்பது சுவையான செய்தியாகும்.

ஆனால் இப்போதோ குறைந்து வரும் எண்ணெய் உற்பத்தி, எகிறிவரும் பெட்ரோல் விலை ஆகியன மாற்றுகளைத் தேடும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளன. சிலிகான் வேலி முன்னோடிகள் முனைப்பாக 'பச்சைக் கார்' சார்ந்த தொழில்நுட்பங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எழுபதுகளில் நடந்த எண்ணெய் விலையேற்றம் அமெரிக்காவில் எண்ணெய் சார்பை மின்னுற்பத்தியிலிருந்து நீக்க ஊக்குவித்தது. இப்போது நடக்கும் அதிர்வு, போக்குவரத்திலிருந்தும் எண்ணெய் சார்பை நீக்க ஊக்குவிக்கும் என 'எகனா மிஸ்ட்' செய்தித்தாள் அனுமானிக்கிறது.

வெற்றி பெற்ற நுட்பமெல்லாம் செம்மையானதில்லை...
செம்மையான நுட்பமெல்லாம் வெற்றிகாண்பதில்லை...
என்று பாடத்தோன்றுகிறது.

முரளி பாரதி

© TamilOnline.com